நாணொடு நல்லாண்மை பண்டுடையேன்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடையேன்;
பரிப்பெருமாள்: நாணமிக்க நிலைமையும் சிறந்த ஆண்மையும் யான் பண்டுடையேன்;
பரிதி: நாணமும் நல்லாண்மையும் எமக்குப் பண்டு துணையாயிருந்தன.
காலிங்கர்: நாணொடு நல்லாண்மைப்பாடு என்னும் இவை இரண்டுமாய் யான் பண்டு உடையேன்.
பரிமேலழகர்: ('நாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது' என்றாட்குச் சொல்லியது.) நாணும் மிக்க ஆண் தகைமையும்
யான் பண்டு உடையேன்;
'நாணமும் நல்லாண்மையும் நான் பண்டு உடையேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நாணமும் வீரமும் முன்பிருந்தன', 'இதுவரையிலும் வெட்கமுள்ளவனாகவும் நல்ல ஆண்மையுள்ளவனாகவும் இருந்த நான்', 'வெட்கமும் மிகுந்த வீரமும் முன்நாள் உடையவனாயிருந்தேன்', 'நாணமும் மிக்க ஆண்தன்மையும் முன்பு பெற்றிருந்தேன்', என்ற பொருளில் உரை தந்தனர்.
நாணமும் நல்லாண்மையும் முன்பு உடையவனாயிருந்தேன் என்பது இப்பகுதியின் பொருள்.
இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காமமிக்கார் ஏறும் மடலினை இன்றுடையேனானேன்.
பரிப்பெருமாள்: காமமிக்கார் ஏறும் மடலினை இன்றுடையேனானேன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறிய சொற்கேட்டு, 'நீர் உலகத்துப் பன்மக்களோடு ஒப்பார் ஒருவரன்றே. நாணமும் ஆண்மையும் இயல்பாக
உடையீர். ஆதலான் நுமக்கு இது கூடாது' என்ற தோழிக்கு, 'இவை இரண்டும் இப்பொழுது இல்லேன்' என்று தலைமகன் கூறியது.
பரிதி: இன்று இப்பேதை தந்த ஆசையினாலே மடலே துணையானது என்றவாறு.
காலிங்கர்: அதனால் என்னை பயன்? அவை விடுத்து இன்று உடையேனாவேன்; யாதினை எனில் இவ்வுலகத்துக் காமுற்றவர் ஏறும் மடலினை என்றவாறு.
பரிமேலழகர்: அவை காமத்தான் நீங்குதலான், அக்காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன். [அவை-நாணும் நல்லாண்மையும்]
பரிமேலழகர் குறிப்புரை: நாண்: இழிவாயின செய்தற்கண் விலக்குவது. ஆண்மை: ஒன்றற்கும் தளராது நிற்றல். 'அவை பண்டு உள்ளன: இன்று உள்ளது
இதுவேயாகலின் கடிதின் முடியும்', என்பதாம். [அவை-நாணும் நல்லாண்மையும்; இதுவே-மடலேறுதலே; கடிதின் -விரைவில்]
'காமமிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இன்றோ காமங்கொண்டார் ஏறும் மடற்குதிரை உண்டு', 'இப்போது அவற்றை விட்டுவிட்டு மடலேறுவதை எண்ண வேண்டியவனாக
இருக்கிறேனே!' 'இப்போது காமமிகுந்தவர் ஏறும் மடலினைத்தான் உடையேன்', 'காதல் உற்றார் ஏறும் மடல் குதிரையை இப்பொழுது உடையேன்', என்றபடி பொருள் உரைத்தனர்.
இன்று காமங்கொண்டார் ஏறும் மடல் குதிரையை உடையேன் என்பது இப்பகுதியின் பொருள்.
|