இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0862அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு

(அதிகாரம்:பகைமாட்சி குறள் எண்:862)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் அன்புஇல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதவனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்?

மணக்குடவர் உரை: சுற்றத்தார்மாட்டு அன்புறுதலும் இலன்; வேற்றரசராகிய வலிய துணையும் இலன்: ஆதலான், தான் வலியிலன்; இப்பெற்றிப்பட்டவன், மேல் வந்த பகைவன் வலியை யாங்ஙனம் தொலைப்பன்?

பரிமேலழகர் உரை: அன்பு இலன் - ஒருவன் தன் சுற்றத்தின்மேல் அன்பிலன்; ஆன்ற துணை இலன் - அதுவேயன்றி வலிய துணையிலன்; தான் துவ்வான் - அதன் மேல் தான் வலியிலன் : ஏதிலான் துப்பு என்பரியும் - அப்பெற்றியான்மேல் வந்த பகைவன் வலியினை யாங்ஙனம் தொலைக்கும்?
(சுற்றமும் இருவகைத் துணையும் தன்வலியும் இலனாகலின், அவன்மேற் செல்வார்க்கு வலி வளர்வதன்றித் தொலையாது என்பதாம். துவ்வான் - துவ்வினைச் செய்யான்.)

இரா சாரங்கபாணி உரை: தன் சுற்றத்தின்மேல் அன்பில்லை, நல்ல துணையும் இல்லை, அதற்குமேல் தானும் வலிமையற்றவன். இத்தகையவன் தன்மேல் போருக்கு எழுந்த பகைவன் வலிமையை எங்ஙனம் தொலைப்பான்?


பொருள்கோள் வரிஅமைப்பு:
அன்பிலன், ஆன்ற துணையிலன், தான்துவ்வான், ஏதிலான் துப்பு என்பரியும்.

பதவுரை: அன்புஇலன்-அன்பு இல்லாதவன்; ஆன்ற-அமைந்த, வலிய; துணை-துணை, உதவி; இலன்-இல்லாதான்; தான் துவ்வான்-தான் வலியிலன்; என்-எங்ஙனம்; பரியும்-தொலைக்கும், நீக்கும்; ஏதிலான்-பகைவனது; துப்பு-வலிமை.


அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சுற்றத்தார்மாட்டு அன்புறுதலும் இலன்; வேற்றரசராகிய வலிய துணையும் இலன்: ஆதலான், தான் வலியிலன்;
பரிப்பெருமாள்: சுற்றத்தார்மாட்டு அன்புறுதலுமிலன்; வேற்றரசராகிய துணையுமிலன்: தான் வலியுமிலன்;
பரிதி: எல்லாரிடத்தும் பகையுள்ளவன்; தனக்கு உதவியும் இல்லாதவன்;
காலிங்கர்: பகைகொளின் அல்லது யாவர்மாட்டும் அன்பிலன்; மற்றும் தனக்கு அமைந்த துணைவலியிலன்; பின்னும் தான் ஒன்றுக்கு ஓர் துப்பிலாதான் யாவன்; [துப்பில்லாதான் - வலிமையில்லாதான்]
பரிமேலழகர்: ஒருவன் தன் சுற்றத்தின்மேல் அன்பிலன்; அதுவேயன்றி வலிய துணையிலன்; அதன் மேல் தான் வலியிலன்:
பரிமேலழகர் குறிப்புரை: சுற்றமும் இருவகைத் துணையும் தன்வலியும் இலனாகலின், அவன்மேற் செல்வார்க்கு வலி வளர்வதன்றித் தொலையாது என்பதாம். துவ்வான் - துவ்வினைச் செய்யான்.

'தன் சுற்றத்தின்மேல் அன்பிலன்; வலிய துணையிலன்; அதன் மேல் தான் வலியிலன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்பும் பெருந்துணையும் வலியும் இல்லாதவன்', 'அன்பில்லாதவனாக (இருப்பதால் பகைவர் உள்ளவனாகவும்) தக்க துணைவர் இல்லாதவனாகவும் ஆகிவிடுகிறான்', 'தன் இனத்தார்மேல் அன்பு இல்லாதவனாய்ப், பொருத்தமான துணைவலி இல்லாதவனாய்த் தானுந் திறமில்லாதவனாய் உள்ளவன்', 'தம்மைச் சார்ந்தவரிடத்தில் அன்பு இல்லாதவன்; பொருந்திய துணையும் இல்லாதவன்; தானும் வலியிலான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அன்பில்லாதவன், பொருந்திய துணையில்லாதவன், தானே வலியில்லாதவன் என்பது இப்பகுதியின் பொருள்.

என்பரியும் ஏதிலான் துப்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இப்பெற்றிப்பட்டவன், மேல் வந்த பகைவன் வலியை யாங்ஙனம் தொலைப்பன்?
பரிப்பெருமாள்: இப்பெற்றிப்பட்டவன் பகைவனது வலியை யாங்ஙனம் அறுக்கும் என்றவாறு?
பரிப்பெருமாள் குறிப்புரை: என்பரியும் என்பது இகழ்ச்சிக் குறிப்பு. இம்மூன்றும் இல்லாதவன் வெல்லமாட்டான் என்றது.
பரிதி: இவன் கொடையும் அறியானாகில் மாற்றாரை எப்படி வெல்வான் என்றவாறு.
காலிங்கர்: அவன் என்பினையும் அரியும் ஏதிலான் கைக்கருவி என்றவாறு. [அரியும் -அரிந்து துண்டுபடுத்தும்; கைக்கருவி- கைவாள்]
காலிங்கர் குறிப்புரை: ஏதிலான் துப்பு என்பது பகைவன் படைக்கலம்.
பரிமேலழகர்: அப்பெற்றியான்மேல் வந்த பகைவன் வலியினை யாங்ஙனம் தொலைக்கும்?

'இப்பெற்றிப்பட்டவன், மேல் வந்த பகைவன் வலியை யாங்ஙனம் தொலைப்பன்?' என்ற பொருளில், காலிங்கர் தவிர்த்த, பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். 'அவனது எலும்பையும் துண்டுபடுத்தும் பகைவரின் கைவாள்' என்று காலிங்கர் மாறுபட்ட உரை தருகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவன் வலியை எங்ஙனம் தாங்குவான்?', 'அதனால் வலிமையற்றவனாக உள்ள (மெலியான்) பகைவருடைய பலத்தை எப்படிச் சமாளிப்பான்?', 'பகைவனது வலிமையை எவ்வாறு தொலைப்பான்?', 'மேல் வந்த பகைவன் வலியினை எவ்வாறு அழிப்பான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பகைவனது வலிமையை எவ்வாறு தொலைப்பான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அன்பில்லாதவன், பொருந்திய துணையில்லாதவன், தானே வலியில்லாதவன் பகைவனது வலிமையை என்பரியும் என்பது பாடலின் பொருள்.
'என்பரியும்' என்பதன் பொருள் என்ன?

யாரிடமும் அன்பு காட்டாதவனிடம் பகை கொள்ளலாம்.

தன் சுற்றத்தாரிடம் அன்பற்றவனாகவும், நல்ல துணையில்லாதவனாகவும், தானும் வலிமையில்லாதவனாகவும் இருப்பவனால் பகைவனுடைய வலியை எவ்வாறு தொலைக்க முடியும்?
அன்பிலன்: அன்பு காட்டுவோரே நமக்குத் தேவையான நேரத்தில் வலியாக நிற்பர். குறளில் அன்பு என்பது தொடர்புடையாரிடம் காட்டும் உள்ள நெகிழ்ச்சியைக் குறிக்கும். தொடர்புடையார் பெற்றோர், மனைவி, மக்கள், உற்றார், நண்பர்கள் ஆகியோராவர். இவர்களிடம் மீது பற்றில்லாமல் இருப்பது பலவீனமாகக் கருதப்படும். அன்பில்லாதவன் பலம் குறைந்தவன்.
ஆன்ற துணையிலன்: துணை என்பது ஒருவனைச் சூழ்ந்திருந்து அறிவுரை கூறுவோர், உள்ளம் தளராமல் இருக்க மன ஆதரவு தருவார், தனக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்போர் போன்றவர்கள். ஆட்சியாளர் என்றால் அமைச்சர், படைத்தலைவர் இவர்களைக் குறிக்கும். ஒருவர்க்கு நல்ல துணை அமையாவிட்டால் அதுவும் வலியின்மையக் காட்டும்.
தான்துவ்வான்: தன்வலி இல்லாதவன் தான்துவ்வான் என்று குறிக்கப்பெறுகிறான். தானே தனியாக நிற்கக்கூடிய ஆற்றலில்லாதவன். தன்மீதே நம்பிக்கை இல்லாமல் எப்போழுதும் சோர்ந்து காணப்படும் இவன் வலியிலனே. காலிங்கர் 'தான் ஒன்றுக்கு ஓர் துப்பிலாதான்' என இத்தொடரை விளக்குவார். துப்பு என்ற சொல் வலிமை என்ற பொருளது. துவ்வான் என்றதற்கு உண்ணான் எனவும் பொருள் கூறுவர். தான் உண்ணான் என்பது தான் உண்பதற்குக்கூட செலவழிக்க மாட்டாதவன் என்ற பொருளாகிறது; தன்மீதும் அன்பில்லாத கஞ்சன் இவன்.
அன்பில்லா இவன் தனக்குங்கூட செலவழிக்காதவனாயிருப்பதால் துணை இல்லாதவனாகி விடுகிறான். இதனால் உலகோடு ஒட்டாமல் தனித்து வாழ்கிறான். இவனிடம் எவ்விதம் பகைவரைத் தாங்கும் வலிமை உண்டாகும்? யாரிடமும் அன்பு காட்டாமல், வலிய துணையும் இல்லாமல், தானும் வலிமை இல்லாமல் இருப்பவனால் தன்னை எதிர்த்துவரும் பகைவரை வெல்ல முடியாது. அத்தகையோர் மேல் பகை கொள்ளலாம் என்கிறது பாடல்.

'என்பரியும்' என்பதன் பொருள் என்ன?

'என்பரியும்' என்றதற்கு யாங்ஙனம் தொலைப்பன், யாங்ஙனம் அறுக்கும், எப்படி வெல்வான், என்பினையும் அரியும், யாங்ஙனம் தொலைக்கும், எப்படித் தொலைப்பான், எவ்வாறு ஒழிக்க முடியும், நைந்து வருந்துவது ஏன், எங்ஙனம் தாங்குவான், எங்ஙனம் தொலைப்பான், எப்படிச் சமாளிப்பான், எவ்வாறு அழிப்பான், எவ்வாறு தொலைக்க முடியும், எப்படித் தாங்குவான், எப்படிப் போக்கிக்கொள்ள முடியும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

(பகையின் வலிமையை)எப்படித் தொலைப்பான்? எப்படி வெல்வான்(எழுந்து வரும் பகைவரின் பலம் எந்த விதத்திலேயுங் கெடாது) என்றபடி என்பரியும் என்ற தொடர்க்குப் பொருள் கூறினர். காலிங்கர் வேறுபாடாக என்பு + அரியும் எனப் பிரித்து அவன் என்பினையும் அரியும் ஏதிலான் கைக்கருவி என உரை செய்தார். படைக்கலத்திற்கு ஓர் தனிச்சிறப்பின்மையால் அப்பொருள் சிறவாது என்பர். என்பரியும் என்பதை வினா நடையாகக் கொள்வதே நன்று. இத்தொடர் இகழ்ச்சிக் குறிப்பாய் அமைந்தது. தமிழண்ணல் 'இத்தகையவன் பகைவரது வலிமை கண்டு, நைந்து வருந்துவது ஏன்?' என்று உரை வரைந்தார். இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே.... (நெஞ்சோடுகிளத்தல் 1243) என்று தொடங்கும் குறளில் என்பரிதல் என்றது 'வருந்துதல் எதற்கு?' என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. மணக்குடவர் கூறும் 'யாங்ஙனம் தொலைப்பன்' என்ற பொருள் சிறந்தது.

'என்பரியும்' என்ற தொடர்க்கு எப்படித் தொலைக்கும் என்பது பொருள்.

அன்பில்லாதவன், பொருந்திய துணையில்லாதவன், தானே வலியில்லாதவன் பகைவனது வலிமையை எவ்வாறு தொலைப்பான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தனிமையை மிகவும் விரும்புபவன் மீதுசெல்வது பகைமாட்சியாம்.

பொழிப்பு

அன்பு, துணைவலி, தன்வலி இல்லாதவன் பகைவன் வலிமையை எவ்வாறு தொலைப்பான்?