கவ்வையால் கவ்விது காமம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அலரினானே அலர்தலை யுடைத்துக் காமம்;
மணக்குடவர் குறிப்புரை: செவ்வை யுடையதனைச் செவ்விது என்றாற்போலக் கவ்வையுடையதனைக் கவ்விது என்றார்.
பரிப்பெருமாள்: அலரினானே அலர்தலை யுடைத்துக் காமம்;
பரிப்பெருமாள் குறிப்புரை: செவ்வை யுடையதனைச் செவ்விது என்றாற்போலக் கவ்வையுடையதனைக் கவ்விது என்றார். அலர் அறிவுறுத்த தோழிக்கு இவன் கூறுகின்றது புனைந்துரையாகும் என்று நினைத்துப் பின்னும் களவொழுக்கம் வேண்டித் தலைமகன் கூறியது. இதுவும் ஒரு கூற்று மேலதனோடு இயைபு இன்று.
பரிதி: கவ்வை என்னும் வித்தினாலே என் காமம் உறுதி பெற்றது;
காலிங்கர்: நெஞ்சே! பிறர் கூறும் கவ்வையால் கவ்வுண்டது யாம் வேண்டும் காமம்; அதனால் கவ்வை இன்றாயின் சாலத் தவறுபடும் தன் தன்மை இழந்து என்றவாறு.
பரிமேலழகர்: (இதுவும் அது) என் காமம் இவ்வூர் எடுக்கின்ற அலரானே அலர்தலை யுடைத்தாயிற்று;
பரிமேலழகர் குறிப்புரை: அலர்தல்: மேன்மேல் மிகுதல். செவ்வையுடையதனைச் செவ்விது என்றாற் போலக் கவ்வையுடையதனைக் 'கவ்விது' என்றார்.
'காமம் அலரினாலே அலர்தலை யுடைத்தாயிற்று' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
கவ்விது என்பதற்கு 'அலர்தலை உடைத்து' என மணக்குடவரும் பரிமேலழகரும் பொருள் கூறினர். 'உறுதி பெற்றது' எனப் பரிதியும் 'கவ்வுண்டது' எனக் காளிங்கரும் உரைசெய்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'காதல் ஊர்ப்பேச்சால் கவர்ச்சி அடைகின்றது', 'என் காமம் ஊரார் பேசும் அலர் மொழியால் வளர்ச்சி பெற்று மலர்ந்தது', '(எங்களுக்குள்ள) காதல் இந்தப் பரிகாசப் பேச்சால் பலப்படுகிறது', 'என் காதல் இவ்வூர் கூறுகின்ற அலராலே மேன்மேலும் மிகுதலையுடைத்தாயிற்று' என்ற பொருளில் உரை தந்தனர்.
காமம் அலர் மொழியால் பற்றுக் கொண்டது என்பது இப்பகுதியின் பொருள்.
அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வலரில்லை யாயின் தனது தன்மை யிழந்து பொலிவழியும்.
பரிப்பெருமாள்: அவ்வலரில்லை யாயின் தனது தன்மை யிழந்து பொலிவழியும்.
பரிதி: இல்லையாயின் உறுதி பெறாது.
காலிங்கர்: அதனால் கவ்வை இன்றாயின் சாலத் தவறுபடும் தன் தன்மை இழந்து என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: இதிற் கவ்விது என்பது கவ்வியது என்றது. தவ்வென்னும் என்பது தவறுபடும் என்பது.
பரிமேலழகர்: அவ்வலர் இல்லையாயின், தன் இயல்பு இழந்து சுருங்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: இயல்பு: இன்பம் பயத்தல், 'தவ்வென்னும்' என்பது குறிப்பு மொழி: 'நூல்கால் யாத்த மாலை வெண்குடை, தவ்வென றசைஇத்
தாழ்துளி மறைப்ப' (நெடுநல்.184-85) என்புழியும் அது.
'அவ்வலர் இல்லையாயின் தனது தன்மையிழந்து பொலிவழியும்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் கூறினர்.
பரிமேலழகர் 'தன் இயலபு இழந்து சுருங்கும்' என்றார். ‘தவ்வென்னும்’ என்பதற்கு உறுதி பெறாது என்று பரிதியும், தவறுபடும் என்று காலிங்கரும் பொருள் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அது இல்லாவிடின் சிறப்பிழந்து சப்பென்றிருக்கும்', 'அவ்வலர் இல்லையாயின் காமம் தன்னியல் பிழந்து தாழ்ந்து விடும்
(சுருங்கும்)', 'இந்தப் பரிகாசப் பேச்சும் இல்லாவிட்டால் காதல் என்பதும் அதன் இன்பத்தை இழந்து சுவையற்றதாகிவிடும்', 'அவ் அலர் இல்லையாயின்
தன் தன்மை இழந்து சுருங்கும்' என்றபடி பொருள் உரைத்தனர்.
அவ்வலர் இல்லையாயின் தன் இயல்பு இழந்து சுவையற்று சப்பென்றிருக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
|