இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1062இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்

(அதிகாரம்:இரவு அச்சம் குறள் எண்:1062)

பொழிப்பு (மு வரதராசன்): உலகத்தைப் படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக!மணக்குடவர் உரை: துப்புரவு இல்லாக்கால் இறந்துபடாதே பிறர்மாட்டு இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின், உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும்.
இஃது இரக்குமதனின் இறத்தல் அமையு மென்றது.

பரிமேலழகர் உரை: உலகு இயற்றியான் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் - இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன்கண் வாழ்வார்க்கு முயன்று உயிர் வாழ்தலையன்றி, இரந்தும் உயிர் வாழ்தலை வேண்டி விதித்தானாயின்; பரந்து கெடுக - அக்கொடியோன் தானும் அவரைப் போன்று எங்கும் அலமந்து கெடுவானாக.
(மக்களுயிர்க்கெல்லாம் வாழ்நாளும், அதற்கு வேண்டுவதாய உண்டியும், அதற்கு ஏதுவாய செய்தொழிலும், பழவினை வயத்தால் கருவொடுங் கலந்தவன்றே அவன் கற்பிக்கும் அன்றே? அவற்றுள் சில உயிர்க்கு இரத்தலையும் ஒரு செய் தொழிலாகக் கற்பித்தானாயின், அத்தீவினையால் தானும் அத்துன்பமுறல் வேண்டும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவ்விரவின் கொடுமை கூறப்பட்டது. )

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: இவ்வுலகத்தைப் படைத்தவன் அதிலுள்ளவர் முயற்சிசெய்து பிழையாது பிச்சைஎடுத்து உயிர் வாழ்தலை விதித்துள்ளானெனின், அவனும் அந்த இரவலர் போல எங்கும் அலைந்து கெடுவானாக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், உலகு இயற்றியான் பரந்து கெடுக.

பதவுரை: இரந்தும்-பிச்சையெடுத்தும், ஏற்றும், கெஞ்சிநின்றும்; உயிர்வாழ்தல்-உயிரோடிருத்தல்; வேண்டின்-வேண்டுமாயின், விரும்பினால்; பரந்து-எங்கும் அலமந்து, எங்கும் அலைந்து திரிந்து, சுழன்று; கெடுக-அழிவானாக; உலகுஇயற்றியான்-உலகம் படைத்தவன்.


இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துப்புரவு இல்லாக்கால் இறந்துபடாதே பிறர்மாட்டு இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின்;
பரிப்பெருமாள்: துப்புரவு இல்லாக்கால் இறந்துபடாதே பிறர்மாட்டு இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின்;
பரிதி: இரந்து உயிர்வாழச் சென்று கேட்ட இடத்திலும் இல்லை என்பது;
காலிங்கர்: குடிப்பண்பினார்க்குத் தமக்கு ஒன்று இரத்தல் இளிவரவு என்று ஒழியாது புறத்து ஈவாரைத் தேடி எங்கும் பரந்து சிறிது இரங்கிக்கொண்டும் தமதுயிர் வாழ வேண்டுவதாயின்;
பரிமேலழகர்: இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன்கண் வாழ்வார்க்கு முயன்று உயிர் வாழ்தலையன்றி, இரந்தும் உயிர் வாழ்தலை வேண்டி விதித்தானாயின்;

'பிறர்மாட்டு இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிச்சையாலும் வாழ ஏற்படுத்தி இருப்பின்', 'பிறரிடம் இரந்து வாழ்தலையே தொழிலாக ஒருவனுக்கு உரிமைப்படுத்தினானாயின்', '(பலர்) பிச்சையெடுத்தேதான் பிழைக்க வேண்டும் என்றால்', 'பிறரிடம் இரந்தும் உயிர் வாழ்தலை (உலகைப் படைத்தவன்) விரும்பினால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பிறரிடம் இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

பரந்து கெடுக உலகியற்றி யான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இரக்குமதனின் இறத்தல் அமையு மென்றது.
பரிப்பெருமாள்: உலக நடையை இவ்வாற்றால் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இரக்குமதனின் இறக்க அமையு மென்றது. இவை மூன்றினானும் இரவினால் வரும் குற்றம் கூறப்பட்டது.
பரிதி:.........பிரமன் திரிந்து கெடுக என்றவாறு.
காலிங்கர்: இவ்வுலகினைப் படைத்தோன் தான் உயிர் வாழாது பரந்துகெட்டு விடுக; காலிங்கர் குறிப்புரை: என்பதனால் உலகத்துச் சிலரை உயர்ந்தோராகப் படைக்கும் விதாதா ஆகியும் பின்னும் அவர்கள் இயல்பாவதாயின் அவரும் இழந்தோரே ஆகலின் பெரிதும் வஞ்சனை உடைத்து இவன் படைப்பு என்றவாறு. [விதாதா- பிரம்மாவின் பெயர்]
பரிமேலழகர்: அக்கொடியோன் தானும் அவரைப் போன்று எங்கும் அலமந்து கெடுவானாக. [கொடியோன் என்றது படைத்தவனை; அவரைப் போன்று -இரந்து பிழைப்பவர்களை ஒத்து; அலமந்து - சுழன்று]
பரிமேலழகர் குறிப்புரை: மக்களுயிர்க்கெல்லாம் வாழ்நாளும், அதற்கு வேண்டுவதாய உண்டியும், அதற்கு ஏதுவாய செய்தொழிலும், பழவினை வயத்தால் கருவொடுங் கலந்தவன்றே அவன் கற்பிக்கும் அன்றே? அவற்றுள் சில உயிர்க்கு இரத்தலையும் ஒரு செய் தொழிலாகக் கற்பித்தானாயின், அத்தீவினையால் தானும் அத்துன்பமுறல் வேண்டும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவ்விரவின் கொடுமை கூறப்பட்டது. [அதற்கு ஏதுவாய - அவ்வாழ்நாளிற்குக் காரணமான; அதற்கு-உண்டிக்கு; அவன் -படைத்தவன்; அவற்றுள் - வாழ்நாள், உண்டி, செய்தொழில் என்பவற்றுள்]

'உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'படைத்தவன் கெட்டு அலைவானாக', 'அங்ஙனம் செய்த இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் தானும் திரிந்து கெடுவானாக. (இறைவன் அங்ஙனம் படைத்திரான் ஆதலின், இரவாமல் உழைத்துண்க என்பது கருத்து)', '(அப்படிப்பட்ட நிலைமையுள்ள இந்த) உலகத்தை உண்டாக்கினவன் (யாரோ அவன் பிச்சைக்காரர்களைப் போல்) அலைந்து திரிந்து (பிச்சை கிடைக்காமல்) அழிந்து போகட்டும்', 'உலகைப் படைத்தவன் எங்கும் திரிந்து அழிவானாக' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உலகத்தைப் படைத்தவன் மிகக் கெட்டு அழிவானாக என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
பிறரிடம் இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் உலகியற்றியான் மிகக் கெட்டு அழிவானாக என்பது பாடலின் பொருள்.
'உலகியற்றியான்' யார்?

இத்துணை மானமழியச் செய்வது எது? எதற்காக?

இவ்வுலகைப் படைத்தவன் சிலர் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டும் என்ற நிலையில் வைத்திருப்பானேயானால், அவனும் இரப்பவரைப் போல எங்கும் அலைந்து திரிந்து கெடுவானாக.
பொருளற்ற நிலையில் வறுமை ஏற்படுகின்றது; வறுமையால் மான வாழ்க்கை தடைப்பட்டு பிறர்மாட்டு இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாறு சிலர் வாழ்க்கை அமைந்துவிடுகிறது. உயிர்நிலைப்பதற்காகப் பொருள்வேண்டி 'இல்லை போ!' என்று சொல்பவரிடமும் கெஞ்சும்நிலை உண்டாகிறது; உள்ளம் நோகும்படியான பேச்சுகளைக் கேட்டுக்கொள்ள நேரிடுகிறது; இகழ்ச்சியையும் எள்ளி நகையாடல் செய்யப்படுவதையும் தாங்கிக் கொள்ள வேண்டியதாகிறது. வறுமையுற்றவன் அனறைக்கன்று வரப்போகிற கொல்வதுபோன்ற பசித்தீயை எங்ஙனமாயினும் தணிப்பதற்காக, புறத்து ஈவாரைத் தேடி, இழிவுகளை எதிர்கொண்டு இரத்தல்வழி பொருள்பெற முயல்கிறான். பல்லெல்லாம் தெரியக் காட்டி யார்யார் முன்னாலோ கையேந்தி நிற்கிறான் அவன்.
இரந்து கேட்டு உண்டு வாழும் இக் கொடுமையைக் காணும் வள்ளுவர் மனம் நொந்து. மானந்தீர பிறரிடம் சென்று பொருள் கேட்டுப்பெற்று வாழ்வு நடத்த வேண்டுமென்ற நிலை இருக்குமானால் அதை உண்டாக்கிய இறைவனும் இரவலன் போல் அலைந்து கெடட்டும் எனப் பாடுகின்றார். இப்பாடலில் சொல்லப்படும் இரப்போர், என்ன முயன்றும் ஊழின் பெருவலியால் தாக்குண்டு பொருள்வாழ்க்கையில் தோல்விகண்டோர், நோயுற்று உடல்வலி இழந்து பொருள் செய்ய இயலாதார், ஒப்புரவு செய்தலையே கடனாகக் கொண்டு வறுமைநிலை அடைந்த பெரியோர் போன்றோராவர். உடற்றும் பசி தீர்க்க இவர்களுக்கு இரப்பதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி இரப்பது சிறிது காலத்திற்காக மட்டுமே இருக்கலாம். ஆயினும் இரந்து வாழும் உயிர் வாழ்க்கையைக் கண்ட வள்ளுவர் வெகுண்டெழுகிறார்; கலகக்காரராக மாறிவிடுகிறார்; குமுறிய உள்ளத்தோடு படைத்தவன் அழியட்டும் என்று சாபக் குரல் கொடுக்கிறார்.

வறுமையை அறவே வெறுக்கும் வள்ளுவர் அதை 'இன்மையெனவொரு பாவி' எனத் திட்டுவார். இல்லாமை காரணமாக, இரந்தால் அன்றி உயிர் வாழமுடியாதோரும் உலகில் இருக்கின்றனர். உலகின் சமூக அமைப்பு ஏற்றத் தாழ்வுகள் கொண்டதாக உள்ளது. இவ்வுலகத்தில் உழைத்துயிர் வாழ்வோரும் இரந்துயிர்வாழ்வோரும் கலந்துள்ளனர். இது படைப்பின் குற்றமா? கடவுள் படைத்த உலகம் சமமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? இல்லை. ஆனாலும் முயன்று பொருளீட்டி வாழ்தலே இயற்கை; ஓருயிர் தன்போலும் மற்றோர் உயிர்பால் இரந்து பசியாற்றுவது செயற்கை என்ற கொள்கை உடைய வள்ளுவர் இரத்தல் காட்சியை வெறுக்கிறார்.
உலகம் படைக்கப்பட்டதன் நோக்கம் நமக்குத் தெரியாது. பொருள் வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன என்பது தெரியும். நாம் நாளும் காணும் கொடுமைகளுக்கும் தீமைகளுக்கும் இந்த உலகப்படைத்த கடவுளை உலகோர் பழிப்பதைக் கேட்கிறோம். எல்லாம் அவன் செயல்; அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதால் இந்த அவல நிலைக்குக் காரணமாக உள்ளவன் இறைவன் என்று என நாம் நினைக்கிறோம். வள்ளுவரும் நினைத்தார். எனவே, இறைவனும் இரவலன்போல் அல்லற்பட்டால்தான் இரக்கும்நிலையின் கொடுமையும் இழிவும் தெரியும் என்று அவர் எண்ணினார் போலும். அந்நிலையில் அவருடைய உள்ளம் குமுறும் எரிமலையாகிறது. உணர்ச்சிப் பெருக்கில் அவருடைய சொற்கள் நெருப்பை உமிழ்கின்றன: 'உலகத்தைப் படைத்தவன், இரந்தும் உயிர் வாழுமாறு சிலரைப் படைத்திருந்தால், அவன் இரப்பவரைப் போன்று எங்கும் அலைந்து கெடுக' எனச் சீறுகிறார்.

என்ன முயற்சி செய்தாலும் சிலர் பொருள்வாழ்க்கையில் தோற்றுப் போய் அதில் இருந்து மீளமுடியாமல் வறியவராகப் போவதும் உண்டு; இது வகுத்தான் வகுத்த வகை; ஊழின் பெருவலியால் அப்படி ஒருநிலை வரும்போது அவர்கள் இரவை மேற்கொள்கின்றனர். இதனாலேயே நல்குரவால் வருகின்ற பெருங்கேட்டால் ஒருவர் இரந்துசெல்வதற்குக் கடவுளே பொறுப்பு என்று வள்ளுவர் கருதுகிறார். இறை நம்பிக்கையை கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் நன்கு வலியுறுத்திய வள்ளுவர் படைத்தவனையே கெட்டு அலையட்டும் எனத் தூற்றியிருப்பது நற்பேறு வாய்க்கப்பெறாத ஏழைகள் மேல் அவருக்கு இருந்த பரிவுணர்வே காரணம்.

'இரப்பவர் இல்லா உலகிலுள்ள மாந்தரின் அசைவுகள் எல்லாம் உயிர்ப்பும் உணர்வுமில்லா வெறும் பொம்மலாட்டங்கள் போல்வனவாகும்' (1058) என்று இரப்போரும் உலகிற்குத் தேவை என்று சொன்ன வள்ளுவரே இரப்பவர் படும் துயரங்களைக் காணப் பொறுக்காமல் பொங்கிவிடுகிறார். உயர்வு-தாழ்வுகளைக் கண்ணெதிரே கண்டு, அதற்கு விளக்கம் தர இயலாமலும், வறுமையாளர்கள் படும் துயரங்களைப் பார்த்து ஆற்றமுடியாமலும், உழன்ற அவரது உள்ளம் வெடிக்கிறது. குணமெனும் குன்றேறி நின்றவர்க்கே வறுமையால் உண்டாகும் சமுதாயக் கேடுகளை நினைக்கும்போது, அவருக்குள் பீரிடும் வெகுளியை கணமேனும் காக்க முடியாது போய்விடுகிறது. இதனினும் கடுமையான சொற்களையும் இதனினும் மிக்க சினத்தின் வெளிப்பாட்டையும் குறளில் வேறெங்கும் காண முடியவில்லை.

உழைத்து உயிர் வாழாமல் இரந்தும் உயிர் வாழும்படியாக உலகம் படைக்கப்படவில்லை என்பதை உணர்த்த இக்குறளுக்கு உரை வரைந்தவர்கள் பெருமுயற்சி கொண்டனர். வள்ளுவர் இறைவனைப் பழிப்பதாகச் சொல்வதும் இறைவனைக் குறை கூறுவதாகக் காட்டுவதும் நாம் கடவுளுக்குக் களங்கம் கற்பிப்பதாகும் என்றனர். இக்குறளை வள்ளுவர் கூற்றாகக் கொள்ளாமல் இரந்துகேட்பவன் வசை கூறுவதாகச் சிலர் உரைத்தனர். படைத்தானை வைவார்போல் உழையா மக்களைப் பழிக்கிறார் வள்ளுவர் எனவும் இக்குறளுக்கு பொருளுரைத்தனர்.

'உலகியற்றியான்' யார்?

'உலகியற்றியான்' என்றதற்கு உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன், உலக நடையை இவ்வாற்றால் கற்பித்த முதல்வன், பிரமன், இவ்வுலகினைப் படைத்தோன், இவ்வுலகத்தைப் படைத்தவன், இந்த உலகத்தைப் படைத்தவன், உலகத்தைப் படைத்தவன், இவ்வுலகத்தைப் படைத்த இறைவன், இந்த உலகை இயக்குகின்றவன், படைத்தவன், இவ்வுலகத்தைப் படைத்த இறைவன், உலகத்தை உண்டாக்கினவன், சட்டங்களை இயற்றிய ஆட்சியாளன், உலகைப் படைத்தவன், வாழ்வை வகுத்தவர்கள், படைத்த கடவுள், அமைப்புக்குக் காரணமான அரசன் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இயற்றியான் என்றது கடவுளையே குறித்ததாகப் பெரும்பான்மையோர் கூறினர். உலகுஇயற்றியவனைக் குறைகூறும் போக்கு சங்ககாலத்திலுமிருந்தது எனக்கூறி நற்றிணை, புறநானூற்றுப் பாடல்களில் உலகைப்படைத்தவன் பழித்துக் கூறப்படும் வரிகளை மேற்கோள் காட்டினர்:
ஐதேகு அம்ம இவ் உலகு படைத்தோனே (நற்றிணை 240 பொருள்: அதனைப் படைத்த கொடியோன்றானும் அதன் கண்ணே சென்று மிகுந்த துன்புற்று வருந்துவானாக) என்று பிரிவின்கண் மெலிவுற்ற தலைமகள் நொந்து கூறிய பாடலில் படைத்தவன் சபிக்கப்படுகிறான்.
உலகு படைத்தவனைப் பழித்துப்பாடும் இன்னொரு சங்கப்பாடல்:
ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே.
(புறநானூறு 194:5 பொருள்: ஒருமனையின்கண்ணேசாக்காட்டுப்பறை ஒலிப்ப ஒரு மனையின் கண்ணே மணத்திற்குக்கொட்டும் மிகக்குளிர்ந்த முழவினது ஓசை மிக ஒலிப்பக் காதலரோடு கூடின மகளிர் பூவணியை யணியப்பிரிந்த மகளிரது வருத்தத்தையுடைய உண்கண்கள் நீர்வார்ந்து துளிப்ப இப்பரிசு ஒத்து ஒவ்வாமைப்படப் படைத்தான் நிச்சிதமாக, அப்பண்பில்லாதோனாகியவன்) என்று படைத்தவன் பண்பில்லாதவன் என்கிறது இப்பாடல்.

வள்ளுவர் 'பரந்து கெடுக' என்று கடவுளைக் கடுமையாகத் திட்டியிருக்கமாட்டார் என்று கருதியவர்கள் இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு (இறைமாட்சி 385 பொருள்: பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்) என்ற குறளை மேற்கோள் காட்டி இயற்றியான் என்ற சொல், பொருளை இயற்றிப் பின்னர் அப்பொருள் கொண்டு நாடாளும் அரசனைத்தான் குறிப்பதாகும்; அது உலகு படைத்தவனையல்ல எனக் கூறினர். ஆனால் அக்குறள் பொருள் இயற்றுதலைப் பேசுவது; உலகியற்றியான்’ என்று கூறப்பட்டிருப்பதால் அது இறைவனையே சுட்டும்.

இவ்வாறாக உலகியற்றியான் என்பது கடவுளைக் குறித்ததே என்று பெரும்பான்மையரும் அரசன் அல்லது சமுதாய அமைப்பு என்று ஒரு சிலரும் கருத்துத் தெரிவித்தனர். இரந்துதான் வாழவேண்டும் என்ற தாழ்ந்த நிலையில் இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் வறுமையில் உழல்வாரைப் போன்று தானும் எங்கும் அலைந்து திரிந்து துன்பப்பட்டுக் கெடுவானாக என்று வள்ளுவரே தெய்வத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தார் என்பதான பொருளே நேரியதாகும்.

'உலகியற்றியான்' என்றது படைத்த கடவுள் எனப்பொருள்படும்.

பிறரிடம் இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் உலகத்தைப் படைத்தவன் மிகக் கெட்டு அழிவானாக என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இரவச்சம் கூறவந்த வள்ளுவர் இரப்பார்மேல் இரக்கங்கொண்டு அவர்களுக்காக வெகுள்கிறார்!

பொழிப்பு

பிறரிடம் கேட்டுப்பெற்றுத்தான் வாழ்வு நடத்துமாறு ஏற்படுத்தப்பட்டிருப்பின் அப்படிப்பட்ட உலகைப் படைத்தவன் கெட்டு அழிவானாக!