ஆவிற்கு நீரென்று இரப்பினும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இப் பசுவிற்குத் தண்ணீர் தருமினென்று பிறரை இரப்பினும்;
பரிப்பெருமாள்: இப் பசுவிற்குத் தண்ணீர் தருமினென்று பிறரை இரப்பினும்;
பரிதி: பசுவிற்குத் தண்ணீர் தாருங்கோள் என்று கேட்பினும்;
காலிங்கர்: தமக்கும் தம் கிளைக்கும் இரத்தல் இன்றி ஒரு பசுவிற்கு இத்துணை நீர்வேண்டும் என்று பிறர்பால் சென்று இரப்பது தகுமேயும், அன்றே; மற்று, அது சொல்லி இரப்பினும்;
பரிமேலழகர்: தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு, அறம் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல்வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்;
ஒரு பசுவிற்கு இத்துணை நீர்வேண்டும் என்று பிறர்பால் சென்று அது சொல்லி இரப்பினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆ' என்பதாகக் கொள்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'நீரின்றி இறக்கும் நிலையிலுள்ள பசுவிற்கென நீரினைப் பிறரிடம் இரந்து கேட்டாலும்', 'பசு மாட்டிற்குக் குடிப்பாட்டத் தண்ணீர் கொடுங்கள்' என்று கேட்டாலும்', 'பசுவிற்குத் தண்ணீர் வேண்டுமென்று இரந்தாலும்', 'பசுவிற்கு நீர் வேண்டுமென்று இரந்தாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பசுவிற்கு நீர் வேண்டுமென்று பிறரிடம் இரந்து கேட்டாலும் என்பது இப்பகுதியின் பொருள்.
நாவிற்கு இரவின் இளிவந்தது இல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாவினுக்கு இரத்தல்போல இளிவரவு தருவது பிறிது இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறத்திற்காக இரத்தலும் ஆகா தென்றது.
பரிப்பெருமாள்: நாவினுக்கு இரத்தல்போல இளிவரவு தருவது பிறிது இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறத்திற்காக இரத்தலும் ஆகா தென்றது. இவை மூன்றினாலும் இரத்தலைத் தவிர வேண்டும் என்று கூறப்பட்டது.
பரிதி: இரப்பது போல் ஈனம் இல்லை என்றவாறு.
காலிங்கர்: அதுவும் அவ்விரவினுட்படுதலின், குடிமரபாளர் தமது நாவிற்கு இரத்தலின் மேற்பட்ட இளிவரவு உடையது பிறிதொன்று இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: அவ்விரவுபோல ஒருவன் நாவிற்கு இளிவந்தது பிறிது இல்லை. [குடிமரபாளர் - வழிவழியாக நற்குடிப்பிறந்தோர்]
பரிமேலழகர் குறிப்புரை: ஆகாத்தோம்பல் பேரறமாகலின், 'ஆவிற்கு' என்றும், பொருள் கொடுத்துக் கொள்ள வேண்டாத எண்மைத்தாகலின் 'நீர்' என்றும், இரக்கின்றானுக்கு இளிவு அச்சொல் அளவே ஆதலின் 'நாவிற்கு' என்றும், அதுதான் எல்லா இளிவினும் மேற்படுதலின், 'இளி வந்தது இல்' என்றும் கூறினார். இதனான் அறனும் முயன்று செய்வதல்லது இரந்து செய்யற்க என்பது கூறப்பட்டது. [எண்மைத்து- எளிமை உடையது; அச்சொல்லளவே- இப்பசுவிற்குத் தண்ணீர்தரல்வேண்டும் என இரக்கும்சொல் மாத்திரமே; அதுதான் - அச்சொல் தான்; முயன்று செய்வதல்லது-முயற்சித்து பொருளை ஈட்டிச் செய்வதல்லாமல்]
'நாவினுக்கு இரத்தல்போல இளிவரவு தருவது பிறிது இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவ்விரத்தல் போல நாக்குக்கு இழிவு தருவது வேறில்லை', 'தானம் கேட்பதைவிடக் குறைவான காரியம் நாக்கிற்கு வேறெதும் இல்லை', 'அந்த இரப்புச்சொல் நாவினுக்கு இழிவைத் தருவதுபோல வேறொன்றுந் தருவதில்லை', 'அந்த இரத்தல் போல நாவிற்கு இழிவைத் தந்தது வேறொன்றும் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அந்த இரப்புச்சொல் போல நாவினுக்கு இழிவைத் தருவது வேறொன்றும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
|