அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளற்றார்க்கு யாதானு மொன்றைக் கொடாதவனுடைய செல்வம்;
பரிப்பெருமாள்: வறியவர்க்கு ஒன்றைக் கொடுக்க மாட்டாதான் பெற்ற பெரிய செல்வம்;
பரிதி: செல்வம் தேடி வைத்து அறஞ் செய்யாதவன் என்போலும் எனின்;
காலிங்கர்: தம்மாட்டு ஒன்று அற்றாராகிய வறியோர்க்கு ஒன்று உதவாதான் பெற்ற பெருஞ்செல்வமானது;
பரிமேலழகர்: ஒரு பொருளும் இலராயினார்க்கு அவர் வேண்டியதொன்றனைக் கொடாதானது செல்வம் கொன்னே கழிதல்; [கொன்னே கழிதல்-பயனின்றிப் போதல்]
'பொருளற்றார்க்கு யாதானு மொன்றைக் கொடாதவனுடைய செல்வம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஏழைக்கு யாதும் ஈயாதவனது செல்வம்', 'பொருளில்லாத வறியவர்க்கு அவர் வேண்டியதொன்றைக் கொடாதவனது செல்வம் பயனின்றிக் கழிதல்', 'ஏழைகளுக்கு உதவி செய்யாதவன் பெற்றுள்ள பெருஞ்செல்வம்', 'வறியவர்களுக்கு ஒன்றைக் கொடுக்க மாட்டாதவனுடைய செல்வம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பொருளில்லாதவர்க்கு யாதும் கொடாதவனது பெருஞ்செல்வம் என்பது இப்பகுதியின் பொருள்.
மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிக்க அழகினைப் பெற்றாளொருத்தி தமியளாய் முதிர்ந்தாற்போலும். [தமியளாய் - தனித்தவளாய்]
மணக்குடவர் குறிப்புரை: இது செல்வம் தானும் ஒருபயன் பெறாதென்றது.
பரிப்பெருமாள்: மிக அழகினைப் பெற்ற ஒருத்தி கொழுநனை இன்றி மூத்துத் தமியளாக் கழிந்தது போலும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தமியள் மூத்தல்- தன்னைப் பிறர்க்கு ஈவார் இன்றித் தமியளாகி மூத்தல். இது செல்வந்தானும் ஒரு பயன் பெறாது என்றது.
பரிதி: மிகவும் உருவ நலம் பெற்றவள் தனியே இருந்து மூத்தற்கு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: மிக நலம் பெற்றாள் கணவனோடு கலந்து இன்புறுதற்கு விதி இலளாகித் தானே தனியளாய் மூத்து இருந்த அத்தன்மைத்து. எனவே செல்வமிருந்தும் இருந்திலன் என்பது பொருளாயிற்று.
பரிமேலழகர்: பெண்டிரின் மிக்க நலத்தினைப் பெற்றாளொருத்தி கொடுப்பாரின்மையின் கொழுநன் இன்றித் தமியளாய் மூத்த தன்மைத்து. [பெண்டிரின் - பெண்களுள்ளே; தமியளாய் - தனித்தவளாய்]
பரிமேலழகர் குறிப்புரை: நலம் - வடிவின் நன்மையும் குணத்தின் நன்மையும். இரண்டும் ஒருங்கு பெறுதல் அரிதாகலின், 'பெற்றாள்' என்றார். கொடுப்பாரும் கொழுநனுமேயன்றித் தானும் பயன் இழந்து கழிந்த குமரியோடு உவமை கூறினமையின், தானும் ஏற்பானுமேயன்றிச் செல்வமும் பயனிழந்து கழியும் என்பதாயிற்று. [இரண்டும் - வடிவழகும் குணவழகும்; தானும்- பொருள் இல்லாதவர்க்கு வழங்காத தானும்; ஏற்பானும் - பொருளைப் பெறுபவனும்]
'மிக்க அழகினைப் பெற்றாளொருத்தி தமியளாய் முதிர்ந்தாற்போலும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அழகுள்ள குமரி மணவாது மூத்தது போலும்', 'அழகு, குணம் முதலிய பல நலங்களைப் பெற்ற குமரி மணந்து கொள்ளாமல் தனியளாய்க் கிழவியான தன்மையது', 'வெகு அழகு பெற்ற ஒரு பெண் (அந்த அழகை அனுபவிக்கும் கணவனில்லாமல்) தனியாகவே இருந்து கிழவியாகி விடுவதைப் போன்றது', 'அழகு மிகுந்த கன்னிகை கணவன் இல்லாமல் தனியாய் வாழ்ந்து மூப்படைந்தது போலாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அழகு மிகுந்த ஒரு பெண் மணவாது தனியளாய் மூத்தது போலும் என்பது இப்பகுதியின் பொருள்.
|