கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர்க்குக் கொடுத்தலும் தாம் நுகர்தலும் இல்லாதார்க்கு;
பரிப்பெருமாள்: பிறர்க்குக் கொடுத்தலும் தாம் நுகர்தலும் இல்லாதார்க்கு;
பரிதி: தானும் உண்டு தன்மமும் செய்யாதவன்;
காலிங்கர்: ஒருவர் பொருள் பெற்றதனால் பயன் யாதோ எனின், நாள்தோறும் பிறர்க்கு உபகரித்தலும் தாம் உண்டு இன்பமுறுதலும் அன்றே; அதனால் அவை இரண்டும் இல்லாத அரும்பாவிக்கு;
பரிமேலழகர்: பிறர்க்கு ஈவதும் தாம் நுகர்வதுமாய இரண்டு செய்கையும் உடையரல்லாதார்க்கு;
பரிமேலழகர் குறிப்புரை: இன்பத்தினும் அறம் சிறந்தமையின்,கொடுத்தல் தொழில் முற்கூறப்பட்டது.
'பிறர்க்குக் கொடுத்தலும் தாம் நுகர்தலும் இல்லாதார்க்கு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிறர்க்கு வழங்கான் தானும் உண்ணான் இவனுக்கு', 'பிறர்க்குக் கொடுப்பதும், தாம் நுகர்வதும் ஆகிய இரு செயலும் இல்லாதவர்க்கு', 'பிறருக்குக் கொடுப்பதோ தாம் அனுபவிப்பதோ இரண்டுமில்லாதவர்கள்', 'பிறர்க்குக் கொடுத்தலும் தான் துய்த்தலும் இல்லாதவர்க்கு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பிறர்க்கு வழங்குதலும் தாம் துய்த்தலும் இல்லாதவர்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.
அடுக்கிய கோடிஉண் டாயினும் இல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பல கோடிப் பொருள் உண்டாயினும் அவை இன்மையோ டொக்கும்.
பரிப்பெருமாள்: பல கோடிப் பொருள் உண்டாயினும் அவை இன்மையோ டொக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நல்கூர்ந்தாரோடு ஒப்பர் என்றது.
பரிதி: திரவியம் கோடி உண்டாயினும் இல்லை என்றவாறு.
காலிங்கர்: அளவிறந்த கோடி பொருள் உண்டு ஆயினும் யாதுமில்லை என்பதே துணிவு என்றவாறு.
பரிமேலழகர்: பலவாக அடுக்கிய கோடிப் பொருளுண்டாயினும் ஒன்றும் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: 'அடுக்கிய கோடி' என்றது ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. ஒன்றுமில்லார் போலப் பயனிரண்டும் இழத்தலின், 'இல்' என்றார். [பயனிரண்டும்-கொடுத்தலால் உண்டாகும் அறப்பயனும் துய்ப்பதால் உண்டாகும் இன்பப் பயனும்.]
'பல கோடிப் பொருள் உண்டாயினும் அவை இன்மையோடு ஒக்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பலகோடி இருந்தால் என்ன?', 'பல கோடி பொருள் உண்டாயினும் ஒருபயனுமில்லை', 'கோடி கோடியாகச் செல்வத்தைச் சேர்த்து வைத்தாலும் அவர்களுக்கு அதனால் ஒரு பயனுமில்லை', 'தொகுத்த பல கோடிப் பொருள் இருப்பினும் அவை யாவும் இல்லாதவனவேயாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தொகுத்த பல கோடிப் பொருள் சேர்த்து வைத்தாலும் அவை யாவும் இல்லாதவனவே என்பது இப்பகுதியின் பொருள்.
|