உறாஅ தவர்போல் சொலினும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கூடாதவர் போலச் சொல்லினும்;
பரிப்பெருமாள்: கூடாதவர் போலச் சொல்லினும்;
பரிதி: அயலார் போலவே பார்த்தாலும்;
காலிங்கர்: நெஞ்சே! நெஞ்சிற் பருவுறாதார் போல் சில சொல்லினும்;
பரிமேலழகர்: (தோழி சேண்படுத்தவழி அவள் குறிப்பு அறிந்த தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.) புறத்து நொதுமலர் போலக் கடுஞ்சொல் சொன்னாராயினும்; [நொதுமலர்-அயலார்; செறுதல் இலாதார்-பகை இல்லாதவர்]
பரிமேலழகர் குறிப்புரை: கடுஞ்சொல் என்பது, 'இவ்விடம் காவல் மிகுதி உடைத்து, வரற்பாலிர் அல்லீர்' என்றல் முதலாயின. [வரற்பாலிர் அல்லீர்-வாராதீர்]
இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் 'அயலார் போலச் சொன்னாராயினும்' என்ற பொருளில் உரை தந்தனர். மற்றவர்கள் தலைமகளது வன்சொல் என்று
கொள்ள பரிமேலழகர் தோழி கூறிய கடுஞ்சொல் என்று கொண்டார்.
இன்றைய ஆசிரியர்கள் 'உறவில்லாதவர் போல் சொன்னாலும்', 'வெளியே ஏதிலார் போலக் கடுஞ்சொல் சொன்னாலும்', 'ஆசையில்லாதவர் போலப் பேசினாலும்',
'தொடர்பு இல்லாதவர் போல அவரது சொல் இருந்தாலும்', 'அன்பு இல்லாதவர் போல் சொன்னாலும்' என்றபடி உரை தருவர்.
அயலார் போலப் பேசினாலும் என்பது இப்பகுதியின் பொருள்.
செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செறுதலில்லாதார் சொல்லை அதற்குக் காரணமாகப் பிறிதொன்று உளதென்று விரைந்தறிதல் வேண்டும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உறுப்பினாலிசைவுகாட்டி, உரையினால் மறுப்பினும் உடன்படுதலாமென்றது.
பரிப்பெருமாள்: செறுதலில்லாதார் சொல்லை இதற்குக் காரணம் பிறிதொன்று உளதென்று விரைந்து அறிய வேண்டும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உறுப்பினாலிசைவுகாட்டி, உரையினால் மறுப்பினும் உடன்படுதலாமென்றது. மனம் நெகிழ்ச்சிகண்டு சாரலுற்ற தலைமகனைத் தனதில் வலியுறுத்தற்பொருட்டுக் கடுஞ்சொல் கூறித் தலைமகள் நீங்கின வழி, இஃது உள்ளன்பு இன்மையால் கூறினாள் அல்லள்; அதற்குக் காரணம் யாது?' என்று தலைமகன் தன்னுள்ளே சொல்லியது என்றவாறு.
பரிதி: இன்பம் உள்ள ஆசைப் பார்வையாலே கூடுதற்கு இட்டம் என்று அறிக என்றவாறு.
காலிங்கர்: பரிவுடையார் சொல்லும் சொல்லினது குறிப்பினை அனாதரிக்க அடாது;
காலிங்கர் குறிப்புரை: மற்று இதன் கருத்து என்னை கொல் என்று விரைந்து குறித்துணர அடுக்கும் என்பதனால் தனக்கு ஆற்றாமை வந்தவிடத்து இதுவும் ஒரு பற்றுக்கோடு ஆயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: அகத்துச் செறுதலிலாதார் சொல் பிற்பயத்தல் குறையுற்றாரால் கடிதின் அறியப்படும். [பிற்பயத்தல்-பின் பயனைத் தருதல்; கடிதின்-விரைவில்
பரிமேலழகர் குறிப்புரை: 'செறார்' எனவே, அருள் உடைமை பெறப்பட்டது. தன் குறை முடிக்கக் கருதியே சேண்படுக்கின்றமை குறிப்பான் அறிந்து, உலகியல் மேலிட்டுக் கூறியவாறு. இது வருகின்ற பாட்டிற்கும் ஒக்கும்.
இப்பகுதிக்கு மணக்குடவர்/பரிப்பெருமாள்/காலிங்கர் 'கடுஞ்சொல்லை உள்ளன்பு இல்லாமல் கூறவில்லை; பின் ஏன் அவள் அப்படிப் பேசினாள்? என்று விரைந்து அறியவேண்டும்' என்று தலைமகன் பேசுவதாக உரைத்தனர். பரிதி 'அவளுக்கு கூடுதற்கு விருப்பம்தான்' என்றும் பரிமேலழகர் 'தோழியின் சொல் பின் பயனைத் தரும் என்பது கடிதின் அறியப்படும்' என்றும் உரை தந்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வெறுப்பில்லாதவர் சொல் விரைவில் புரியும்', 'உட்சினமில்லாதவர்கள் மொழி ஈதென்று விரைவில் அறியலாம்', 'பகைமைக் குணமில்லாதவர் சொல் பயன்தரத் தக்கது என்பதை விரைவில் அறியப்படும்', 'அகத்திற் பகையில்லாதவர் சொல் பின்பயன் படுதல் குறைவேண்டியவரால் விரைந் தறியப்படும்', 'பகை எண்ணம் இல்லாதவரது சொல்லானது விரைவில் அவர் உற்றவர் என்பதை உணர்த்திவிடும்' என்று தலைவன் எண்ணுவதாகப் பொருள் கூறினர்.
பகையில்லாதவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று விரைவில் உணரப்படும் என்பது இப்பகுதியின் பொருள்.
|