அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அன்பால் கலத்தலின்றிப் பொருளால் கலக்கும் ஆய்தொடியார்;
பரிப்பெருமாள்: அன்பால் கலத்தலின்றிப் பொருளால் கலக்கும் ஆய்தொடியார்;
பரிதி: அன்பினாலே விரும்பார் பொருளாசையால் விரும்புமவர் இன்பம்;
காலிங்கர்: ஆடவரை எஞ்ஞான்றும் நெஞ்சத்து அன்பினான் விரும்பாராய்ப் பொருளையே விரும்பிச் செல்லும் ஆய்தொடிப் பரத்தையர்;
பரிமேலழகர்: ஒருவனை அன்புபற்றி விழையாது பொருள்பற்றி விழையும் மகளிர்; [விழையாது - விரும்பாமல்]
பரிமேலழகர் குறிப்புரை: பொருள் என்புழி 'இன்' விகாரத்தால் தொக்கது.
'ஒருவனை அன்புபற்றி விழையாது பொருள்பற்றி விழையும் மகளிர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அன்பின்றிப் பொருளை விரும்பும் பரத்தையரின்', 'ஒருவரை அன்பினால் விரும்பாமல் பொருள் பெறும் நோக்கத்தால் விரும்பும் பொது மகளிர்', 'அன்பு காரணமாக ஆசை கொள்ளாமல் பணம் காரணமாகப் பாசாங்கு ஆசை காட்டும் விலைமாதர்களுடைய', 'அன்பு காரணமாய் விரும்பாதவராய்ப் பொருள் காரணமாக விரும்பும் அழகிய வளையலை அணிந்த பெண்களின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அன்பினால் விரும்பாமல் பொருளுக்காக விரும்பும் நல்லணி பூண்ட மகளிர் என்பது இப்பகுதியின் பொருள்.
இன்சொல் இழுக்குத் தரும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சொல்லும் இன்சொல், பின்பு கேட்டினைத் தரும்.
பரிப்பெருமாள்: சொல்லும் இன்சொல், பின்பு கேட்டினைத் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கணிகையர் கூட்டத்தினால் வரும் குற்றம் என்னை என்றார்க்குக் கூறப்பட்டது.
பரிதி: நல்லோர்முன் இழுக்குண்டாம் என்றவாறு.
காலிங்கர்: சொல்லிக்காட்டும் இன்சொல்லும் இழுக்கத்தைத் தரும் இத்துணை அல்லது விழுப்பம் தராதாம் ஆராயின் என்றவாறு.
பரிமேலழகர்: அது கையுறும் துணையும் தாம் அன்பு பற்றி விழைந்தாராகச் சொல்லும் இனிய சொல் அவனுக்குப் பின் இன்னாமையைப் பயக்கும்.[இன்னாமை - துன்பம்]
பரிமேலழகர் குறிப்புரை: ஆய்ந்த தொடியினையுடையார் என்றதனாலும், இனிய சொல் என்றதனாலும், அவர் கருவி கூறப்பட்டது. அச்சொல் அப்பொழுதைக்கு இனிதுபோன்று பின் வறுமை பயத்தலின் அது கொள்ளற்க என்பதாம். [கருவி - ஆய்தொடியும் இன்சொல்லும் பொது மகளிர்க்கு மயக்கும் சாதனம் (கருவி) என்று கூறப்பட்டன]
'சொல்லும் இன்சொல், பின்பு கேட்டினைத் தரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நயமான சொல் துன்பம் தரும்', 'கொஞ்சுகின்ற இனிய சொல் துன்பந் தரும்', 'பேச்சு இனிமையாக இருந்தாலும் அதனால் பின்னால் துன்பமே வரும்', 'இனிய சொற்கள் துன்பத்தைத் தரும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
இனிய சொற்கள் கேட்டினைத் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.
|