சீர்விடம் காணின் எறிதற்குப் பட்டடை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('தீர்விடம்' பாடம்): முடியுமிடங்காணின் மற்றொருவன் எறிதற்குப் பட்டடையாம்;
மணக்குடவர் குறிப்புரை: பட்டடையாவது தான் தாங்குவது போல நின்று வெட்டுவார்க்கு உதவி செய்வது.
பரிப்பெருமாள் ('தீர்விடம்' பாடம்): முடியுமிடங்காணின் மற்றொருவன் எறிதற்குப் பட்டடையாம்;
பரிப்பெருமாள் குறிப்புரை: பட்டடையாவது தான் தாங்குவது போல நின்று வெட்டுவார்க்கு உதவி செய்வது.
பரிதி: பட்டடையும் கரும்பும்போலத் தறிப்பர் என்றவாறு. [தறிப்பர்- வெட்டுவர்]
காலிங்கர் ('தீர்விடம்' பாடம்): தமக்கு ஏறத் திருந்தின இடம் காணின் அவரைத் தாம் கொல்லுதற்குப் பட்டடை; [ஏற - வென்று முன்னேற; திருந்தின இடம் - வாய்த்த இடம்]
பரிமேலழகர்: அது பெற்றால் அற எறிதற்குத் துணையாய பட்டடையாம்.
பரிமேலழகர் குறிப்புரை: எறியும் எல்லை வாராமுன் எல்லாம் தாங்குவது போன்றிருந்து வந்துழி அற எறிவிப்பதாய பட்டடைக்கும் அத்தன்மைத்தாய நட்பிற்கும் தொழிலொப்புமை உண்மையான், அதுபற்றி அந்நட்பினைப் பட்டடையாக உபசரித்தார். 'தீர்விடம்'என்று பாடம் ஓதி, 'முடிவிடம்' என்று உரைப்பாரும்உளர். [அற எறிவிப்பதாய- துண்டு செய்வதாகிய]
'சீர்விடம்' என்ற பாடம் கொண்ட பரிமேலழகர் 'வாய்க்கும் இடம் பெற்றால் துண்டு செய்வதற்குத் துணையாய பட்டடையாம் என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை நல்கினார். 'தீர்விடம் காணின்' எனப் பாடம் கொண்ட மணக்குடவர், பரிப்பெருமாள் இருவரும் 'முடியுமிடங் காணின் கொல்லுதற்குப் பட்டடை' என்றும் காலிங்கர் 'ஏறத் திருந்தின இடம் காணின்' என்றும் பொருள் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வாய்ப்பு வரின் அடிக்கும் பட்டறையாம்', 'வாய்க்கும் இடம் நேர்ந்தால் கொல்லன் உலைக்களத்தில் இரும்படிக்கத் துணையாகும் பட்டறை', 'அது தக்க சமயம் பார்த்து (நம்மை) நசுக்குவதற்குப் பட்டடைக் கல் (என்று எச்சரிக்கை கொள்ள வேண்டும்)', 'இடம் வாய்க்கும்போது நன்றாய் அடித்தற்கு உதவும் அடித்தகடு போலாம் ' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
வாய்ப்பான இடம் வரும்போது அடிக்கும் பட்டடை என்பது இப்பகுதியின் பொருள்.
நேரா நிரந்தவர் நட்பு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனத்தினால் ஒவ்வாது புறத்து வேறுமிகச் செய்து வந்தாரது நட்பு.
மணக்குடவர் குறிப்புரை: இது கருமங்காரணமாக நட்டாரோடு கூடும் திறங் கூறிற்று.
பரிப்பெருமாள்: மனத்தினால் நேராது புறம் ஒத்தார் போல ஒழுகுவாரது நட்பு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கூடாநட்பினால் வரும் குற்றம் கூறிற்று.
பரிதி:ஒருவனை நட்புக் கொண்டு அவன் உள் பாடெல்லாம் அறிந்து இவனுக்கு ஒரு குற்றம் வந்தால் அந்தக் குற்றமே முன்னாக எண்ணுவான் அது என்போல் எனின்.
காலிங்கர்: யாது எனின்; தமது அகத்து ஒவ்வாராய்ப் புறத்து ஒருவரோடு ஒத்தார் போன்று உள்ளவர் நட்பு என்றவாறு.
பரிமேலழகர்: கூடாதிருந்தே தமக்கு வாய்க்கும் இடம் பெறுந்துணையும் கூடியொழுகுவார் நட்பு;
'தமது அகத்து ஒவ்வாராய்ப் புறத்து ஒருவரோடு ஒத்தார் போன்று உள்ளவர் நட்பு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உள்ளம் பொருந்தாது ஒழுகுபவர் நட்பு', 'மனத்தினால் பொருந்தாது புறத்தே ஒத்தவர்போல நடப்பவரது நட்பு', 'பகைவராக இருந்தவர் திடீரென்று கலந்து நட்பாட வந்தால்', 'உள்ளத்தால் நட்புச் செய்யாமல் புறத்தே இணங்கி நடப்பவரது சிநேகம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
உள்ளத்தால் நட்புச் செய்யாமல் புறத்தே ஒத்தவர்போல பழகுபவரது நட்பு என்பது இப்பகுதியின் பொருள்.
|