குடிசெய்வல் என்னும் ஒருவற்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குடியை யோம்புவனென்று கருதி முயலுமவனுக்கு;
பரிப்பெருமாள்: குடியை யோம்புவனென்று கருதி முயலுமவனுக்கு;
பரிதி: தன் குடியைப் பரிபாலனம் பண்ணவேணும் என்பானாகில்; [பரிபாலனம் - பாதுகாப்பு]
காலிங்கர்: தம் குடி தளராமல் பேணுதலைச் செய்வல் என்னும் அவ்வொப்பிறந்தோர்க்கு;
பரிமேலழகர்: என் குடியினை உயரச் செய்யக் கடவேன் என்று கொண்டு, அதற்கு ஏற்ற கருமங்களின் முயலும் ஒருவனுக்கு;
'குடியை யோம்புவனென்று கருதி முயலுமவனுக்கு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'குடும்பத்தை உயர்த்துவேன் என்பானுக்கு', 'என் குடும்பத்தை உயர்த்துவேன் என்று செயலில் முற்படும் ஒருவனுக்கு', ''குடித்தனத்தின் நிலைமையை உயர்த்துவேன்' என்று உறுதி கொள்ளும் ஒருவனுக்கு', 'என் குடியைச் செம்மைப்படுத்துவேன் என்று முயற்சி செய்யும் ஒருவனுக்கு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
என் குடும்பத்தை உயர்த்துவேன் என்று முயலும் ஒருவனுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.
தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தெய்வம் மடிதற்றுக் கொண்டு தான் முற்பட்டு முயலும். [தெய்வம்- (இங்கு)ஊழ்]
மணக்குடவர் குறிப்புரை: மடிதற்றல் - தொழில்செய்வார் ஆடையை இறுக உடுத்தல்.
பரிப்பெருமாள்: தெய்வம் மடிதற்றுக் கொண்டு தான் முற்பட்டு முயலும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மடிதற்றல் - தொழில்செய்வார் ஆடை உடுப்பதோர் திறன். மேல் சுற்றத்தார் நல்வினை இலராயின் ஓம்புமாறு என்னை என்றார்க்குத் தெய்வம் அருள் செய்யும் என்று கூறப்பட்டது. இத்துணையும் குடி ஓம்புதல் என்று கூறிற்று.
பரிதி: தெய்வம் பிரியமாகி வேண்டின வரங்கொடுத்து ரட்சிக்கும் என்றவாறு.
காலிங்கர்: தெய்வந் தானே மடியானதனைத் தாறு அறக்களைந்து மற்று அவன் உஞற்றின்கண் தான் வந்து முன் நிற்றலைச் செய்யும் என்றவாறு. [தாறு அறக்களைந்து- அடிக்குருத்து நீங்கும்படி; உஞற்றின்கண்-முயற்சியின் கண்]
காலிங்கர் குறிப்புரை: மடிதற்று என்பது மடியினைப் போக்கி என்றது.
பரிமேலழகர்: தெய்வம் ஆடையைத் தற்றுக் கொண்டு தான் முந்துற்று நிற்கும்.
பரிமேலழக குறிப்புரைர்: முயற்சியை அதன் காரணத்தால் கூறினார். தற்றுதல் - இறுக உடுத்தல். முன் நடப்பார் செயல் நியதிமேல் ஏற்றப்பட்டது.
'தெய்வம் ஆடையைத் தற்றுக் கொண்டு தான் முந்துற்று நிற்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தெய்வம் வரிந்து கட்டிக்கொண்டு முன்வரும்', 'அவனது வழிபடு தெய்வம், உடையை இறுக்கிக் கட்டிக்கொண்டு முன்னே வந்து நிற்கும்', '(உதவி செய்யத்) தெய்வம் கச்சை கட்டிக் கொண்டு தானே முன்வரும்', 'தெய்வம் ஆடையை இறுக்கிக் கட்டிக் கொண்டு உதவிசெய்ய முற்படும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தெய்வமே உடையை இறுக்கிக் கட்டிக்கொண்டு முன்னே வந்து நிற்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
|