இளிவரின் வாழாத மானம் உடையார்ஒளி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இளிவரவு உண்டானால் உயிர் வாழாத மானமுடையாரது புகழை;
பரிப்பெருமாள்: இளிவரவு உண்டானால் உயிர் வாழாத மானமுடையாரது புகழை;
பரிதி: ஒரு மான ஈனம் வந்தால் உயிர்விடுவார் புகழை;
காலிங்கர்: (8) ......................................இவரது பெருமை விளங்கும் தோற்றம் குறிக்கொண்டு;
பரிமேலழகர்: தமக்கு இழிவு வந்துழிப் பொறுத்து உயிர் வாழாது அதனை நீத்த மானமுடையாரது புகழ் வடிவினை; [அதனை நீத்த - உயிரினைத் துறந்த]
'இழிவு வந்துழிப் பொறுத்து உயிர் வாழாது அதனை நீத்த மானமுடையாரது புகழை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தமக்கு இழிவுவரின் உயிர்வாழாத மானமுடையவரது புகழ் வடிவத்தை', 'மானக்கேடு உண்டானால் உயிரைத் துறந்து விடுகிற மானிகளுடைய பெருமையை', 'மானக்கேடு வந்தவிடத்து உயிர்வாழ மாட்டாதாருடைய புகழ்வடிவத்தை', 'தமக்கு இழிவுவந்தபோது உயிர் வாழாது அதனை விட்ட மானமுடையாரது புகழ்வடிவினை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பெருமைக்கு இழிவுவந்தபோது உயிர் வாழாத மானமுடையவரது புகழ் விளங்கும் தோற்றத்தை நினைந்து என்பது இப்பகுதியின் பொருள்.
தொழுது ஏத்தும் உலகு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தொழுது துதிக்கும் உலகு.
பரிப்பெருமாள்: தொழுது துதிக்கும் உலகு.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் சாவார் என்றதனால் பயன் என்னை என்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிதி: உலகத்தார் ஏத்துவர் என்றவாறு.
காலிங்கர்: உள்ளத்தால் புகழ்ந்துரைப்பர் உலகத்தோர் என்றவாறு,
பரிமேலழகர்: எஞ்ஞான்றும் தொழுது துதியாநிற்பர் உலகத்தார். [துதியாநிற்பர்-வழிபடுவர்]
பரிமேலழகர் குறிப்புரை: 'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வானவூர்தி - எய்துவர,' (புறநா.27) ஆகலின், துறக்கச் செலவு சொல்ல வேண்டாவாயிற்று. இவை நான்கு பாட்டானும் மானப் பொருட்டாய இறப்பினது சிறப்புக் கூறப்பட்டது. [துறக்கச் செலவு- சொர்க்கத்தை அடைதல்]
'தொழுது துதிக்கும் உலகு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உலகோர் கைகூப்பித் தொழுது போற்றுவர்', 'உலகம் வாழ்த்தி வணங்கும்', 'உலகத்தவர் வணங்கிப் போற்றுவர்', 'எப்பொழுதும் உலகு தொழுது போற்றும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
உள்ளத்தால் புகழ்ந்துரைப்பர் உலகோர் என்பது இப்பகுதியின் பொருள்.
|