இல்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாக:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயர்குடிப்பிறந்தார்மாட்டல்லது பிறர்மாட்டு இயல்பாக உண்டாகா;
பரிப்பெருமாள்: உயர்குடிப்பிறந்தார்மாட்டல்லது இயல்பாக உண்டாகா;
பரிதி: குடிப் பிறந்தார்க்கல்லது;
காலிங்கர்: குடிப்பிறந்தார்மாட்டு அல்லது பிறர்மாட்டு இல்லை;
பரிமேலழகர்: குடிப்பிறந்தார் மாட்டல்லது பிறர்மாட்டு இயற்கையாக உளவாகா;
பரிமேலழகர் குறிப்புரை: இல், குடி, என்பன ஈண்டு உயர்ந்தவற்றின் மேல.
'குடிப்பிறந்தார் மாட்டல்லது பிறர்மாட்டு இயற்கையாக உளவாகா' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இயற்கையாகவே நற்குடிப் பிறந்தாரிடம்', 'நற்குடிப் பிறந்தாரிடத்து அல்லது பிறரிடத்து இயற்கையாகத் தோன்றா', 'வழக்கமாக நல்ல குடியிற் பிறந்தவர்களிடத்திலன்றி மற்றவர்களிடத்தில் இருப்பதில்லை', 'நல்ல குடியில் பிறந்தோர்க்கு அல்லது இயல்பாக அமைவதில்லை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நற்குடிப் பிறந்தாரிடத்து அல்லது பிறரிடத்து இயல்பாக அமைவதில்லை என்பது இப்பகுதியின் பொருள்.
செப்பமும் நாணும் ஒருங்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நடுவு நிலைமையும், பழி நாணுதலும், ஒருங்கே.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இல்பிறந்தார் இவையிரண்டும் இயல்பாக உடையரென்றது.
பரிப்பெருமாள்: நடுவு நிலைமையும், பழி நாணுதலும், ஒருங்கு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இல்பிறந்தார் இவ் இரண்டும் இயல்பாக உடையரென்றது.
பரிதி: நடுவு நிலைமையும், நாணுடைமையும் கைவராது என்றவாறு.
காலிங்கர்: நாம் கீழ் விரித்துச் சொன்ன நடுவுநிலைமையும் மேல் விளங்கக் காட்டி விடுவதாகிய நாணுடைமையும் இவை இரண்டும் ஒருங்கு உளவாதல்.
பரிமேலழகர்: செம்மையும் நாணும் சேர.
பரிமேலழகர் குறிப்புரை: செம்மை - கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறாகாமை. நாண் - பழிபாவங்களின் மடங்குதல். இவை இற்பிறந்தார்க்காயின் ஒருவர் கற்பிக்க வேண்டாமல் தாமே உளவாம், பிறர்க்காயின் கற்பித்த வழியும் நெடிது நில்லா என்பதாம். [மடங்குதல் - செய்வதற்கு அஞ்சுதல்; பிறர்க்காயின் - நற்குடியில் தோன்றாதவர்]
'செம்மையும் நாணும் ஒருங்கே' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஒழுங்கும் நாணமும் சேர்ந்து இருக்கும்', 'நடுவு நிலைமையும் இழிசெயலுக்கு நாணும் நாணமும் ஒருசேர', 'உபகாரக் குணமும் பழிபாவங்களுக்கு அஞ்சி நடக்கும் தன்மையும் சேர்ந்தாற்போல்', 'கருத்துஞ் செயலும் ஒத்திருப்பதாகிய செம்மையும், பழிபாவங்கட்கு அஞ்சும் நாணமும் ஒருங்கே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
செம்மையும், இழிசெயலுக்கு அஞ்சும் நாணமும் ஒருசேர என்பது இப்பகுதியின் பொருள்.
|