வேட்ட பொழுதின் அவையவை போலுமே:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காதலித்தபொழுது காதலிக்கப்பட்ட அவ்வப்பொருள்களைப் போலும்;
பரிப்பெருமாள்: காதலித்தபொழுது காதலிக்கப்பட்ட அவ்வப்பொருள்களைப் போலும்;
பரிதி: ஆயிரம் யாகம் வேட்ட இன்பத்துக்கு அளவு என்றாலும் அதற்கு அகப்படா இன்பந்தான்;
காலிங்கர்: நெஞ்சமே! உலகத்து யாதானும் ஒரு பொருளை விரும்பினால் விரும்பின பொழுதிலே அவை அவை எய்தி இன்புறல் யார்க்கும் அரிது.
அவ்வாறன்றி அவை அவை விரும்பிய பொழுது எளிதாக எய்தி இன்புறும் இனிமை போலும்;
பரிமேலழகர்: (தோழியிற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது) மிக இனியவாய பொருள்களைப் பெறாது அவற்றின்மேல் விருப்பங்கூர்ந்த பொழுதின்கண்
அவையவை தாமே வந்து இன்பஞ்செய்யுமாறு போல இன்பஞ் செய்யும்;
'விரும்பிய பொருள்களை விரும்பிய பொழுது எளிதாக எய்தி இன்புறும் இனிமை போலும்' என்று பழம் ஆசிரியர்கள் உரை அமையும். பரிதி மட்டும் தொடர்பில்லாத பொருளில் ஓர் உரை கூறியுள்ளார்.
இன்றைய ஆசிரியர்கள் 'விருப்பமான பொருள்களை நினைத்தபோது அவ்வப் பொருள்கள் போலவே இன்பம் செய்கின்றன', 'என் காதலியின் புணர்ச்சியில் நான் மனத்தில் எந்தெந்தப் பொருளை விரும்பி நினைக்கிறேனோ அந்தந்தப் பொருளாகவே அவளுடைய அங்கங்கள் எனக்கு இன்பமளிக்கின்றனவே!', 'விரும்பிய பொழுதில் விரும்பப்பட்ட பொருள்களைப் போல இன்பம் தரும்', 'விரும்பியபோது விரும்பிய பொருள் ஆகியவை' என்றபடி உரை தருவர்.
'எவ்வெவ்வப் பொருளை விரும்பினேனோ அவ்வப்பொருளை அதே வேளையில் அடைந்தது போலவே' என்பது இப்பகுதியின் பொருள்.
தோட்டார் கதுப்பினாள் தோள்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('தோட்டாழ்' பாடம்): தோளின்கண் தாழ்ந்த கூந்தலினையுடையவள் தோள்.
மணக்குடவர் குறிப்புரை: தோட்டாழ்கதுப்பு- புணர்ச்சிக்காலத்து அசைந்து தாழ்ந்த கூந்தல்.
பரிப்பெருமாள் ('தோட்டாழ்' பாடம்): தோளின்கண் தாழ்ந்த கூந்தலினையுடையவள் தோள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தோட்டாழ்கதுப்பு- புணர்ச்சிக்காலத்து தாழ்ந்து அசைந்த கூந்தல். இதனை ஒழியப் பிறிதொன்று தோற்றுகின்றது இல்லை என்று
கூறியதன்றி, யாம் காதலிக்கப்பட்ட பொருள்கள் அக்காலத்தே முயலாமல் பெற்றதனோடு ஒத்த உவகையை மிகுவிக்கும் என்றும் ஆம்.
பரிதி: நாயகியாள் ஆயது என்றவாறு.
காலிங்கர்: இதழ் ஆர்ந்த கரிகுழலினாள் தோள் நமக்கு என்றவாறு.
பரிமேலழகர்: எப்பொழுதும் பெற்றுப் புணரினும், பூவினை அணிந்த தழைத்த கூந்தலினையுடையாள் தோள்கள்.
பரிமேலழகர் குறிப்புரை: தோடு: ஆகுபெயர். இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு,பாங்கற்கூட்டத்துக்கண் முன்னரே நிகழ்ந்திருக்க, பின்னரும் புதியவாய் நெஞ்சம்
பிணித்தலின், அவ்வாராமை பற்றி இவ்வாறு கூறினான். தொழிலுவமம். [தோடு என்னும் இதழின் பெயர் மலர்க்கு ஆயினமையின் இது சினையாகு பெயர்; ஆராமை-விருப்பம் தணியாமை; விரும்பிய காலத்து அவையவை தாமே வந்து இன்பம் செய்யும் தொழிலை. அங்ஙனமே தோள் இன்பம் செய்தலின் அத்தோளுக்கு உவமை கூறியிருத்தலால் இது தொழிலுவம் ஆயிற்று]
பழைய ஆசிரியர்களில் மணக்குடவர்/பரிப்பெருமாள் இருவரும் தோட்டார் என்பதை தோள்+தாழ் என்று கொண்டு 'தோளின்கண் தாழ்ந்த கூந்தலினையுடையவள்
தோள்' என்று உரை கூறினர். காலிங்கரும் பரிமேலழகரும் தோட்டு(பூவிதழ்)+ஆர்(அணிந்த) என்று கொண்டு பூச்சூடிய கூந்தலையுடையவள் தோள்
என்றனர். கதுப்பினாள் என்றதற்கு காலிங்கர் கரிய கூந்தலுடையாள் என்று கொள்ள பரிமேலழகர் தழைத்த கூந்தலினையுடையாள் என்று உரை செய்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'பூங்கொத்து நிறைந்த கூந்தலவள் தோள்கள்', 'மலரணிந்த கூந்தலை உடையவளின் தோள்கள்', 'மலரின் இதழினைப்போல அருமையான மணமும் மென்மையுமுள்ள கன்னங்கள்', 'பூவினை அணிந்த தாழ்ந்த கூந்தலினையுடையாளின் தோள்கள்' என்றவாறு உரை கூறினர்.
'மலரணிந்த தாழ்ந்த கூந்தலை உடையவளின் தோள்கள்' என்பது இப்பகுதியின் பொருள்.
|