அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் :
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தெருவின்கண் நெறிப்பட நடந்து அமரின்கண் நெறிப்படாமல் நடந்து ஏறினவன் வலிமையைக் கெடுக்கும் அறிவில்லாத குதிரையைப் போல்வார் தமராவதினும்;
பரிப்பெருமாள்: தெருவின்கண் நெறிப்பட நடந்து அமரின்கண் ஏறினவன் வலியைக் கெடுக்கும் அறிவில்லாத குதிரையைப் போல்வார் தமராவதின்;
பரிதி: சமர் பூமியிலே இராவுத்தன் சேவகத்தைக் கெடுக்கிற திருந்தாக் குதிரையை ஒத்தார் நட்பினும்; [சமர் பூமியிலே-போர்க்களத்திலே; இராவுத்தன் - வீரன்; திருந்தாக் குதிரை - பாகன்படி நடவாத குதிரை]
காலிங்கர்: போர் செய்யும் இடத்து இடதுசாரியும் வலதுசாரியும், குறுக்கு அறுத்தலும் நெடுகப் பாய்தலும், மற்றும் பலவும் கற்று அறியா மாவானது தன்னை நடத்துவான் ஆற்றலை அறுக்குமாப் போல அன்னர் ஆகிய தமரின்; [இடது சாரி - இடப்பக்கம் வளைந்து செல்லுதல்; வலது சாரி - வலப்பக்கம் வளைந்து செல்லுதல்; குறுக்கு அறுத்தல் - ஊடறுத்துச் செல்லுதல்; நெடுகப் பாய்தல் - நேராகப் பாய்ந்து செல்லுதல்; அறுக்குமாப்போல் - கெடுப்பதுபோல்; அன்னர்- அத்தகையர்]
பரிமேலழகர்: அமர்வாராத முன்னெல்லாம் தாங்குவது போன்று வந்துழிக்களத்திடை வீழ்த்துப்போம் கல்வி இல்லாத புரவி போல்வாரது தமர்மையில்;
பரிமேலழகர் குறிப்புரை: கல்லாமை - கதி ஐந்தும், சாரி பதினெட்டும், பொருமுரணாற்றலும் அறியாமை. துன்பம் வாராத முன்னெல்லாந் துணையாவார் போன்று, வந்துழி விட்டு நீங்குவர் என்பது உவமையாற் பெற்றாம். [தமர்மையில் - தம்மைச் சேர்ந்தாரது தன்மையில்; கதி ஐந்து - மல்ல கதி, மயூர கதி, வானர கதி, வல்லிய கதி, ரிஷப கதி; சாரி பதினெட்டு - 18 வகையான சுற்று வரவு. அதாவது வட்ட ஓட்டம்- வட்டமாக ஓடுதல்; பொருமுரணாற்றல் - போர் செய்யும் வலிமை; ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியையும், கந்து மறமும் கறங்குளைமா; விக்கிதம், வற்கிதம், உபகண்டம், ஜவம், மாஜவம் என்னும் இப்பஞ்சதாரையையும் பதினெட்டு வகைப்பட்ட சுற்றுவர வினையும் கழியப் பாய்தலையும் கறுவுதலையும் ஒலிக்கும் தலையாட்டத்தினையும் உடைய குதிரை]
'அமரின்கண் நெறிப்படாமல் நடந்து, அமரின்கண், ஏறினவன் வலிமையைக் கெடுக்கும் அறிவில்லாத குதிரையைப் போல்வார் தமராவதினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'முன்னர்த்தாங்கி இருந்து போர்வந்தபோது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் பழகாத குதிரை போன்றோர் உறவை விட', 'யுத்த களத்தில், செலுத்திய திசையில் செல்லும் பயிற்சியில்லாத குதிரையைப் போல் நெருக்கடியான சமயத்தில் நினைக்கிற உதவிக்கு உதவாதவர்களுடைய நட்பு இருப்பதைவிட', 'போரிலே ஏறினவரைக் கீழே வீழ்த்திவிட்டுப் போகும் பயிற்சியில்லாத குதிரைபோல, இடரான போழ்திற் கைவிடுவாரது நட்பைப் பார்க்கிலும்', 'போரின்கண் வழியில் தள்ளிவிட்டுச் செல்லும், போர்ப்பயிற்சியினைக் கல்லாத குதிரையை ஒத்தவரின் நட்பினைவிட' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
போர்க்களத்தின் இடையில் கீழே தள்ளிவிட்டுச் செல்லும், திருத்தம் பெறாத குதிரையை ஒத்தவரின் உறவைவிட என்பது இப்பகுதியின் பொருள்.
தனிமை தலை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் தனியனாதல் நன்று.
மணக்குடவர் குறிப்புரை: இது பகைவர் நட்புத் தீமைபயக்கு மென்றது.
பரிப்பெருமாள்: தனியனாதல் நன்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: தனிமை தீது என்பது முன்பே அமைந்து கிடந்தது. இந்நட்பின் கொடுமையதுவும் நன்று ஆயிற்று. தீமைக்கு அளவு இன்மையின் இவ்வாறு கூறினார். இவ்வுரை மேல் வருவனவற்றிற்கும் ஒக்கும். இது கயவர் நட்புத் தீமைபயக்கு மென்றது.
பரிதி: தனிமை நல்லது என்றவாறு.
காலிங்கர்: தனிமையே மிகவும் தலை என்றவாறு.
பரிமேலழகர்: தனிமை சிறப்பு உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: அவர் தமரானால் வரும் இறுதி தனியானால் வாராமையின், தனிமையைத் 'தலை' என்றார். எனவே, அதுவும் தீதாதல் பெறும்.
'தனியனாதல் நன்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தனிமை சிறப்புடையது', 'இல்லாதிருப்பது மேல்', 'தனித்திருத்தல் சிறந்தது', 'தனிமையாக இருத்தல் சிறப்புடைத்தாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தனியாக இருத்தல் மேல் என்பது இப்பகுதியின் பொருள்.
|