பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது
(அதிகாரம்:சூது
குறள் எண்:938)
பொழிப்பு (மு வரதராசன்): சூது, உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.
|
மணக்குடவர் உரை:
சூது, முற்படப் பொருளைக் கெடுத்து அதன் பின்னர்ப் பொய்யை மேற்கொள்ளப்பண்ணி அருளுடைமையைக் கெடுத்து அல்லற்படுத்துவிக்கும்.
பரிமேலழகர் உரை:
சூது - சூது; பொருள் கெடுத்து - தன்னைப் பயின்றவன் பொருளைக் கெடுத்து; பொய்மேற்கொளீஇ - பொய்யை மேற்கொள்ளப் பண்ணி, அருள் கெடுத்து - மனத்து எழும் அருளைக் கெடுத்து, அல்லல் உழப்பிக்கும் - இவ்வாற்றான் அவனை இருமையினும் துன்பம் உறுவிக்கும்.
(இத்தொழில்கள் மூன்றற்கும் சூது வினைமுதலாகவும், தோல்வி, வெற்றி, செற்றம் என்பன முறையே கருவிகளாகவும் கொள்க. முன்னதனான் இம்மையினும் ஏனையவற்றான் மறுமையினும் ஆம். 'பொருள் கொடுத்து' என்பது பாடமாயின், அவ்வெச்சத்திற்கு முடிவு 'மேற்கொளீஇ' என்புழி, மேற்கோடலாகிய வினை முதல்வினை.)
தமிழண்ணல் உரை:
ஒருவன் சூதில் பழகிவிட்டால் அது அவனிடமிருந்த பொருட்செல்வத்தை அழித்து, பொய் சொல்லுதலை மேற்கொள்ளவைத்து, மனத்தினுள் ஊறும் அருளினையும் கெடுத்து, அல்லற்பட்டு உழலுமாறு செய்யும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
பொருள்கெடுத்துப் பொய்மேற்கொளீஇ அருள்கெடுத்து அல்லல்உழப்பிக்கும் சூது.
பதவுரை: பொருள்-செல்வம், உடைமை; கெடுத்து-தொலைத்து; பொய்-மெய் அல்லாதது; மேற்கொளீஇ-மேற்கொள்ளப் பண்ணி; அருள்-இரக்கம், கருணை; கெடுத்து-அழித்து; அல்லல்-துன்பம்; உழப்பிக்கும்-உறுவிக்கும், வருந்தச் செய்யும்; சூது-சூதாட்டம்.
|
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முற்படப் பொருளைக் கெடுத்து அதன் பின்னர்ப் பொய்யை மேற்கொள்ளப்பண்ணி அருளுடைமையைக் கெடுத்து;
பரிப்பெருமாள்: முற்படப் பொருளைக் கெடுத்து அதன்பின் பொய்மையை மேற்கொள்ளுவிக்கும்; பின் அருளைக் கெடுத்து;
பரிதி: பொருளைக் கெடுத்துப் பொய்சொல்விக்கும்; அருளைக் கெடுத்து;
காலிங்கர்: ஒருவர்க்கு முன் நின்ற பொருளையும் கெடுத்துப் பொய்மையும் அவன்பால் கொளுவி, வறியோர்க்கு ஒன்று ஈதல் மரபு ஒன்றுள்ள அருளினையும் கெடுத்து; [கொளுவி- உறுத்தி]
பரிமேலழகர்: தன்னைப் பயின்றவன் பொருளைக் கெடுத்து பொய்யை மேற்கொள்ளப் பண்ணி மனத்து எழும் அருளைக் கெடுத்து;
பரிமேலழகர் குறிப்புரை: இத்தொழில்கள் மூன்றற்கும் சூது வினைமுதலாகவும், தோல்வி, வெற்றி, செற்றம் என்பன முறையே கருவிகளாகவும் கொள்க. முன்னதனான் இம்மையினும் ஏனையவற்றான் மறுமையினும் ஆம். 'பொருள் கொடுத்து' என்பது பாடமாயின், அவ்வெச்சத்திற்கு முடிவு 'மேற்கொளீஇ' என்புழி, மேற்கோடலாகிய வினை முதல்வினை. [ஆம்-துன்பமாகும்; முன்னதனான் - பொருளைக் கெடுத்தலால்; ஏனையவற்றான் -பொய்மேற்கொள்ளுதல் அருள் கெடுத்தலால்]
'முற்படப் பொருளைக் கெடுத்து அதன்பின் பொய்மையை மேற்கொள்ளுவிக்கும்; பின் அருளைக் கெடுத்து' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பொருள் கெடுக்கும், பொய்யனாக்கும்; அருள் கெடுக்கும்', 'தன்னிடமுள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளும்படி செய்து அருளையும் கெடுத்து', '(முதலில்) செல்வத்தை அழித்து (அதனால்) பொய்களைப் பேசச் செய்து (அதன்பின்) ஜீவகாருண்யமில்லாத செயல்களையும் செய்யப் பண்ணி', 'பொருளையும் போக்கி, பொய்யை மேற்கொள்ளச் செய்து அருள் எண்ணத்தினையும் நீக்கி' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பொருளைத் தொலைத்து அதன்பின் பொய்யை மேற்கொள்ளச் செய்து பின் அருள் எண்ணத்தினையும் கெடுத்து என்பது இப்பகுதியின் பொருள்.
அல்லல் உழப்பிக்கும் சூது:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அல்லற்படுத்துவிக்கும் சூது,
பரிப்பெருமாள்: அதன் பின் அல்லற்படுத்துவிக்கும் சூது என்றவாறு,.
பரிப்பெருமாள் குறிப்புரை: சூதாடினார் அல்லலுழப்பர் என்றார்; பொருட்கேடு வருவதல்லது அருள் கெடுவதுண்டோ என்றார்க்கு அத்துணை வருமாறு இது என்று கூறப்பட்டது.
பரிதி: துயரமும் செய்யும் சூது என்றவாறு.
காலிங்கர்: பின்னும் தமக்கு ஆற்ற ஒண்ணா அருந்துயருறுவிக்கும் சூதானது என்றவாறு. [ஆற்ற ஒண்ணா - பொறுக்க இயலாத]
பரிமேலழகர்: இவ்வாற்றான் அவனை இருமையினும் துன்பம் உறுவிக்கும் சூது.
'அல்லற்படுத்துவிக்கும் சூது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'துன்பத்தில் அழுத்தும் சூது', 'பல வகையிலும் துன்பத்தை மிகுவிக்கும் சூது', 'பல துன்பங்களில் உழலச் செய்துவிடும் சூதாட்டம்', 'துன்பத்தின்கண் வருத்தும் சூது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
துன்பத்தில் உழலச் செய்துவிடும் சூதாட்டம் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
பொருளைத் தொலைத்து அதன்பின் பொய்யை மேற்கொள்ளச் செய்து பின் அருள் எண்ணத்தினையும் கெடுத்து துன்பத்தில் உழலச் செய்துவிடும் சூதாட்டம் என்பது பாடலின் பொருள்.
'பொய்மேற் கொளீஇ' குறிப்பது என்ன?
|
கையறு நிலையில் உண்மையும் ஈரமும் வற்றிப் போவான் சூதாடி.
சூதானது, ஒருவனது பொருளை அழித்து, அவனைப் பொய்யனாக்கி, அவனுக்கு அருளில்லாமல் செய்து தாங்கமுடியாத துன்பத்திலே ஆழ்த்தி விடும்.
பொழுது போக்குக்காகச் செல்லாமல், பணம் ஈட்டவேண்டும் என்ற நோக்கில் சூதாடுகளம் செல்பவன் அறிவுதிரிந்தவனாகத்தான் இருப்பான், பொருளைப் பணயம் வைத்து சூது ஆடுவதால் பொருள் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்களேமிகை என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்பதால். தொடர்ந்து சூதாடும்பொழுது தோல்விகளால் இழப்பு ஏற்பட்டு சூதனது பொருளாதார நிலை சீர்குலையும். பிறகு இழந்த பொருளை எப்படியாவது மீட்கவேண்டும் என்ற வெறியில் பொய் சொல்லத் துணிவு கொள்வான்; நேர்மையற்ற ஏமாற்று வழிகளில் கடனாகவோ திருடியோ பணம்பெற முயற்சிப்பான். அங்ஙனம் கிடைத்தவற்றை மீண்டும் மீண்டும் சூதாடித் தொலைப்பான். பின் தோல்வி வருத்தத்தால் சினம் எழும்; இரக்க குணம் அகன்று வன்முறைச் செயல்களில் ஈடுபடுவான்; அருள்நெறி என்றால் என்ன என்றே அறியாதவனாகிப் போய்விடுவான்; அவன் முகத்திலும் இருள் தோன்றும். வாழ்க்கையில் நம்பிக்கையற்றுப் போய்ப் பல வகைத் துன்பங்களில் அழுந்தி வருந்துவான்.
சூதை முழுவதும் விட்டொழியும்வரை இந்தநிலை நீடிக்கும்.
இவ்வாறு சூதாட்டத்தால் ஒருவன் அடையும் தீமைகளை- பொருள் இழப்பு, பொய்யனாவது, அருள் நீங்குதல், அல்லற்படுதல் என்பனவற்றைச் சுருக்கமாகச் சொல்கிறது பாடல்..
|
'பொய்மேற் கொளீஇ' குறிப்பது என்ன?
'பொய்மேற் கொளீஇ' என்ற தொடர்க்குப் பொய்யை மேற்கொள்ளப்பண்ணி, பொய்மையை மேற்கொள்ளுவிக்கும், பொய்சொல்விக்கும், பொய்மையும் அவன்பால் கொளுவி, பொய்யை மேற்கொள்ளப் பண்ணி, பொய் சொல்லத் தக்கதாகப் பண்ணி, பொய்யை மேற்கொள்ளப் பண்ணி, பொய்யை மேற்கொள்ளச் செய்து, பொய் சொல்லுதலை மேற்கொள்ளவைத்து, பொய்யனாக்கும், பொய்களைப் பேசச் செய்து என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
சூதாட்டத்தில் முதலில் பொருள் இழப்பு உண்டாகிறது. பின் பொருள் அழிந்துகொண்டு வருவதை எண்ணாமல் வெற்றி பெற வேண்டுமென்று என்பதை மட்டும் கருதுவதால், பொய் சொல்லத் துணிவான். வெற்றி தோல்விகளால் உண்டான மன அழுத்தத்தால் பொய் பேசுவதைப் பழக்கமாகக் கொண்டுவிடுகிறான். பொய் பேசுதல் என்னும் நெறியற்ற வழியில் செல்லத் தொடங்கியபின் அதனினும் பெருந்தீங்கான வன்முறைச் செயல்களிலும் இறங்கி விடுவான். அதன் விளைவாக அருளும் கெடும்.
'பொய்மேற் கொளீஇ' என்றதற்குப் பொய்யை மேற்கொள்ளச் செய்து என்பது பொருள்.
|
பொருளைத் தொலைத்து அதன்பின் பொய்யை மேற்கொள்ளச் செய்து பின் அருள் எண்ணத்தினையும் கெடுத்து துன்பத்தில் உழலச் செய்துவிடும் சூதாட்டம் என்பது இக்குறட்கருத்து.
சூது ஆட்டத்தால் பொருட்கேடு மட்டுமல்ல அருட்கேடும் உண்டாகும்.
பொருள் தொலைத்துப் பொய்யை மேற்கொள்ளும்படி செய்து அருள் கெடுத்துத் துன்பத்தில் அழுந்தச் செய்யும் சூது.
|