பெருக்கத்து வேண்டும் பணிதல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செல்வம் பெருகிய காலத்து எல்லார்க்கும் பணிதல் வேண்டும்:
பரிப்பெருமாள்: செல்வம் பெருகிய காலத்து எல்லார்க்கும் பணிந் தொழுகுதல் வேண்டும்:
பரிதி: தனக்கு வாழ்வு வந்தால் எல்லாரிடத்தும் வணக்கம் வேண்டும்;
காலிங்கர்: குடிப்பிறந்தோர்க்கு என்றும் செல்வச் சிறப்பின்கண் வேண்டும், அச்செல்வம் செருக்கின இடத்தும் அதற்கு மறுதலையாகிய பணிவு உடையவர் ஆதல்;
பரிமேலழகர்: குடிப்பிறந்தார்க்கு நிறைந்த செல்வம் உளதாயவழி யாவர்மாட்டும் பணிவு வேண்டும்;
'செல்வம் பெருகிய காலத்து பணிவு வேண்டும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'குடிப்பிறந்தார் வளமான காலத்தில் யாவர்க்கும் பணிதல் வேண்டும்', 'செல்வம் நிறைந்தவர்களாக இருக்கும்போது யாரிடத்தும் பணிவுடையவர்களாக நடந்து கொள்ள வேண்டும்', 'நல்ல செல்வமுள்ளபோது, யாவர்க்கும் பணிவாக நடத்தல் வேண்டற் பாலதே', 'நல்ல குடியில் பிறந்தவருக்கு உயர்ந்த நிலையில் இருக்கும்போது யாவரிடம் பணிதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
வளமான காலத்தில் பணிதல் வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.
சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செல்வம் மிகவுஞ் சுருங்கின காலத்துத் தமது தன்மை குறைவுபடாமல் ஒழுகல் வேண்டும்.
பரிப்பெருமாள்: செல்வம் மிகவுஞ் சுருங்கின காலத்துத் தமது தன்மை குறைவுபடாமல் ஒழுக வேண்டும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, திரு உடையார் பணிவு புகழப்படும்; திரு இலாதார் பணிதல் இகழப்படும்; ஆதலான் நல்கூர்ந்த காலத்தும் தன்மை குறைவன செய்யற்க என்றது.
பரிதி: மிடியனானால் தாழ்ச்சி சொல்லாமல் கனமாய் இருக்க வேண்டும் என்றவாறு. [கனமாய் - கனவான் போல]
காலிங்கர்: இனி அச்செல்வம் நீங்கிய மிக்க வறுமைக்கண் வேண்டும், அவ்வறுமையால் பிறர்க்குத் தாம் குறைகூற மானித்து ஒழுகும் மேம்பாடு என்றவாறு.
பரிமேலழகர்: குறைந்த நல்குரவுளதாயவழிப் பணியாமை வேண்டும்,
பரிமேலழகர் குறிப்புரை: பணியாமை - தாழ்வு வாராமற் பழைய உயர்ச்சிக்கண்ணே நிற்றல். செல்வக்காலை அஃது உயர்ச்சி செய்யத் தாம் தாழ்தலும், அல்லற் காலை அது தாழ்வுசெய்யத் தாம் உயர்தலும் வேண்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் தாம் தாழ்தற்கு ஏதுவாயின செய்யாமைச் சிறப்புக் கூறப்பட்டது.
'செல்வம் மிகவுஞ் சுருங்கின் காலத்துத் தமது தன்மை குறைவுபடாமல் ஒழுகல் வேண்டும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஆனால் வளம் குறைந்த வறுமைக்காலத்தில் பெருமித உணர்வு கொள்ள வேண்டும்', 'சிறுமை தரக்கூடிய தரித்திரமுள்ளவர்களாக இருக்கும்போது (அதற்காகப் பணிந்துவிடாமல்) நிமிர்ந்து நின்று சமாளிக்க வேண்டும். (என்பது மானமுடைமை.)', 'பொருள் மிகக்குறைந்த காலத்துத் தகாதார்க்குத் தாழ்ந்து தன்னை இழிவுபடுத்திக் கொள்ளாது தனது குடியுயர்வைக் காப்பாற்ற வேண்டும்', 'செல்வம் சுருங்கிய காலத்தில் தாழ்வு வராமல் இருத்தல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
வளம் மிகக்குறைந்த காலத்தில் பெருமித உணர்வு கொள்ள வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.
|