அலர்எழ ஆருயிர் நிற்கும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நமது புணர்ச்சியால் வந்த அலர் எழுதலினானே அவளது ஆருயிர் நிற்கும்;
பரிப்பெருமாள்: நமது புணர்ச்சியால் வந்து அலர் எழுதலினானே அவளது ஆருயிர் நிற்கும்;
பரிதி: அலர் எழ ஆருயிர் நிற்கும்;
காலிங்கர்: இவ்வகை அலர் தோன்றவே என் ஆருயிர் நிற்கும்;
பரிமேலழகர்: (அல்ல குறிப்பட்ட பிற்றைஞான்று வந்த தலைமகனைத் தோழி அலர் கூறி வரைவு கடாயவழி அவன் சொல்லியது.)
மடந்தையொடு எம்மிடை நட்பு ஊரின்கண் அலராயெழுதலான் அவளைப் பெறாது வருந்தும் என் அரிய உயிர் பெற்றதுபோன்று நிலைபெறும்;
தொல்லாசிரியர்கள் அனைவரும் அலர் எழுதலினாலே உயிர் நிற்கும் என்றனர். மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் இக்குறளைத் தலைவன் கூற்றாகக் கொள்கின்றனர். ஆனால் அலரெழ ஆருயிர் நிற்றலைத் தலைவி மேலதாக மணக்குடவர்/பரிப்பெருமாள் இருவரும் தலைவன் மேலதாகப் பரிமேலழகரும் கொண்டு உரை செய்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஊர் தூற்றுவதால் என் உயிர் வாழ்கின்றது', 'எங்களது தொடர்பு ஊரில் அலராய் எழுவதால் அரிய உயிர் நிலைத்து நிற்கின்றது', 'அலர் ஏற்பட்ட பிற்பாடு என்னுடைய அரிய உயிர் அவளைப் பெற்றார்போல நிலைத்தது', 'ஊரில் பேச்சு எழுந்து விட்டதால், இனி என் அருமையான உயிர் நிலைக்கும், அவள் என்னைக் காதலிக்க வில்லை என்று கருதி, நான் உயிரை விட்டுவிட எண்ணியிருந்தேன்' என்ற பொருளில் உரை தந்தனர்.
அலர் உண்டாதனால் அரிய உயிர் நிலைத்து நிற்கின்றது என்பது இப்பகுதியின் பொருள்.
அதனைப் பலர்அறியார் பாக்கியத் தால்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வாறு உயிர்நிற்றலை எங்கள் புண்ணியத்தாலே பலரறியா ராயினார்:
மணக்குடவர் குறிப்புரை: அறிவாராயின் எமக்கு ஏதிலராய் அலர்தூற்றுவார் இவள் இறந்துபட வேண்டுமென்று தூற்றார்.
பரிப்பெருமாள்: அவ்வாறு உயிர்நிற்றலை எங்கள் புண்ணியத்தாலே பலரறியா ராயினார்:
பரிப்பெருமாள் குறிப்புரை: அறிவாராயின் எனக்கு ஏதிலராய் அலர்தூற்றுவார் இவள் இறந்துபட வேண்டுமென்று தூற்றார். 'நொதுமலர் வரைய வந்துழி இறந்துபடுவாளாயினள்; ஆயிடை இவ்வலர் எழுதலினாலே இனிப் பிறர்க்குக் கொடார் என்று அவள் உயிர் நீங்காதாயிற்று' என நொதுமலர் வரைய வந்தமை தோழி தலைமகற்குக் கூறியது. இத்துணையும் களவு.
பரிதி: தயவாகிய இந்தப் பாக்கியத்தை ஒருவரும் அறியார்கள் என்றவாறு.
காலிங்கர்: அங்ஙனம் ஆதலைப் பலரும் அறியாதே அலரினைக் கூறுகின்றனர் என் பாக்கியத்தால் என்றவாறு.
பரிமேலழகர்: அந்நிலை பேற்றைத் தெய்வத்தால் யானே அறிவதல்லது கூறுகின்ற பலரும் அறியார்.
பரிமேலழகர் குறிப்புரை: அல்ல குறிப்பட்டுத் தலைமகளை எய்தப்பெறாத வருத்தமெல்லாம் தோன்ற, 'அரிய உயிர்' என்றும்,அங்ஙனம் அரியாளை எளியளாக்கி எடுக்கின்றமையின், அஃது அவ்வாருயிர்க்குப் பற்றுக்கோடாக நின்றது என்பான், 'அலர் எழ ஆருயிர் நிற்கும்' என்றும், 'பற்றுக்கோடாதலை அவ்வேதிலார் அறியின் தூற்றாது ஒழிவர்; ஒழியவே, ஆருயிர் போம், ஆகலான், அவரறியா தொழிகின்றது தெய்வத்தான்,' என்றும் கூறினான். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. [அஃது-அடைதற்கு அரியவளை எளியவள் ஆக்கி ஊரார் எடுத்துக் கூறுதல்; அவ்வாருயிர்க்கு-வருந்துகின்ற என் அரிய உயிர்க்கு; பற்றுக் கோடாதலை-ஆதாரமாக இருத்தலை].
அவ்வாறு உயிர்நிற்றலை எங்கள் புண்ணியத்தாலே பலர் அறியார் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நல்ல காலமாக அது பலருக்குத் தெரியாது', 'நிலைத்து நிற்கும் அச்செய்தியை எங்களது நல்வினைப் பயனால் ஊரில் பலரும் அறியவில்லை', 'இதனை நல்வினைப் பயனால் நானே அறிவன் அல்லது தூற்றுகின்ற பலரும் அறியார்', 'என் பாக்கிய வசத்தால் அது பிறருக்குத் தெரியாது' என்றபடி பொருள் உரைத்தனர்.
நல்லவேளை இது பலருக்குத் தெரியாது என்பது இப்பகுதியின் பொருள்.
|