இரத்தலும் ஈதலே போலும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இரந்து சேறலும் கொடுப்பதனோடு ஒக்கும்; [இரந்து சேறலும்- கேட்கச் செல்லுதலும்]
ஈதலேபோலும் என்பதற்குக் கரத்தல் கனவிலுந் தேற்றதார் என்றமையால் இரப்பான் தாரானென்று கொள்ளப்படும்.
பரிப்பெருமாள்: இரந்து சேறலும் கொடுப்பதனோடு ஒக்கும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: ஈதலேபோலும் என்றது இரந்தேம் என்று சிறுமை உறுதலின்றி உயர்ந்தாரைப் போலப் பெருமிதத்தர் ஆவர் என்றது. மேல் இகழாது ஈவார் மாட்டு இரக்கல் ஆம் என்றார்; அவர் மூவகையர் ஆதலின் முற்பட உதவுவர்மாட்டு இரக்கல் ஆம் என்று கூறப்பட்டது. [இரக்கல் - இரத்தல்]
பரிதி: தேகி என்பது நல்லதே;
காலிங்கர்: இரத்தலும் ஈதலே போலும் இனிமையை உடைத்து;
பரிமேலழகர்: ஒன்றனை இரத்தலும் வறியார்க்கு ஈதலே போலும்.
பரிமேலழகர் குறிப்புரை: உம்மை ஈண்டும் அவ்வாறு நின்றது. தான் புகழ் பயவாதாயினும் முன்னுளதாய புகழ் கெட வாராமையின் 'ஈதலே போலும்' என்றார், ஏகாரம் - ஈற்றசை.
[உம்மை இரத்தலின் இழிவை விளக்கி நின்றது]
'ஒன்றனை இரத்தலும் வறியார்க்கு ஈதலே போலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சென்று கேட்பது கொடுப்பதை ஒக்கும்', 'தானம் கேட்பதையும் (அவர்கள் அவன் தமக்கு தானம்) கொடுப்பதைப் போலவே (வரவேற்பார்கள்)', 'பிச்சை கேட்பதும் பிச்சை கொடுப்பதை யொக்கும்', 'ஒன்றனை வேண்டுதலும் பிறர்க்குக் கொடுத்தல் போன்றதாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
கேட்பதும் கொடுத்தல் போன்றதாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டு.
மணக்குடவர் குறிப்புரை: ஈதலேபோலும் என்பதற்குக் கரத்தல் கனவிலுந் தேற்றதார் என்றமையால் இரப்பான் தாரானென்று கொள்ளப்படும்.
பரிப்பெருமாள்: கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டு.
பரிப்பெருமாள் குறிப்புரை: கரத்தல் கனவிலுந் தேறாதார் என்றமையால் உதவுவார் என்று கொள்ளப்படும்.
பரிதி: அது எதனால் என்னில் பொல்லாரிடத்தில் கேளாது இருப்பாராகில் என்றவாறு.
காலிங்கர்: அஃது எவ்விடத்து எனில், இல்லை என்னும் சொல்லினைக் கனவிலும் அறியாதவரிடத்து; எனவே இரவு பகல் என்னும் பொழுது வரைவின்றி எப்பொழுதும் பிறர்மாட்டு இரக்கமுடைய இயல்பினரிடத்து என்றவாறு.
பரிமேலழகர்: தமக்குள்ளது கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டுச் சென்று.
'கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டுச் சென்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஒளிப்பதைக் கனவிலும் அறியாதாரிடம்', '(வைத்துக் கொண்டு) கேட்பவர்களுக்கு இல்லையென்னும் தன்மையைக் கனவிலும் அறியாதவர்களிடத்தில் (ஒருவன் சென்று)', 'உள்ளதை ஒளிக்கக் கனவிலும் அறியாதார்பால்', 'உள்ளது ஒளித்தலைக் கனவின் கண்ணும் அறியாதாரிடம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
மறைப்பதைக் கனவிலும் அறியாதாரிடம் என்பது இப்பகுதியின் பொருள்.
|