வகையறிந்து தற்செய்து தற்காப்ப:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினைசெய்யும் வகையை யறிந்து, தன்னைப் பெருக்கித் தான் தன்னைக் காக்க;
பரிப்பெருமாள்: வினைசெய்யும் வகையை யறிந்து, தன்னைப் பெருக்கித் தான் தன்னைக் காக்க;
பரிதி: பகை வெல்லும் வகையறிந்து தனக்குப் பகையாகிய பகைவற்குப் பகைவனாகிய பெரியோனிடத்திற் சேரில்;
காலிங்கர்: தன்னோடு எதிர்வதன் கூறுபாட்டை அறிந்து மற்று அதற்குத் தக்காங்கு அதனின் மிகத் தன்னைச் சமைத்துக் கொண்டு இங்ஙனம் தன்னைப் பேணிக்கொள்ளவே;
காலிங்கர் குறிப்புரை: வகையறிந்து தற்செய்து என்பது தன்னொடு மலைந்து எழும் பகைக்குத் தகாது எனின் மிகைப்பட்ட தன்னைச் சமைத்துக் கொண்டு என்றது.
பரிமேலழகர்: தான் வினை செய்யும் வகையை அறிந்து அது முடித்தற்கு ஏற்பத் தன்னைப் பெருக்கி மறவி புகாமல் தன்னைக் காக்கவே;
பரிமேலழகர் குறிப்புரை: வகை - வலியனாய்த் தான் எதிரே பொருமாறும், மெலியனாய் அளவில் போர் விலக்குமாறும் முதலாயின. பெருக்கல் - பொருள் படைகளாற் பெருகச் செய்தல்.
'வினைசெய்யும் வகையை யறிந்து, தன்னைப் பெருக்கித் தான் தன்னைக் காக்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வகையாகத் தன்வலி பெருக்கிக் கொண்டால்', 'தான் செய்யும் தொழிலின் வகையை அறிந்து தன் ஆற்றலை வளர்த்துத் தன்னைக் காத்துக் கொள்ளவே', 'இதுவரை சொல்லப்பட்ட பகைத்திறம் தெரிந்து ஒருவன் தன்னை பலப்படுத்தித் தற்காப்பு செய்து கொண்டால்', 'ஒருவன் தான் வெல்லும் வகையை அறிந்து தனக்கு வேண்டும் பொருளைத் தேடித் தன்னைக் காத்துக் கொள்வானாயின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
வெல்லும் வகையை அறிந்து தன் ஆற்றலைப் பெருக்கித் தன்னைக் காத்துக் கொள்ள என்பது இப்பகுதியின் பொருள்.
மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவர்மாட்டு உண்டான பெருமிதம் கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது பகைவரைக் கொல்லுந் திறங் கூறிற்று.
பரிப்பெருமாள்: பகைவர்மாட்டு உண்டான பெருமிதம் கெடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பகையை வெல்லும் திறங் கூறிற்று.
பரிதி: அந்தப் பகையும் மாயும்.
காலிங்கர்: கெடும்; யாதோ எனின் பகைவர் மாட்டு உளதாகிய மனச் செருக்கு என்றவாறு.
பரிமேலழகர்: தன் பகைவர் மாட்டு உளதாய களிப்புக் கெடும்.
பரிமேலழகர் குறிப்புரை: களிப்பு - 'இவற்றான் வேறும்' என்று எண்ணி மகிழ்ந்திருத்தல். இவ்விறுகுதல் அறிந்து தாமே அடங்குவர் என்பதாம். இதனால் களைதற்பால தன்கண் செய்வன கூறப்பட்டன.
'பகைவர்மாட்டு உண்டான பெருமிதம்/மனச் செருக்கு/களிப்பு கெடும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மாற்றாரின் ஆணவம் தானே மறையும்', 'பகைவனிடம் தோன்றும் ஆணவம் தானே மறையும்', 'அவனுடைய பகைவர்களிடம் உள்ள துணிச்சல் ஒழிந்துவிடும்', 'அவனது பகைவர்பால் உள்ள களிப்புக் கெடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பகைவரிடம் உள்ள ஆணவம் தானே மறையும் என்பது இப்பகுதியின் பொருள்.
|