இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மை இரப்பார்க்குக் கரத்தலின்றி யாதொன்றாயினும் ஈவர்;
பரிப்பெருமாள்: தம்மை இரப்பார்க்குக் கரத்தல் இன்றி யாதொன்றாயினும் ஈவர்;
பரிதி: இரப்பவர்க்கும் கரவாது கொடுப்பார்;
காலிங்கர்: தம்மாட்டு இரப்போர்க்கு உள்ளதொன்று ஈவதும் செய்வர்; தம்மாட்டு இரப்போர்க்கு ஒன்று ஈயுமிடத்தும் கரவார்;
பரிமேலழகர்: தம்மை இரப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றனைக் கரவாது கொடுப்பர். [கரவாது -மறைக்காமல்]
'தம்மை இரப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றனைக் கரவாது கொடுப்பர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிச்சைக்காரர்களுக்கு ஒளிக்காது கொடுப்பர்', 'தம்மிடம் இரப்பார்க்கு அவர் வேண்டிய உணவினைக் கொடுப்பார்கள்', 'ஆனால் கேட்பவர்களுக்கு இல்லையென்னாமல் சிறிதேனும் கொடுப்பார்கள்', 'இரப்பார்க்கு ஒளியாமல் எதனையும் கொடுப்பார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
இரப்பார்க்கு ஒளியாமல் பொருள் கொடுப்பார்கள் என்பது இப்பகுதியின் பொருள்.
கைசெய்தூண் மாலை யவர் இரவார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறரை இரவார் கையாலே உழவுத் தொழிலைச் செய்து உண்ணும் இயல்பினையுடையார்.
பரிப்பெருமாள்: பிறரை இரவார் கையாலே உழவுத் தொழிலைச் செய்து உண்ணும் இயல்பினையுடையார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: உழவினால் பயன் கூறுவார், முற்பட இல்லறம் செய்வது இவர் கண்ணது என்று கூறினார்.
பரிதி: தாங்கள் ஓரிடத்திலும் இரவார்; ஆதலால் உழவே நன்று என்றவாறு.
காலிங்கர்: பிறர்மாட்டுத் தாம் ஒன்று இரப்பதும் செய்யார்; யாவர், மற்று அவர் தமது கைக்கொண்டு இனிய தொழில் செய்யுமிடத்தும் கரவார்; மற்று இவ்வாழ்வினைத் தமக்கு இயல்பாக உடையவர் என்றவாறு.
பரிமேலழகர்: தம் கையால் உழுது உண்டலை இயல்பாகவுடையார் பிறரைத் தாம் இரவார்;
பரிமேலழகர் குறிப்புரை: 'செய்து' என்பதற்கு 'உழுதலை' என வருவிக்க. 'கைசெய் தூண் மாலையவர்' என்பது, ஒரு ஞான்றும் அழிவில்லாத செல்வமுடையார் என்னும் ஏதுவை உட்கொண்டு நின்றது. [செய்து என்னும் வினைக்கு ஏற்ப உழுதலை என்னும் செயப்படுபொருளை வருவித்துரைக்க; ஒருஞான்றும் - ஒருபோதும்]
'கையாலே உழவுத் தொழிலைச் செய்து உண்ணும் இயல்பினையுடையார் பிறரை இரவார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உழுதுண்ணும் உழவர் பிச்சை எடுக்கார்', 'தம் கையால் உழவுத் தொழிலைச் செய்து உண்ணுதலை இயல்பாகக் கொண்ட உழவர்கள் பிறரிடம் இரக்க மாட்டார்கள்', 'சொந்த உழைப்பினால் சோறுண்ணும் இயல்புடைய உழவாளிகள் பிறரிடத்தில் பிச்சை கேட்க மாட்டார்கள்', 'தம் கையால் உழுது உண்டலை இயல்பாகவுடையார், பிறரிடம் சென்று இரவார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தம் கையால் உழவுத் தொழிலைச் செய்து உண்டலை இயல்பாகவுடையார், பிறரிடம் சென்று இரவார் என்பது இப்பகுதியின் பொருள்.
|