இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1070கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்

(அதிகாரம்:இரவச்சம் குறள் எண்:1070)

பொழிப்பு (மு வரதராசன்): இரப்பவர் `இல்லை' என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே; உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ?

மணக்குடவர் உரை: எமக்கு யாதும் இல்லை, சிறிது ஈயவேண்டு மென்று சொல்லுவார்க்குக் குறித்தவர்கள் இல்லையென்று சொன்ன அளவிலே அவர் உயிர்போய்ப் பிணம்போல நிற்பார்: பொருள் உடையராய் வைத்து அவர் சொன்ன இல்லையென்னுஞ் சொல்லையே சொல்லி ஈயாதார்க்கு உயிர் எவ்விடத்து ஒளித்து நிற்கின்றதோ.
இது பிணத்தை யொப்பரென்றது.

பரிமேலழகர் உரை: சொல்லாட இரப்பவர் உயிர் போம் - கரப்பார் இல்லை என்று சொல்லாடிய துணையானே இரப்பார்க்கு உயிர் போகாநின்றது; கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல் - இனிச் சொல்லாடுகின்ற அவர்தமக்கு உயிர் பின்னும் நிற்றலான், அப்பொழுது எப்புரையுள் புக்கொளிந்து நிற்கும்?
(உயிர் போகலாவது, 'இனி யாம் என் செய்தும்'? என்று ஏங்கிச் செயலற்று நிற்றல். 'அந்நிலையே, மாயானோ மாற்றி விடின்' (நாலடி-308) என்றார் பிறரும். 'கேட்டாரைக் கொல்லவற்றாய சொல், சொல்வாரைக் கோறல் சொல்லவேண்டாவாயினும் அது காண்கின்றிலம், இஃது என்னோ' என்பதாம். 'வறுமையுற்றுழி மறையாது இரக்கப்படுவாராய கேளிர்கட்கும் அதனைச் சொல்லாட உயிர் போம், ஆனபின், மறைக்கப்படுவாராய பிறர்க்குச் சொல்லாடியக்கால் போகாது எங்கே ஒளிந்துநிற்கும்? இரண்டானும் போமேயன்றோ'? என இரவஞ்சினான் ஒருவன் கூற்றாக்கி உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்விரவின் குற்றமும் கரவின் குற்றமும் ஒருங்கு கூறப்பட்டன.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: இரக்கக் கூசி இரப்போன் ஒன்றை வேண்டுமென்று பிறன் இடஞ் சொல்லிய வுடனேயே உயிர் போனவன் போலாவான்; கேட்டும் ஈயாது ஒளித்தவிடத்தே அவன் உயிர் எங்குப்போய் ஒளிக்குமோ தெரியவில்லை,


பொருள்கோள் வரிஅமைப்பு:
இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர் கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ.

பதவுரை: கரப்பவர்க்கு-மறைப்பவர்க்கு; யாங்கு-எங்கு; ஒளிக்கும்-மறையும், ஒளிந்திருக்கும்; கொல்லோ-(கொல், ஓ அசைகள், ஐயப்பொருளைக் குறிக்க வந்தன); இரப்பவர்-ஏற்பவர், கெஞ்சிக் கேட்பவர்; சொல்லாட-உரையாட; போஒம்-போய்விடும்; உயிர்-உயிர்.


கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருள் உடையராய் வைத்து அவர் சொன்ன இல்லையென்னுஞ் சொல்லையே சொல்லி ஈயாதார்க்கு உயிர் எவ்விடத்து ஒளித்து நிற்கின்றதோ.
பரிப்பெருமாள்: உடையராய் வைத்து அவர் சொன்ன இல்லையென்னுஞ் சொல்லையே சொல்லி ஈயாதார்க்கு உயிர் எவ்விடத்து ஒழித்து நிற்கின்றதோ.
பரிதி: நாஸ்தி என்பார்க்கு எப்படியோ தெரியாது; [நாஸ்தி என்பார் - 'இல்லை' என்பார்]
காலிங்கர்: அவர்போல் அன்றித்தாம் கைப்பொருள் உடையர் ஆகியும் கரப்பவராகிய கடுவினையாளர்க்கு அவருயிர் அவரதுடலில் யாங்குக் கரந்து நிற்குமோதான்; இது அறிகின்றிலோம். இது சால வியப்புடைத்து; .
பரிமேலழகர்: இனிச் சொல்லாடுகின்ற அவர்தமக்கு உயிர் பின்னும் நிற்றலான், அப்பொழுது எப்புரையுள் புக்கொளிந்து நிற்கும்? [அப்பொழுது- இரப்பார்க்குக் கரப்பார் பொருளில்லை என்று கூறிய அக்காலத்தில்; எப்புரையுள் - எந்த உள்துளையுள்]

'தாம் கைப்பொருள் உடையர் ஆகியும் கரப்பவராகிய கடுவினையாளர்க்கு அவருயிர் அவரதுடலில் யாங்குக் கரந்து நிற்குமோதான்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மறைப்பவருக்குப் போகாது எங்கிருக்கும்?', 'பொருளை மறைத்து வைப்பார் நிலைக்கு அஞ்சி எங்குச் சென்று மறைந்து கொண்டிருக்குமோ?', '(வைத்துக் கொண்டே) இல்லையென்கிறவர்களுடைய உயிர் எங்கே ஓடி ஒளித்துக் கொள்ளுகிறதோ தெரியவில்லை', 'அங்ஙனமாயின் இல்லை யென்று சொல்லுகின்ற உள்ளது ஒளிப்பார்க்கு உயிர் எங்குச் சென்று மறையும்?' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உள்ளது மறைப்பார்க்கு உயிர் எங்குச் சென்று ஒளிந்திருக்கும்? என்பது இப்பகுதியின் பொருள்.

இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('இரப்பார்க்குச்' பாடம்): எமக்கு யாதும் இல்லை, சிறிது ஈயவேண்டு மென்று சொல்லுவார்க்குக் குறித்தவர்கள் இல்லையென்று சொன்ன அளவிலே அவர் உயிர்போய்ப் பிணம்போல நிற்பார்:
மணக்குடவர் குறிப்புரை: இது பிணத்தை யொப்பரென்றது.
பரிப்பெருமாள்: எமக்கு யாதும் இல்லை, சிறிது ஈயவேண்டு மென்று சொல்லுவார்க்கு அக்குறித்தவர்கள் இல்லையென்று சொன்ன அளவிலே அவர் உயிர்போய்ப் பிணம்போல நிற்பார்கள்:
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிணத்தை யொப்பரென்றது.
பரிதி: இரப்பவர்க்குத் தேகி என்று கேட்க உயிர் விடும் என்றவாறு.
காலிங்கர்: எனவே இரப்பவர் உயர்குடி மரபினோர்க்கு அவ்விரவு என்னும் உரையாடவே உக்குவிடும் என்றவாறு. [உக்குவிடும் - பிளக்கும்]
பரிமேலழகர்: கரப்பார் இல்லை என்று சொல்லாடிய துணையானே இரப்பார்க்கு உயிர் போகாநின்றது;
பரிமேலழகர்: உயிர் போகலாவது, 'இனி யாம் என் செய்தும்'? என்று ஏங்கிச் செயலற்று நிற்றல். 'அந்நிலையே, மாயானோ மாற்றி விடின்' (நாலடி-308) என்றார் பிறரும். 'கேட்டாரைக் கொல்லவற்றாய சொல், சொல்வாரைக் கோறல் சொல்லவேண்டாவாயினும் அது காண்கின்றிலம், இஃது என்னோ' என்பதாம். 'வறுமையுற்றுழி மறையாது இரக்கப்படுவாராய கேளிர்கட்கும் அதனைச் சொல்லாட உயிர் போம், ஆனபின், மறைக்கப்படுவாராய பிறர்க்குச் சொல்லாடியக்கால் போகாது எங்கே ஒளிந்துநிற்கும்? இரண்டானும் போமேயன்றோ'? என இரவஞ்சினான் ஒருவன் கூற்றாக்கி உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்விரவின் குற்றமும் கரவின் குற்றமும் ஒருங்கு கூறப்பட்டன. [உயிர் போகலாவது - இரப்பவர்க்கு உயிர் போதலாவது; யாம் என் செய்தும்- நாம் என்ன செய்வோம்; அது காண்கின்றிலம் - சொல்வாரைக் கொல்லுதலை நாம் காணவில்லை]

'இல்லை என்று சொல்லாடிய துணையானே இரப்பார்க்கு உயிர் போகாநின்றது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கேட்பவருக்கு கேட்டளவில் போகும் உயிர்', 'இரப்பவர் பிறரிடம் இல்லை என்று இரந்து சொல்லிய அளவிலே போகின்ற உயிர்', 'பிச்சை கேட்கிறவர்கள் தங்களுடைய துன்பங்களைச் சொல்லிக் கொள்ளப் போகிறபோது', 'உள்ளது ஒளிப்பார் இல்லை என்று சொன்னவுடன் இரப்பவர் உயிர் போய்விடுகின்றது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இரப்பவருக்குக் கேட்டளவில் போகும் உயிர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இரப்பவருக்குச் சொல்லாடப் போகும் உயிர் தன்னிடம் உள்ளதை மறைப்பார்க்கு எங்குச் சென்று ஒளிந்திருக்கும்? என்பது பாடலின் பொருள்.
'சொல்லாட' என்பது குறிப்பதென்ன?

கரப்பார் தன்உயிரையும் ஒளித்துவைக்கக் கூடுமோ?

'எம்மிடம் ஒன்றும் இல்லை; எமக்குச் சிறிது ஈய வேண்டும்' என்று வறியவன் ஒருவன் பிறன் ஒருவனை நோக்கிச் சொல்லும்போதே அவனுக்குத் தன் உயிரே போனது போன்றிருக்கிறது; அவன் அவ்விதம் கேட்கும் நிலையைக் கண்டு இரங்காது, கைப்பொருள் உடையராய் இருந்தும், தம்மிடம் உள்ளதை மறைத்துக்கொண்டு 'இல்லை, போ' என்று கூறும்போது, அவர் உயிர் எங்கே புகுந்து ஒளிந்திருக்குமோ தெரியவில்லை.
இருவருமே ஒன்றும் இல்லை என்றுதான் கூறுகின்றனர். மான உணர்ச்சி மிகக்கொண்ட இரப்பவன் 'தம்மிடம் ஒன்றும் இல்லை' என்று சொல்லும்போதே, தன் பெருமிதம் அழிந்ததால், உயிர் போனதுபோல் உணர்கிறான். ஆனால் கரப்பவன் தன்னிடம் பொருள் வைத்திருந்தும் இல்லையெனக் கல்மனதுடன் கூறுகின்றான். மனச்சான்று இல்லாமல் 'இல்லை' என்கிறவன் உயிரும் போயிருக்க வேண்டுமே! அங்ஙனம் போகாமல் உயிர் பின்னும் நிற்றலால் அது எங்கே புகுந்து ஒளிந்திருக்குமோ! என்று வியக்கிறார் வள்ளுவர்.

ஒரு பொருளினை முற்றும் மேலாக அல்லது கீழாகச் சொன்னால்தான் ஒருவர் எண்ணிய நற்பண்புகளையும் கீழ்க்குணங்களையும் பிறர்க்கு எளிதாக உணர்த்த முடியும் என்றதன் அடிப்படையில் கரவின் சிறுமையை வெளிக்காட்டுகிறார் வள்ளுவர்.
மானம்மிக்க ஒருவன் பல்லாற்றாலும் முயன்று நல்லூழ் இன்மையால் தோற்றுவிடுகிறான். வேறு வழி ஏதுமில்லாமல் இரந்து, இழந்த வாழ்க்கையை மீட்க எண்ணுகிறான். கரவாது உவந்து வழங்குபவன் என்று ஒருவனைக் கருதி அவன் முன்நின்று இரக்கின்றான். இரத்தற்குரிய சொல் அவன் வாயிலிருந்து பிறந்தபோதே தன்மானம் கெட்டுவிட்டது என்ற உணர்வால் அவனுக்குத் தன்னிலிருந்து உயிர் நீங்கியபோல் ஆகிறது. ஆனால் யார் எதிரில் நின்று இரந்தானோ, அவன் இரப்பவனது நிலைமையைப் பொருட்படுத்தாமல் தன்னிடம் பொருள் இருந்தும் ஒன்றும் இல்லை என்கிறான், கேட்டாரைச் கொல்லும் 'கொடு' என்ற சொல் 'இல்லை' என்று சொல்வாரையும் கொன்றிருக்க வேண்டுமே. அந்த உயிர் எங்கே போய் ஒளிந்தது?
பிறரிடம் சென்று கையேந்தி இரந்து நிற்கும் கொடுமையை நினைந்து வள்ளுவரது நெஞ்சு உருகுகின்றது. அவருக்கு இங்ஙனம் இரப்போர் மாட்டு இரக்க உணர்ச்சி உண்டாகிறது. இரப்பவர்களுக்குக் கொடுக்காமல் பொருளை மறைத்து வைத்து வாழும் மாந்தரை நோக்கி, பொருளை ஒளித்துக்கொண்டாய். ஆனால் உன் உயிர் எங்கே மறைந்து கொண்டது; அதை உன்னால் ஒளிக்க முடியுமா? எனவும் கேட்கிறார்.

இக்குறளுக்குச் சொல்லாடப் போகும் இரப்பவர் உயிர், கரப்பவர் நிலைக்கு அஞ்சி எங்குப்போய் ஒளிக்கும் எனவும், மறைப்பவர்கள் தங்கள் உயிரை எங்கும் ஒளிக்க இயலாது; இறந்துபடுவர் எனவும், இழிநிலை பெற்ற இரப்பவர்கள் விழிப்பெய்தி தம் உரிமை காக்க, உம்மோடு சொல்லாடிப் பொருத்திட தொடங்கினால், உமது உயிரை எங்கு கொண்டு சென்று ஒளித்து வைப்பீர்?' எனவும், வறியவர்கள் கிளந்தெழுந்தால் தம்முடைமையை வைத்துப் போற்றும் செல்வர்கள் மடிவர் (வன்முறை புரட்சி எச்சரிக்கை) எனவும் சிலர் பொருள் உரைத்தனர்.

'சொல்லாட' என்பது குறிப்பதென்ன?

'சொல்லாட' என்பதைச் சிறிது ஈயவேண்டு மென்று சொல்லுவார்க்குக் குறித்தவர்கள் இல்லையென்று சொன்ன அளவிலே, தேகி என்று கேட்க, அவ்விரவு என்னும் உரையாடவே, இல்லை என்று சொல்லாடிய துணையானே, இல்லை என்று சொன்னவுடனே, இல்லை என்று சொன்ன அளவிலே, `இல்லை' என்று சொல்கின்ற அளவிலேயே, 'இல்லை' என்று சொல்லியதுமே, இரந்தது கிடைக்காது வெற்றுச் சொற்களே கிடைத்தபொழுது, கேட்டளவில், இல்லை என்று இரந்து சொல்லிய அளவிலே, 'இல்லை' என்று சொல்லிய அளவிலேயே, ஒன்றை வேண்டுமென்று பிறன் இடஞ் சொல்லிய வுடனேயே, இல்லை என்று சொன்னவுடன், பிறன் ஒருவனை நோக்கிக் கேட்கும் போதே, பிச்சை கேட்ட அளவிலேயே, இல்லை என்ற சொல்லைக் கேட்டதும் என்றவாறு உரையாசிரியர்கள் விளக்கினர்.

'சொல்லாட' என்பது சொல்லத் தொடங்கியவுடனே என்ற பொருளில் வந்துள்ளது. என்ன சொல்லத் தொடங்கியபோது? 'ஈ'யென இரத்தற்சொல் வெளிப்பட்டவுடன் இரப்பவன் உயிர் பிரிந்தது போலாயிற்று மானம் நீங்கியதால். வறுமைவரின், கூசாமல் இவரிடம் சென்று கேட்கலாம் என்பதாக உள்ள இரக்கத்தக்கராகிய கேளிர் மாட்டும் இரத்தல் செய்ய உயிரே போகும் நிலை வரும்.
கரப்பவர் இல்லை என்று சொல்வதைக் கேட்டு இரப்பவர் உயிர்போம் என்பதினும், காலிங்கர் உரைப்பதுபோல் இரப்பவர் 'தம்மிடம் நுகர்தற்கு ஒன்றும் இல்லை' என்று சொல்லாட மான உணர்ச்சியினால் அவர் உயிர்போம் என்பது பொருத்தம்.
'சொல் ஆட' என்பதற்குச் 'சொல் தடுமாறி வர' எனவும் உரை உள்ளது.

'சொல்லாட' என்றது ‘ஈ' என்று இரப்பவன் இரந்து நின்ற அளவிலே என்ற பொருள் தருவது.

இரப்பவருக்குக் கேட்டளவில் போகும் உயிர் தன்னிடம் உள்ளதை மறைப்பார்க்கு எங்குச் சென்று மறைந்திருக்கும்? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஈ எனக் கேட்கும் இரவச்சம் வேண்டும்.

பொழிப்பு

இரப்பவருக்கு இரந்தளவில் போகும் உயிர் கரப்பவர்க்கு எங்கு மறைந்திருக்கும்?