பொதுநலத்தார் புன்னலம் தோயார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லார்க்கும் பொதுவாகிய நலத்தினையுடையவரது புல்லிய நலத்தைச் சேரார்;
பரிப்பெருமாள்: எல்லார்க்கும் பொதுவாகிய நலத்தினையுடையவரது புல்லிய நலத்தைச் சேரார்;
பரிதி: எல்லார்க்கும் பொதுவான இன்பம் கொள்ளார்;
காலிங்கர்: யாவர் மாட்டும் பொதுப்படவரும் பொருள் காரணமாக நடிக்கும் பொது நலத்தாராகிய பொதுமகளிர் காட்டும் புல்லிய நலத்தைப் பொருந்தார்;
பரிமேலழகர்: பொருள் கொடுப்பார்க்கெல்லாம் பொதுவாய ஆசையினையுடைய மகளிரது புல்லிய நலத்தைத் தீண்டார்.
'பொதுவாகிய நலத்தினையுடையவரது புல்லிய நலத்தைச் சேரார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பொது இன்பப் பெண்டிரைத் தழுவார்', 'பொருள் வழங்குவார்க்கெல்லாம் தம் இன்பத்தைப் பொதுவாக்கும் விலைமகளிரின் இழிநலத்தைப் பொருந்தார்', 'பொது மக்கள் (யாருக்கானாலும் விலைக்கு விற்கவென்றே தம்மை) அழகுபடுத்திக் கொள்ளும் விலைமாதருடைய அற்பசுகத்தில் அகப்பட்டுக் கொள்ள மாட்டார்கள்', 'எல்லார்க்கும் பொதுவாக இன்பந்தருவாரது சிற்றின்பத்தில் திளைக்கமாட்டார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பொதுமகளிரின் இழிந்தஇன்பத்தைப் பொருந்தார் என்பது இப்பகுதியின் பொருள்.
மதிநலத்தின் மாண்ட அறிவி னவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மதிநலத்தாலே மாட்சிமைப்பட்ட அறிவுடையார்.
மணக்குடவர் குறிப்புரை: இது புத்திமான் சேரானென்றது.
பரிப்பெருமாள்: மதிநலத்தாலே மாட்சிமைப்பட்ட அறிவுடையார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: புத்திமான்கள் சேரார் என்றமையால், பொருள் கருதுவார் சேரார் என்றார், பொருளைக் கெடுப்பர் ஆதலின்.
பரிதி: மதியினால் பெரியவர்; பலர் எச்சில் என்று கழிப்பர் என்றவாறு. [கழிப்பர்- நீக்குவர்]
காலிங்கர்: யார் எனின், தம் மதித்தூய்மையால் பெரிதும் மாட்சிமைப்பட்ட அறிவினை உடையோர் என்றவாறு.
பரிமேலழகர்: இயற்கையாகிய மதிநன்மையான் மாட்சிமைப்பட்ட செயற்கை அறிவினையுடையார்; [செயற்கையறிவு- கல்வி கேள்விகளால் ஆகிய அறிவு]
பரிமேலழகர் குறிப்புரை: மதி நன்மை - முற்பிறப்புக்களில் செய்த நல்வினைகளான் மனம் தெளிவு உடைத்தாதல். அதனான் அன்றிக் கல்வியறிவு மாட்சிமைப்படாமையின், 'மதிநலத்தின் மாண்ட அறிவினவர்' என்றும், அவ்வறிவுடையார்க்கு அவராசையது பொதுமையும் மெய்ந்நலத்தது புன்மையும் விளங்கித் தோன்றலின், 'தோயார்'என்றும் கூறினார். [புன்மை -இழிந்ததன்மை]
'மதிநலத்தாலே மாட்சிமைப்பட்ட அறிவுடையார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இயற்கையறிவோடு நூலறிவும் உடையவர்', 'இயற்கையறிவால் மாட்சிமைப்பட்ட கல்வியறிவினையுடையவர்', 'புத்திக் கூர்மையினாற் சிறந்த அறிவாளிகள்', 'இயற்கையான நல்லறிவோடு மாட்சிமைப்பட்ட கல்வியும் உடையார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
சிந்தனைத் திறனுடன் கூடிய நல்லறிவுடையோர் என்பது இப்பகுதியின் பொருள்.
|