உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்
(அதிகாரம்:தீ நட்பு
குறள் எண்:813)
பொழிப்பு (மு வரதராசன்): கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலைமகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.
|
மணக்குடவர் உரை:
நட்டோர்க்கும் தமக்கும் வரும் நன்மை தீமைகளை யொக்கப் பார்த்துத் தமக்கு நன்மையாகுமதனைச் சீர்தூக்கும் நட்டோரும், பெற்றது கொள்ளும் கணிகையரும், கள்வருமென்று கூறப்பட்டவர் தம்முள் ஒப்பார்.
பரிமேலழகர் உரை:
உறுவது சீர் தூக்கும் நட்பும் - நட்பு அளவு பாராது அதனால் வரும் பயனளவு பார்க்கும் நட்டாரும்; பெறுவது கொள்வாரும் - கொடுப்பாரைக் கொள்ளாது விலையைக் கொள்ளும் பொதுமகளிரும்; கள்வரும் - பிறர்கேடு நோக்காது அவர் சோர்வு நோக்கும் கள்வரும்; நேர் - தம்முள் ஒப்பர்.
(நட்பு - ஆகுபெயர். பொருளையே குறித்து வஞ்சித்து ஒழுகலின் கணிகையர் கள்வர் என்றிவரோடு ஒப்பர் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தமககு உறுவது பார்ப்பார் நட்பின் தீமை கூறப்பட்டது.)
சி இலக்குவனார் உரை:
நட்பினால் வரும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அடையக் கூடியதனை வஞ்சித்து அடைகின்றவர்களும், திருடர்களும் தம்முள் ஒப்பர்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்.
பதவுரை: உறுவது-அடைவது, கிடைக்கப்போவது; சீர் தூக்கும்-அளந்து பார்க்கும்; நட்பும்-கேண்மையும்; பெறுவது கொள்வாரும்- கிடைப்பதை எடுத்துக்கொள்வாரும், தாம் பெறும் பொருளின்மீதே கண்ணாக இருப்பவரும்; கள்வரும்-திருடரும்; நேர்-ஒப்பர்.
|
உறுவது சீர்தூக்கும் நட்பும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நட்டோர்க்கும் தமக்கும் வரும் நன்மை தீமைகளை யொக்கப் பார்த்துத் தமக்கு நன்மையாகுமதனைச் சீர்தூக்கும் நட்டோரும்;
பரிப்பெருமாள்: நட்டோர்க்கும் தமக்கும் வரும் நன்மை தீமைகளை யொக்கப் பார்த்துத் தமக்கு நன்மையாகுமதனைச் சீர்மை தூக்கும் நட்டோரும்;
பரிதி: பயன்கண்டு உறவுசெய்வாரும்;
காலிங்கர்: தமக்கு உறுவது பார்த்து வந்து சார்ந்த நட்டாரும்;
பரிமேலழகர்: நட்பு அளவு பாராது அதனால் வரும் பயனளவு பார்க்கும் நட்டாரும்;
பரிமேலழகர் குறிப்புரை: நட்பு - ஆகுபெயர்.
'தமக்கு உறுவது பார்த்து வந்து சார்ந்த நட்டாரும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வரும்படி பார்க்கும் நண்பரும்', 'தமக்கு வரும் பயனைக் கணக்கிட்டுப் பார்க்கும் நண்பரும்', 'இலாபத்தைக் கருதி நண்பரைப் போல் நடிக்கிறவர்களும்', 'நட்பினால் தமக்கு வரும் பயனை யளந்து பார்க்கின்றவரும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்த்து வந்துள்ள நட்டாரும் என்பது இப்பகுதியின் பொருள்.
பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெற்றது கொள்ளும் கணிகையரும், கள்வருமென்று கூறப்பட்டவர் தம்முள் ஒப்பார்.
பரிப்பெருமாள்: பெற்றது கொள்ளும் கணிகையரும், கள்வரும் மேற்கூறியவர்களோடொப்பர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இம்மூவர் நட்பையும் ஆராயின் அவர்களும் தீமை தருவர் என்றது.
பரிதி: பரத்தையரும், கள்ளரும் நிகர் என்க. அது எப்படி என்றால் இம்மூவரும் பயன் கண்டால் உறவு கொள்வர்; பயனில்லாதபோது கைவிடுவர் என்றவாறு.
காலிங்கர்: பெறுவது கொள்ளும் பொதுமகளிரும், பொருள் சோர்வு பார்க்கும் கள்வரும் இம்மூவர்க்கும் வஞ்சனை தன்னில் ஒக்கும் என்றவாறு. [சோர்வு - மறதி]
பரிமேலழகர்: கொடுப்பாரைக் கொள்ளாது விலையைக் கொள்ளும் பொதுமகளிரும் பிறர்கேடு நோக்காது அவர் சோர்வு நோக்கும் கள்வரும் தம்முள் ஒப்பர். [பொதுமகளிர்- பொருளை விலையாகக் கொடுக்கும் பலர்க்கும் பொதுவாக இருக்கும் பெண்டிர்]
பரிமேலழகர் குறிப்புரை: பொருளையே குறித்து வஞ்சித்து ஒழுகலின் கணிகையர் கள்வர் என்றிவரோடு ஒப்பர் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தமககு உறுவது பார்ப்பார் நட்பின் தீமை கூறப்பட்டது. [கணிகையர்-பொதுமகளிர்]
'பெற்றது கொள்ளும் கணிகையரும், கள்வருமென்று கூறப்பட்டவர் தம்முள் ஒப்பர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பரத்தையரும் திருடரும் தம்முள் சமம்', 'அன்பு காட்டாமல் பிறர் பொருளைக் கைப்பற்றும் பொதுமகளிரும் துன்பம் நோக்காது பிறர் பொருளைக் கவரும் கள்வரும் ஒத்தவராவர்', 'பணத்தைக் கருதி காதல் உள்ளவர்களைப் போல நடிக்கிற வேசியரும் திருடுவதற்காக யோக்கியர் போல் நடிக்கிற கள்வரும் ஒரே மாதிரியானவர்கள்', 'கொடுப்பாரை ஏற்றுக் கொள்ளாது பொருளையே பெரிதாகக் கொள்ளும் பொதுமாதரும் கள்வரும் ஒப்புமையுடையார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
கிடைப்பதைப் பற்றிக்கொள்ளும் குணம் உடையவரும் திருடரும் தம்முள் சமம் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்த்து வந்துள்ள நட்டாரும் பெறுவது கொள்வாரும் திருடரும் தம்முள் சமம் என்பது பாடலின் பொருள்.
'பெறுவது கொள்வார்' யார்?
|
பொருள் கைப்பற்றும் நோக்கத்தோடு நட்புச்செய்வார் தீங்கானவர்.
நட்பினால் தமக்கு வரும் பயனை அளந்து பார்த்து நட்புச் செய்வாரும், கிடைப்பதைப் பற்றிக் கொள்ளும் குணம் உடையவரும் திருடரும் ஒரு தன்மையினர்.
நட்டோர்க்கும் தமக்கும் வந்து எய்தும் ஊதியம், இழப்பு இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்துத் தமக்கு பயன் உண்டாகுமதனை மட்டும் நோக்கும் நட்டோர், பொருளுடையவன் மயக்கத்தில் இருக்க அவனிடமிருந்து கைப்பற்றிக் கொள்ளும் பொருளிலேயே கருத்தாக இருப்பவர், பிறர் அடையும் துன்பம் நோக்காது அவர் சோர்ந்திருக்கும்போது, வஞ்சித்தோ, அடித்துப் பிடித்தோ, பொருளைப் பறிக்கும் திருடர் ஆகியோர் ஒரே தன்மையானவராவர். இவர்கள் உள்ளத்தால் ஒப்பர்; அனைவரும் தம்தம் நலம் மட்டுமே கருதுபவர்கள்.
இவரால் இன்ன ஆதாயங்கள் உண்டென்று கணித்து அதன் காரணமாக மட்டும் நட்பு கொள்ளுவோர் அத்தேவையை நிறைவு செய்யவே நம்மிடம் நண்பாராக நடிக்க வருவார். தான் கருதிய பொருளைக் கவர்வதற்காவே நண்பராகிறார். தன்னுடைய செயலை முடித்துக் கொள்வதே அவருடைய குறிக்கோள் ஆகிறது. எனவே அவர் தீ நட்பினராகக் கருதப்படவேண்டும். அத்தகையவரது நட்பு விலக்கத் தக்கது.
|
'பெறுவது கொள்வார்' யார்?
'பெறுவது கொள்வார்' என்றதற்குப் பெற்றது கொள்ளும் கணிகையர், பரத்தையர், பெறுவது கொள்ளும் பொதுமகளிர், கொடுப்பாரைக் கொள்ளாது விலையைக் கொள்ளும் பொதுமகளிர், கொடுப்பாரை எண்ணாமற் பொருளையே காரணமாக எண்ணுகிற வேசி, கொடுப்பாரைப் பாராது விலையைப் பார்க்கும் வேசி, அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலைமகளிர், உடையவன் மயங்கிக் கொடுக்க பெறுபவர்,
கொடுப்பவரை விரும்பாது அவர் தரும் பொருளையே விரும்பிப்பெறும் விலைமாதர், கொடுப்பவரைப் பற்றிக் கருதாது அவர் தரும் பொருளையே கருதும் விலைமாது, அன்பு காட்டாமல் பிறர் பொருளைக் கைப்பற்றும் பொதுமகளிர், பணத்தைக் கருதி காதல் உள்ளவர்களைப் போல நடிக்கிற வேசி, நட்பைக் குறித்துப் பாராது அவர் பொருளையே கொள்ளக் கருதுவார், கொடுப்பாரை ஏற்றுக் கொள்ளாது பொருளையே பெரிதாகக் கொள்ளும் பொதுமாதர், அடையக் கூடியதனை வஞ்சித்து அடைகின்றவர், அன்பினைக் குறித்துக் கவலை கொள்ளாது பெறுகின்ற பொருளை மட்டும் பெரிதாகக் கொள்ளும் குணம் உடையவர், பொருள் கொள்ளும் கணிகையர், கொடுப்பவரை உள்ளத்திற் கொள்ளாது அவர் கொடுக்கும் பொருளை மட்டும் மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளும் விலைமகளிர், பொருளைப் பெறுகின்ற அளவுக்குக் கூடி இன்பம் கொடுக்கும் விலைமகளிர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
ஏறக்குறைய அனைத்து உரையாளர்களுமே 'பெறுவது கொள்வார்' என்ற தொடர்க்குப் பொதுமகளிர் என்ற பொருளே கூறியுள்ளனர். பாலியல் தொழில் செய்வோர் பணம் ஒன்றில் மட்டுமே குறியாய் இருப்பவர்கள் என்பதனாலும் யார் கொடுப்பதையும் பெற்றுக் கொள்ளும் இழிவானவர்கள் என்ற பொருளிலும் அவர்கள் இவ்விதம் உரைத்தனர். ஆனால் இவர்கள் பெறுவது கொள்வார் என்ற தொடர்க்குச் சரியான விளக்கம் தரவில்லை. கொடுப்பதைப் பெற்றுக் கொள்பவர் என்ற பொருளே கூறினர். பொதுமகளிர் விலைமாதர் என்றும் அறியப்படுவர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விலை உண்டு; விலைக்குத் தகுந்தாற்போல் கலைநயம் காட்டுபவர்கள் அவர்கள்; அவர்கள் எது கொடுத்தாலும் பெறுபவர்கள் அல்லர். கொடுப்பாரைக் கொள்ளாது, கொடுப்பாரைப் பாராது என்ற விளக்கங்களும் பொருளற்றன - பாலியல் தொழிலாளியிடம் செல்பவரது நோக்கம் அவருடைய அன்பைப் பெறுவதற்காக அன்று.
தீநட்புக் குணம் கொண்டவர், பெறுவது கொள்வார், கள்வர் இம்மூவரும் பொருளைக் கவரும் நிலையில் நேர் என்பதுதான் குறள் கூறவரும் கருத்து.
பெறுவது கொள்வார் என்ற தொடர் கிடைப்பதைக் கைப்பற்றிக் கொள்பவர் என்பதைக் குறிக்கும். கிடைப்பதைச் சுருட்டிக் கொள்வார், அகப்பட்டதை அள்ளிக் கொள்வார் என்றும் சொல்லலாம். கையூட்டுப் பெறுவோர், வஞ்சகத்தால் பொருள்கவர்வோர் போன்றோரைக் குறித்த தொடர் இது.
எனவே 'பெறுவது கொள்வார்' என்பதற்கு உடையவன் மயங்கிக் கொடுக்க பெறுபவர், அடையக் கூடியதனை வஞ்சித்து அடைகின்றவர், நட்பினைக் குறித்துக் கவலை கொள்ளாது கிடைக்கின்ற பொருளை மட்டும் பெரிதாகக் கொள்ளும் குணம் உடையவர் எனப் பொதுநிலையில் கூறப்பட்ட உரைகள் பொருந்துவன.
'பெறுவது கொள்வார்' என்றதற்கு உடையவரிடமிருந்து பெறும் பொருளையே கருத்தாகக் கொள்பவர் என்பது பொருள்.
|
தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்த்து வந்துள்ள நட்டாரும் கிடைப்பதைப் பற்றிக் கொள்ளும் குணம் உடையவரும் திருடரும் தம்முள் சமம் என்பது இக்குறட்கருத்து.
பொருளைக் கவரும் உள்ளத்தோடு பழகுவோர் தீ நட்பினராம்.
கிடைக்கும் பயனைக் கணக்கிட்டு வரும் நண்பரும் பெறுவது கொள்ளும் வஞ்சனையாளரும் கள்வரும் தம்முள் சமம்.
|