இரவுஎன்னும் ஏமாப்பில் தோணி கரவுஎன்னும்
பார்தாக்கப் பக்கு விடும்
(அதிகாரம்:இரவச்சம்
குறள் எண்:1068)
பொழிப்பு (மு வரதராசன்): இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்துவிடும்.
|
மணக்குடவர் உரை:
ஒருவன் வறுமையாகிய கடலை நீந்திக் கடக்க அமைத்துக் கொண்ட இரத்தலாகிய அரணில்லாத தோணி, இரக்கப்பட்டார் மாட்டுக் கரத்தலாகிய கல்லோடே தாக்க இறந்துவிடும்.
இஃது நல்குரவு தீராமைக்குக் காரணங் கூறிற்று.
பரிமேலழகர் உரை:
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி - இவ்வறுமை என்னும் கடலை இதனால் கடத்தும் என்று கருதி ஒருவன் ஏறிய இரவு என்னும் சேமமற்ற தோணி; கரவு என்னும் பார் தாக்கப்பக்குவிடும் - அதன்கண் ஓடுங்கால் கரத்தல் என்னும் வன்னிலத்தோடு தாக்குமாயின் பிளந்துபோம்.
(முயற்சியால் கடப்பதனை இரவால் கடக்கலுற்றான் அதன் கரை காணாமையின், 'ஏமாப்பு இல் தோணி' என்றார். ஏமாப்பு இன்மை தோணி மேல் ஏற்றப்பட்டது. அது கடத்தற்கு ஏற்றது அன்மையானும் நிலம் அறியாது செலுத்தியவழி உடைதலானும், அதன்கண் ஏறற்க என்பதாம். இஃது அவயவ உருவகம்.)
இரா சாரங்கபாணி உரை:
வறுமைக் கடலைக் கடக்க ஒருவன் இரத்தல் என்னும் பாதுகாப்பற்ற தோணியிற் செல்லும்போது, இடையில் ஈயாது ஒளித்தல் என்னும் கற்பாறை மோதுமாயின், அத்தோணி சிதைந்தொழியும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
இரவுஎன்னும் ஏமாப்பில் தோணி கரவுஎன்னும் பார்தாக்கப் பக்குவிடும்.
பதவுரை: இரவு-ஏற்றல், கேட்டல்; என்னும்-என்கின்ற; ஏமாப்புஇல்-வலி இல்லாத; தோணி-படகு; கரவு-மறைத்தல்; என்னும்-என்கின்ற; பார்-வன்னிலம்; தாக்க-மோதுமானால்; பக்குவிடும்-பிளந்து போகும்.
|
இரவுஎன்னும் ஏமாப்பில் தோணி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் வறுமையாகிய கடலை நீந்திக் கடக்க அமைத்துக் கொண்ட இரத்தலாகிய அரணில்லாத தோணி;
பரிப்பெருமாள்: ஒருவன் வறுமையாகிய கடலை நீந்தி ஏறுவதாக அமைத்துக் கொண்ட இரத்தலாகிய அரணில்லாத தோணி;
பரிதி: இரவு என்னும் ஏமாப்பில் தோணி;
காலிங்கர்: இரவு என்று யாவராலும் இளித்து உரைக்கப்படுகின்ற இந்தச் சேமச் செறிவு இன்றிப் பெரிதும் நொய்தாகிய தோணி; [சேமச் செறிவு-பாதுகாப்புத் தோணி; நொய்தாகிய - இலேசான]
பரிமேலழகர்: இவ்வறுமை என்னும் கடலை இதனால் கடத்தும் என்று கருதி ஒருவன் ஏறிய இரவு என்னும் சேமமற்ற தோணி; [இதனால் கடத்தும்- இரத்தல் என்னும் காவலற்ற தோணியால் கடப்போம்; சேமம் அற்ற-காவல் இல்லாத]
'வறுமையாகிய கடலை நீந்திக் கடக்க அமைத்துக் கொண்ட இரத்தலாகிய அரணில்லாத தோணி' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிச்சை என்னும் துணையற்ற படகு', '(வறுமை என்னும் துன்பக் கடலைக் கடந்துவிட நினைத்து வறுமையுற்றவன் ஏறிச் செலுத்துகிற) பிச்சைகேட்டல் என்னும் நங்கூரமில்லாத படகு (போன்ற மனம் வைத்துக் கொண்டே)', 'பிச்சை எடுத்தல் என்னும் பாதுகாப்பற்ற தோணி', 'இரவு (யாசித்தல்) என்று சொல்லப்படும் பாதுகாப்பு இல்லாத தோணி' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
இரத்தல் என்னும் பாதுகாப்பற்ற படகு என்பது இப்பகுதியின் பொருள்.
கரவுஎன்னும் பார்தாக்கப் பக்கு விடும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இரக்கப்பட்டார் மாட்டுக் கரத்தலாகிய கல்லோடே தாக்க இறந்துவிடும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது நல்குரவு தீராமைக்குக் காரணங் கூறிற்று.
பரிப்பெருமாள்: இரக்கப்பட்டார் மாட்டுக் கரத்தலாகிய கல்லோடே தாக்கப் பிரிந்துவிடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது நல்குரவு தீராமைக்குக் காரணங் கூறிற்று. இவை இரண்டினாலும் இரவினால் பயனின்மை கூறப்பட்டது.
பரிதி: இல்லை என்னும் பார்தாக்க உடையும் என்றவாறு. [பார் - பூமி]
காலிங்கர்: ஒருவர் 'இல்லை போ' என்னும் மிக்க பார்தாக்கவே உடைந்துவிடும்;
காலிங்கர் குறிப்புரை: எனவே வறுமைக் கடல் நீந்துவதற்கு இரப்பு என்பதோர் கைத்தோணி என்று கருதுவது தம் அறியாமை என்றவாறு. [கைத்தோணி- சிறிய தோணி]
பரிமேலழகர்: அதன்கண் ஓடுங்கால் கரத்தல் என்னும் வன்னிலத்தோடு தாக்குமாயின் பிளந்துபோம். [அதன்கண் - வறுமை என்னும் கடலில்; வன்னிலம்-கற்பாறை]
பரிமேலழகர் குறிப்புரை: முயற்சியால் கடப்பதனை இரவால் கடக்கலுற்றான் அதன் கரை காணாமையின், 'ஏமாப்பு இல் தோணி' என்றார். ஏமாப்பு இன்மை தோணி மேல் ஏற்றப்பட்டது. அது கடத்தற்கு ஏற்றது அன்மையானும் நிலம் அறியாது செலுத்தியவழி உடைதலானும், அதன்கண் ஏறற்க என்பதாம். இஃது அவயவ உருவகம். [கடப்பதனை - கடப்பதாகிய வறுமைக் கடலை; அதன் -வறுமைக் கடலின்; அது - இரவென்னும் ஏமாப்பில் தோணி]
'கரத்தல் என்னும் வன்னிலத்தோடு தாக்குமாயின் பிளந்துபோம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஒளிப்பாகிய பாறை மோதின் உடைந்துவிடும்', 'இல்லையென்று சொல்லுகிற (கன்னெஞ்சராகிய) பாறையில் மோதினால் உடைந்து போகும்', 'கொடாது ஒளித்தல் என்னும் வலிய நிலத்திலே தாக்குண்டவுடன் பிளந்து கெடும்', 'உள்ளது ஒளித்தல் என்னும் பாறை தாக்க உடைந்து போகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
கரத்தல் என்னும் கற்பாறையுடன் தாக்குண்டவுடன் பிளந்துபோகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
இரத்தல் என்னும் பாதுகாப்பற்ற படகு கரத்தல் என்னும் கற்பாறையுடன் தாக்குண்டவுடன் பக்குவிடும் என்பது பாடலின் பொருள்.
'பக்குவிடும்' என்றால் என்ன?
|
இரத்தல் வறுமையைப் போக்கும் முழுமையான வழிமுறையல்ல.
இரந்து பெறுவது என்னும் பாதுகாப்பு இல்லாத மரக்கலம், உள்ளதை மறைத்து வைத்தல் என்னும் பாறைமீது தாக்குண்டால் பிளந்துவிடும்.
கடல்போலும் பெரும்நீர்ப்பரப்பாகத் தெரியும் வறுமையைக் கடந்து கரையேற விரும்புபவன் இரப்பு என்னும் எளிமையான சிறு தோணியில் பயணித்து அதைக் கடந்துவிடலாம் எனத் துணிகிறான். அந்த முடிபு ஏமாற்றமேயளிக்கவல்லது. நீர்ப்பரப்போ பெரியது தோணியோ காப்புக்கருவிகள் ஏதுமில்லா எளியது. அதில் ஏறிச் சென்றால் அது அவனை அலைக்கழித்துவிடும். பாதுகாப்பில்லாத படகுப் பயணத்தில், அவ்வப்போது பொருள் சில பெற்றாலும், அது அவனது வறுமையைப் போக்க இயலாது. மேலும் இடையில் கரப்பு நெஞ்சம் கொண்டோரிடம் சென்றுவிட்டால் எள்ளலுக்கும் இகழ்ச்சிக்கும் ஆளாகி, அவனது மானத்துக் கேடு உண்டாகி, மனம் உடைந்து போவான். இது தோணியானது பாறையில் மோதி பிளவுபடுவது எவ்விதமோ அவ்விதம் என உவமிக்கப்பட்டது.
இரத்தல் வறுமையை ஒழித்தற்கு உரியதல்ல என்பதாலும் இரக்கத்தக்காரல்லவரிடம் சென்றபோது இழிவு அடைய நேரிடுவதாலும் இரவு வேண்டாம் எனச் சொல்லப்படுகிறது.
வறுமையை உழைப்பால்தான் கடக்கமுயலவேண்டும். இரப்பாற் கடக்க முற்படுபவன், தன்தோணியைச் செலுத்த முடியாமல் தத்தளிப்பான், அவனால் கரை சேரமுடியாது.
கரவு என்னும் வன்பாறை தாக்கினால் வலிமையற்ற இரவுத் தோணி வறுமையைக் கடக்க உதவாமல், நொறுங்கியும் போகும்.
இரப்பது துன்பம் தருவது சிறுமையை உண்டாக்குவது, கொடுப்பவர் இல்லை என மறுக்கும்போது இன்னும் உள்ளத்தைப் பாதிக்கும் இன்னல்களையும் ஏற்படுத்தும்.
இரவு தோணியாகவும், கரவு கற்பாறை ஆகவும் இரண்டு உருவகங்கள் உள்ளன. கடினமனம் கொண்டவனது கரவு வெளித் தெரியாது மனத்துள்ளிருப்பது. கற்பாறையும் கடல்நீருக்குள் மறைந்திருப்பதால் தாக்கினால் அன்றித் தெரியாது. ஆதலால் கரவு பாராக உருவகிக்கப்பட்டது.
பார் என்ற சொல்லுக்கு வன்னிலம் என்றும் கற்பாறை என்றும் பொருள் கூறினர். பார்தாக்குதல் என்பதை இன்று ‘தரை தட்டிற்று’ என்றும் சொல்வோம்.
|
'பக்குவிடும்' என்றால் என்ன?
'பக்குவிடும்' என்றதற்கு இறந்துவிடும், பிரிந்துவிடும், உடையும், பிளந்துபோம், உடைந்துபோம், உடைந்துவிடும், உடைந்துபோய்விடும், உடைந்துபோகும், உடைந்துவிடும், உடைந்து போகும், பிளந்து போய் விடும், பிளந்து கெடும், உடைந்து போகும், சுக்குநூறாகும், பிளந்து போகும், சிதறிவிடுகிறான் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
'பக்குவிடும்' என்ற தொடர்க்கு பிளந்து போய்விடும் என்பது பொருள்.
ஒரு புண்ணோ, காயமோ உண்டானால் ஆறி வரும்போது மேல்தோல் பிரிந்து விடுதலைப் பக்குவிட்டு விட்டது என்கிறோம். இது இன்றும் மக்கள் வழக்கில் உள்ளதே.
இரவு என்னும் மகிழ்வற்ற தோணி. கரவென்னும் பாறைநிலம் தாக்கினால், அது பிளந்து உடைந்து போகும் என்பதைச் சொல்ல வந்த வள்ளுவர் பிளந்துவிடும் என்பதைப் பக்குவிடும் என்ற தொடரால் குறிக்கிறார்.
'பக்குவிடும்' என்ற தொடர் பிளந்து போகும் என்ற பொருளது.
|
இரத்தல் என்னும் பாதுகாப்பற்ற படகு கரத்தல் என்னும் கற்பாறையுடன் தாக்குண்டவுடன் பிளந்துபோகும் என்பது இக்குறட்கருத்து.
'இல்லை'யென்கிற கல்நெஞ்சுக்காரனிடம் இரவச்சம் கொள்க.
இரப்பு என்னும் காப்பற்ற படகு கரப்பு என்னும் பாறை மோதின் பிளந்துபோம்.
|