| 
 
 
 
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனைபொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான்; தனக்குக் கேடு தருவித்துக் கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.மிகல்காணும் கேடு தரற்கு
 (அதிகாரம்:இகல் 
குறள் எண்:859)
 
 
 
 
 | 
 
| 
மணக்குடவர் உரை: 
மாறுபடுதற்குக் காரண முண்டாயினும் ஆக்கம் வருங்காலத்து மாறுபாடு காணான்: கேடு வருங்காலத்து அதனை மிகுதலைக் காணும். இம் மாறுபாடு நல்வினை யுடையார்க்குத் தோன்றாதென்றவாறு.
 பரிமேலழகர் உரை: 
ஆக்கம் வருங்கால் இகல் காணான் - ஒருவன் தன்கண் ஆக்கம் வரும்வழிக் காரணம் உண்டாயினும் இகலை நினையான்; கேடுதரற்கு அதனை மிகல் காணும் - தனக்குக் கேடு செய்து கோடற்கண் காரணம் இன்றியும் அதன்கண் மிகுதலை நினைக்கும். (இகலான் வருங்கேடு பிறரான் அன்றென்பது தோன்ற, 'தரற்கு' என்றார். நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன. ஆக்கக் கேடுகட்கு முன் நடப்பன, இகலினது இன்மை உண்மைகள் என்பதாம்.)
 தமிழண்ணல் உரை: 
மனமுறிவுபடுவதற்குக் காரணம் இருந்தாலும் ஒருவனுக்கு ஆக்கத்தைத் தரும் நல்ல சூழல் வரும்பொழுது அவன் அவ் இகலை நினைக்கமாட்டான்; தனக்குக் கேடு தேடிக்கொள்ளும் சூழல் வரும்பொழுது, காரணமின்றியும் அவ்விகலை மிகுதிப்படுத்தவே தோன்றும். மனத்திலேற்படும் இகல் உணர்வு, கேட்டை முன்னுணர்த்தும் அறிகுறியாகும்.  
 | 
| பொருள்கோள் வரிஅமைப்பு:ஆக்கம் வருங்கால் இகல்காணான் கேடு தரற்கு அதனை மிகல்காணும்.
 பதவுரை: இகல்-மாறுபாடு; காணான்-நினையான், கருதான்; ஆக்கம்-மேன்மேல் உயர்தல்; வருங்கால்-வரும்போது; அதனை-அதன்கண்; மிகல்-மேன்மேலூக்குதல்; காணும்-பார்க்கும், நினைக்கும்; கேடு-அழிவு; தரற்கு-தருவதற்கு. 
 | 
| 
 இகல்காணான் ஆக்கம் வருங்கால்:  
 இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:மணக்குடவர்: மாறுபடுதற்குக் காரண முண்டாயினும் ஆக்கம் வருங்காலத்து மாறுபாடு காணான்:
 பரிப்பெருமாள்: மாறுபடுதற்குக் காரண முண்டாயினும் ஆக்கம் வருங்காலத்து மாறுபாடு காணான்:
 பரிதி: தனக்கு ஆக்கம் வருங்காலம் மாறுபாட்டை மேலாக்கான், [மேலாக்கான் - மேலும் மேலும் வளர்க்க மாட்டான்]
 காலிங்கர்: தான் பிறரோடு இகலுதலைக் காணான், தனக்கு ஓர் ஆக்கம் வரக்கடவதான காலத்து;
 பரிமேலழகர்: ஒருவன் தன்கண் ஆக்கம் வரும்வழிக் காரணம் உண்டாயினும் இகலை நினையான்;
 'தன்கண் ஆக்கம் வரும்வழிக் காரணம் உண்டாயினும் இகலை நினையான்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இன்றைய ஆசிரியர்கள் 'தனக்கு நலம்வரும்போது வேற்றுமை பாரான்', 'தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை ஒரு பொருளாக மதிக்க மாட்டான்', 'ஒருவனுக்கு நல்வாழ்வு வருவது அவனிடத்தில் குரோத புத்தி இல்லாத காலத்தில்தான்', 'ஆக்கம் வரும்போது மாறுபாட்டை அறியான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர். தனக்கு உயர்வுண்டாகும்போது மாறுபாட்டைப் பாராட்டமாட்டான் என்பது இப்பகுதியின் பொருள். அதனை மிகல்காணும் கேடு தரற்கு:  
 இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:மணக்குடவர்: கேடு வருங்காலத்து அதனை மிகுதலைக் காணும்.
 மணக்குடவர் குறிப்புரை: இம் மாறுபாடு நல்வினை யுடையார்க்குத் தோன்றாதென்றவாறு.
 பரிப்பெருமாள்:  கேடு வருங்காலத்து அதனை மிகுதலைக் காணும்.
 பரிப்பெருமாள் குறிப்புரை: இம் மாறுபாடு நல்வினை யுடையார்க்குத் தோற்றாது என்றவாறு.
 பரிதி: தான் கெடுகிற காலம் மாறுபாட்டை மேலாகக் கொள்வான் என்றவாறு.
 காலிங்கர்: இனி மற்று அதனை மேன்மேலும் மிகுதலைக் காணும், தனக்குக் கேடு வருவதற்குரிய காலத்து என்றவாறு.
 பரிமேலழகர்: தனக்குக் கேடு செய்து கோடற்கண் காரணம் இன்றியும் அதன்கண் மிகுதலை நினைக்கும்.
 பரிமேலழகர் குறிப்புரை: இகலான் வருங்கேடு பிறரான் அன்றென்பது தோன்ற, 'தரற்கு' என்றார். நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன. ஆக்கக் கேடுகட்கு முன் நடப்பன, இகலினது இன்மை உண்மைகள் என்பதாம்.
 'கேடு வருங்காலத்து அதனை மிகுதலைக் காணும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இன்றைய ஆசிரியர்கள் 'பிறனைக்கெடுக்க வேறுபாட்டைப் பெருக்குவான்', 'தனக்குக் கேடு செய்து கொள்ளும்போது மாறுபாட்டுணர்வில் முனைந்து நிற்பான்', 'கேடு வரும்போது அது மிகுந்திருக்கும்', 'கேடு செய்து கொள்ளுங்கால் அதனை மிகுதியாக்கிக் கொள்வான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர். தனக்குக் கேடு செய்து கொள்ளுமாறிருந்தால் மாறுபாட்டுணர்வில் முனைந்து நிற்பான் என்பது இப்பகுதியின் பொருள். | 
| நிறையுரை: தனக்கு  உயர்வுண்டாகும்போது மாறுபாட்டைப் பாராட்டமாட்டான்; தனக்குக் கேடு செய்து கொள்ளுமாறிருந்தால் மாறுபாட்டுணர்வில் முனைந்து நிற்பான் என்பது பாடலின் பொருள்.
 'கேடு தரற்கு' என்ற தொடர் குறிப்பதென்ன?
 | 
| ஆக்கமும் கேடும் இகல் கருதுதல் பொறுத்தமையும்.   தனக்கு முன்னேற்றம் வரும்போது எதிர்கொள்ளும் மாறுபாட்டை ஒரு பொருளாக மதிக்க மாட்டான்; கேடுறுமாறிந்தால் மாறுபாட்டில் மிகுதியாக நிற்றலைக் கருதுவான்.ஆக்கம் வரும் வேளையில் இகலை எதிர்கொண்டாலும் அதைப் பொருட்படுத்தமாட்டான். மாறுபாடு உண்டாகும்போது அதன்கண் மிகுதியாக நிற்றலைக் கருதுதல் கேட்டை வரவழைத்துக் கொள்வதற்கான அறிகுறியாகும். ஒருவன் தனக்கு நன்மையும், செல்வமும் கிடைக்கும்போது எந்தவிதமான மாறுபாட்டையும் கருதாது ஒழுகுவான்; கெடுதலை வரவழைத்துக் கொள்வதாக இருந்தால் பகையில் முனைப்புக் காட்டுவான். முன்னேற்றம் அடைய வேண்டுமானால் பகையுணர்வைத் தவிர்க்க வேண்டும். அன்றி, மாறுபாட்டை மிகவும் வளர்த்துக் கொண்டால், தனக்குத்தானே அழிவைத் தந்துகொள்வதாகிவிடும்.
 இக்குறளுக்கு இகல் இருப்பினும் காணாமைக்கும் அது மிகுதற்கும் ஊழே காரணம் என்ற அமைவிலும் உரை கூறினர்.  ஊழைக் காரணம் காட்டுபவர்கள் 'ஒருவனுக்குக் கூடிவருங்காலமிருந்தால் பகையும் குரோதமும் தோன்றா; அவன் எல்லாரிடமும் அன்போடிருப்பான்; கெட்டழியும் காலம் வந்தால் எல்லாருடனும் பகையைப்பெருக்கி விரோதத்தைச் சம்பாதிப்பான்' என்றும் 'தனக்கு நல்ல காலம் வரும் போது, காரணமிருந்தாலும் ஒருவன் இகலைப் பற்றி நினைக்க மாட்டான்; தனக்குக் கேடு காலம் வரும் போது பெரிதாக மாறுபடுதலை நினைப்பான்' என்றும் உரை பகன்றனர். குறளில் 'ஊழ்' தவிர்த்த பிற அதிகாரங்களில் ஊழின் ஆட்சிபற்றிய குறிப்பில்லை.   | 
| 'கேடு தரற்கு' என்ற தொடர் குறிப்பதென்ன? 'கேடு தரற்கு' என்றதற்குக் கேடு வருங்காலத்து, தான் கெடுகிற காலம், தனக்குக் கேடு வருவதற்குரிய காலத்து, தனக்குக் கேடு செய்து கோடற்கண், தனக்குக் கேடு தருவித்துக் கொள்ளும் போது, கேடு வருகிற காலத்து, கேடு வருங்காலத்தில், தனக்குக் கேடு தேடிக்கொள்ளும் சூழல் வரும்பொழுது, பிறனைக்கெடுக்க, தனக்குக் கேடு செய்து கொள்ளும்போது, கேடு வரும்போது, தனக்குத்தானே கேடு தருவதற்கு, கேடு செய்து கொள்ளுங்கால், தனக்குக் கேடு வருவதற்குக் காரணம் நேரும்போது, பிறரைக் கெடுக்க எண்ணும்போது, தனக்குக் கேட்டை வருவித்தற்கு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.   'கேடுதரற்கு' என்றதற்குத்  தனக்குக் கேடு செய்து கொள்தற்கண் எனப் பொருள் கூறி இகலான் வருங்கேடு பிறரான் அன்றென்பது தோன்ற, 'தரற்கு' எனச் சொல்லப்பட்டது என உரைத்தார் பரிமேலழகர். தேவநேயப்பாவாணர் 'ஆக்கமும் கேடும் வருவது ஊழான் ஆதலின் 'வருங்கால்' என்றும் 'தரற்கு' எனவும் கூறினார்' என விளக்கினார்.
மற்றவர்கள் தரல் என்ற சொல்லைத் தன்மையிடத்திற்கு உரியதாகக் கொள்ள வ சுப மாணிக்கம் 'தனக்கு நலம்வரும்போது வேற்றுமை பாரான்; பிறனைக்கெடுக்க வேறுபாட்டைப் பெருக்குவான்' என ஆக்கம் வருதலைத் தன்மேலும் கேடு தருதலைப் பிறர் மேலும் வைத்து வேறுபட்ட உரை தருகிறார். 'அங்ஙனம் இருவர் மேலவாகக் கொள்ளாமல், ஆக்கம், கேடு இரண்டனையும் ஒருவர் மேலவாகக் கொண்டெழுதிய பரிமேலழகர் உரை குறள் நடைக்கு இயைந்ததாகும்' என்பார் இரா சாரங்கபாணி.  'கேடு தரற்கு' என்பது தனக்குத்தானே கேடு தருவதற்கு என்னும் பொருளில் வந்தது. | 
| தனக்கு  உயர்வுண்டாகும்போது மாறுபாட்டைப் பாராட்டமாட்டான்; தனக்குக் கேடு செய்து கொள்ளுமாறிருந்தால் மாறுபாட்டுணர்வில் முனைந்து நிற்பான் என்பது இக்குறட்கருத்து.  
 
 
  இகல்பாராட்டுவான் கேட்டை வரவழைத்துக்கொள்வான்.  
  தனக்கு உயர்வு உண்டானால் மாறுபாட்டைப் பாராட்ட மாட்டான்; தனக்குக் கேடு செய்து கொள்ளுமாறிருந்தால் மாறுபாட்டுணர்வில் பகைமையை மிகுதியாக எண்ணுவான்.    
 
 
 
 |