தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மிடத்திலே யிருந்து, தமது தாளாண்மையால் பெற்ற பொருளை இல்லாதார்க்குப் பகுத்து உண்டாற்போலும்;
பரிப்பெருமாள்: தம்மிடத்திலே யிருந்து, தமது தாளாண்மையால் பெற்ற பொருளை இல்லாதார்க்குப் பகுத்து உண்டாற்போலும்;
பரிதி: தம்மிட அகத்திலே இருந்து தம்மிட அசனத்தைப் பொசிப்பதுபோல இன்பம் இல்லை;
காலிங்கர்: கேளாய் நெஞ்சே! தமக்குரிமையுடைய இல்லின்கண் இருந்து தமது தாளாண்மையால் நீதியின் தந்த பொருள் கொண்டு தாமே தனித்து
உண்டு ஒழியக் கருதாது பலர்க்கும் பகுத்துண்டு வாழ்தலின் இனிமை எத்தன்மைத்து;
பரிமேலழகர்: (இவளை நீ வரைந்துகொண்டு உலகோர் தம் இல்லிருந்து தமது பாத்துண்ணும் இல்லறத்தோடு படல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது) இன்பம் பயத்தற்கண் தமக்குரிய இல்லின்கண் இருந்து உலகோர் தம்தாளான் வந்த பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்கட்குப் பகுத்துத் தம் கூற்றை உண்டாற் போலும். [தம்இல்-தமது வீடு; தாளான் -முயற்சியால்]
பழம் ஆசிரியர்களில் பரிதி தவிர்த்து அனைவரது உரையும் 'தம் இடத்திலே இருந்து முயற்சியால் பெற்ற பொருளைப் பகுத்து உண்டாற் போலும்' என்ற பொருளை உணர்த்திற்று. பரிதி, மாறுபாடாக, பகுத்து உண்டு என்று கூறாமல், தம்முடைய பொருளை உண்பது போல என்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'தம் இல்லத்திலிருந்து தம் முயற்சியால் ஈட்டிய பொருளைப் பலர்க்கும் பகுத்தளித்து உண்டு இன்புற்றாற் போலும்', 'தமக்கு உரிமையாம் இல்லத்தில் இருந்து, தம் உழைப்பால் வந்த உணவைப் பலரொடும் பகுத்துண்டாற் போலும் இன்பம் செய்வது', 'தனது முயற்சியால் வந்த பொருளை உரியவர் யாவர்க்கும் பகுத்துக் கொடுத்துத் தானும் தம் வீட்டிலிருந்து நுகர்வதுபோல் இருக்கிறது', 'தம்முடைய வீட்டில் இருந்து தமது உழைப்பால் வந்தவற்றைப் பிறர்க்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டுத் தமக்குரியதை உண்பதால் உண்டாகும் இன்பத்தைப் போன்றது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தம் வீட்டில் இருந்துகொண்டு தமக்கு உண்டானதை உண்பதைப் போன்றது என்பது இப்பகுதியின் பொருள்.
அம்மா அரிவை முயக்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அழகிய மாமை நிறத்தினையுடைய அரிவை முயக்கம்.
பரிப்பெருமாள்: அழகிய மாமை நிறத்தினையுடைய அரிவை முயக்கம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: உணவினும் அதனின் மிக்க இன்பம் தருவது இல்லை. புணர்ச்சியின் இதனின் மிக்க இன்பம் தருவது இல்லை என்று அதன் இனிமை கூறியது.
பரிதி: அதனினும் பெரியது அரிவை முயக்கம் என்றவாறு.
காலிங்கர்: மற்று அத்தன்மை உடையது யாதோ எனில், இவ்வரிவையை யாம் ஒருபொழுது இடைவிடாது முயங்கப்பெறும் முயக்கின் தன்மை என்றவாறு.
பரிமேலழகர்: அழகிய மாமை நிறத்தையுடைய அரிவையது முயக்கம்;
பரிமேலழகர் குறிப்புரை: தொழில் உவமம். 'இல்லறஞ்செய்தார் எய்தும் துறக்கத்து இன்பம் எனக்கு இப்புணர்ச்சியே தரும்' என வரைவு உடன்படான் கூறியவாறாயிற்று. [வரைவு உடன்படான்-திருமணத்திற்கு இசையாத தலைவன்]
அம்மா என்ற சொல்லுக்கு அம்+மா என்று கொண்டு அழகிய மாமை நிறம் கொண்டவள் என்று மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் பொருள் கூறினர். பரிதியும் காலிங்கரும் இதற்கு ஒரு விளக்கமும் கூறவில்லை. 'அரிவை முயக்கு' என்றதற்கு 'அரிவை முயக்கம்' என்று உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அழகிய மாநிற மங்கையின் புணர்ச்சி இன்பம்', 'அழகிய மாந்தளிர் நிறம் அமைந்த என்னவளின் தழுவுதல்', 'மாநிறமுடைய இவ்வழகிய மங்கையினது சேர்க்கை', 'அழகிய மாமை நிறத்தினையுடைய பெண்ணினது கூட்டுறவால் வரும் இன்பம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அம்மா இளம்பெண்ணைத் தழுவுதல் என்பது இப்பகுதியின் பொருள்.
|