இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1145களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது

(அதிகாரம்:அலர் அறிவுறுத்தல் குறள் எண்:1145)

பொழிப்பு (மு வரதராசன்): காமம் அலரால் வெளிப்பட வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

மணக்குடவர் உரை: மயங்குந்தோறும் கள்ளுண்டலை விரும்பினாற்போலக் காமமும் அலராகுந்தோறும் இனிதாகும்.
இஃது அலரறிவுறுத்த தோழியை நோக்கி நுமக்குத் துன்ப மாயிற்றே இவ்வலரென்று வினாவிய தலைமகற்குத் தோழி கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) களித்தொறும் கள் உண்டல் வேட்டற்று - கள்ளுண்பார்க்குக் களிக்குந்தோறும் கள்ளுண்டல் இனிதாமாறு போல; காமம் வெளிப்படுந்தோறும் இனிது - எனக்குக் காமம் அலராந்தோறும் இனிதாகா நின்றது.
('வேட்கப்பட்டடற்றால்' என்பது 'வேட்டற்றால்' என நின்றது. வேட்கை மிகுதியால் அலரும் இன்பஞ் செய்யாநின்றது என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: கள்ளைக் குடிப்பார்க்கு மயக்குந்தோறும் குடித்தல் இன்பம் தருவது போல, எனக்குக் காமம் அலராக வெளிப்படுந்தோறும் இன்பம் பயக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந்தோறும் இனிது.

பதவுரை: களித்தொறும்-மகிழும்தோறும், மயங்கும் போதெல்லாம், கள்வெறியால் இன்புறஇன்புற; கள்-கள்; உண்டல்-உண்ணுதல்; வேட்டற்று-விரும்பினாற்போல; ஆல்- (அசை); காமம்-காதல்; வெளிப்படுந்தோறும்-பிறர்க்குத் தெரியுந்தோறும் அதாவது அலராகும் போதெல்லாம்; இனிது-இனிமையானது.


களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மயங்குந்தோறும் கள்ளுண்டலை விரும்பினாற்போல; .
பரிப்பெருமாள்: மயங்குந்தோறும் கள்ளுண்டலை விரும்பினாற்போல;
பரிதி: கள் உண்டால் களிக்கும். நினைத்தால் களியாது;
காலிங்கர்: உலகத்துக் கள்ளுண்பார்க்குப் பின்னும் பின்னும் அதனை உண்டு மகிழ்தலே வேண்டியிருக்கின்ற அத்தன்மைத்தாக;
பரிமேலழகர்:(இதுவும் அது.)கள்ளுண்பார்க்குக் களிக்குந்தோறும் கள்ளுண்டல் இனிதாமாறு போல; [களிக்கும் தோறும்-கள்ளுண்டு மகிழும்தோறும்]
பரிமேலழகர் குறிப்புரை: 'வேட்கப்பட்டடற்றால்' என்பது 'வேட்டற்றால்' என நின்றது.

'மயங்குந்தோறும் கள்ளுண்டலை விரும்பினாற்போல' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மகிழ மகிழ கள்ளின் ஆசை பெருகும்', 'குடிகாரனுக்குப் போதை அதிகரிக்க அதிகரிக்க கள்ளின்மேல் ஆசை அதிகரிப்பது போல', 'களிக்குந்தோறும் கள்ளுண்டல் அதனை உண்போர்க்கு இனிதாதல் போல', 'கள்ளுண்பார்க்குக் களிக்கும் தோறும் கள்ளுண்டலை விரும்புமாறு போல' என்ற பொருளில் உரை தந்தனர்.

களிப்புண்டாக உண்டாக கள்ளுண்டலை மேலும் மேலும் விரும்புமாறு போல என்பது இப்பகுதியின் பொருள்.

காமம் வெளிப்படுந் தோறும் இனிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காமமும் அலராகுந்தோறும் இனிதாகும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அலரறிவுறுத்த தோழியை நோக்கி நுமக்குத் துன்ப மாயிற்றே இவ்வலரென்று வினாவிய தலைமகற்குத் தோழி கூறியது.
பரிப்பெருமாள்: காமமும் அலராகுந்தோறும் இனிதாகும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அலரறிவுறுத்த தோழியை நோக்கி நுமக்குத் துன்ப மாயிற்றே இவ்வலரென்று வினாவிய தலைமகற்குத் தோழி கூறியது. வெளிப்ப்டுந்தோறும் இனிது என்றது விரைந்து வெளிப்படுதல் குறிப்பு.
பரிதி: காமமோ நினைக்குந்தோறும் களிக்கும் என்றவாறு.
காலிங்கர்: யாம் உற்ற காமமும், நெஞ்சே! பிறர்மாட்டு வெளிப்படுந்தோறும் மிக இனிது எனக்கு; என்ன வியப்போ என்றவாறு.
பரிமேலழகர்: எனக்குக் காமம் அலராந்தோறும் இனிதாகா நின்றது.
பரிமேலழகர் குறிப்புரை: வேட்கை மிகுதியால் அலரும் இன்பஞ் செய்யாநின்றது என்பதாம். [வேட்கை-புணர்ச்சி விருப்பம்]

'காமமும் அலராகுந்தோறும் இனிதாகும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பலர் அறிய அறியக் காதல் சிறக்கும்', 'எங்கள் காதலைப் பற்றிய நிந்தனைப் பேச்சுகள் ஊரில் பரவப் பரவ எங்கள் காதலும் அதிகப்பட்டு இன்பமளிக்கும்', 'அலரால் வெளிப்படுந்தோறும் காமம் இனிமை பயக்கின்றது', 'காதல் அலராகும் தோறும் எனக்கு இனிதாகின்றது' என்றபடி பொருள் உரைத்தனர்.

காமம் அலராகும் தோறும் இனிதாகின்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
களிப்புண்டாக உண்டாக கள்ளுண்டலை மேலும் மேலும் விரும்புமாறு போல, காமம் அலராகும் தோறும் இனிதாகின்றது என்பது பாடலின் பொருள்.
அலராகும் தோறும் எப்படி அது இனிதாகும்?

'எங்கள் காதல் செய்தி இன்னும் ஊருக்குள் பரவட்டும்!'- தலைவன்.

களிக்குந்தோறும் கள்ளுண்டல் மேன்மேலும் விரும்பப்படுவது போல, காதல், அலர் வெளிப்படுந்தோறும் மேலும் இனிமையாகின்றது.
காட்சிப் பின்புலம்:
களவொழுக்கத்திலுள்ள காதலர் இருவரும் இடையூறுகளை எதிர்கொள்வதால் சந்திக்க முடியாது பிரிந்து நிற்கின்றனர். அவர்களது உறவு பற்றி ஊரார் தெரிந்துகொண்டதால் பழிப்புப் பேச்சுக்கு ஆளாகின்றனர். உரிமையுடன் காதல் கொள்பவனாக இருப்பதால், இந்த அலர் தலைவனிடம் எந்தவித சலசலப்பையும் உண்டாக்கவில்லை. 'அலராலே என் உயிர் தங்கி நிற்கிறது என்பதை அவர்கள் அறியமாட்டர்கள்; அலராலேயே தான் தன் காதலியைத் துணைவியாக அடைந்துவிட்டது போன்ற உணர்வு உண்டாகிறது; காதலியின் அருமை தெரியாமல் ஊர் அவளைப்பற்றித் தப்பும் தவறுமாகப் பேசுகிறார்களே; என் காதல் இவ்வூர் கூறுகின்ற அலர் இல்லையானால் தன் தன்மை இழந்து சுருங்கும். அதாவது தங்களது காதலுக்கு அலரே சுவையூட்டுகிறது' எனக் கூறிக் கொண்டிருக்கிறான் தலைவன்.

இக்காட்சி:
கள்ளுண்ட களிப்பு பெருகப் பெருகக் கள் மேல் வேட்கை கூடுவது போன்று எங்கள் காதல் ஊரார்க்கு வெளிப்பட்டு அலராக எழ எழ அது எனக்கு மேலும் மேலும் மகிழ்வூட்டுகிறது என்று இங்கு தலைவன் கூறுகிறான்.
கள் அருந்துவதால் அறிவு மயக்கம் உண்டாகும். இருப்பினும் மயங்க மயங்க மேலும் மேலும் கள்ளை அருந்தும் வேட்கையே தோன்றும். அதுபோல அலர் வெளிப்பட வெளிப்பட எழ காதல் இனிக்கிறது என்கிறான் தலைவன். அலர் என்பது காதலர் உறவு பற்றி ஊரார் இழித்தும் பழித்தும் எள்ளியும் நகைத்தும் பேசுவதாகும். இருந்தாலும் ஊர்ப்பேச்சை எண்ணிப் பார்க்கும்போது தலைவனுக்கு ஒருவித கிளர்ச்சியே உண்டாகிறது. தலைவனையும் அவன் காதலியையும் இணைத்து ஊர்மக்கள் அலர் எழுப்புவது அவனிடம் சினமோ வெறுப்போ துன்பமோ உண்டாக்கவில்லை. மாறாக அது அவனது காதல் உணர்வு மேலும் மிகுந்து மகிழ்வடையவே செய்கிறது. அலர் எழ எழ இன்பம் பெருகவே செய்கிறது என்று சொல்கிறான் அவன். அலரால் காமத்தின் சிறப்பு தோன்றுகிறது என்கிறான்.

அலராகும் தோறும் எப்படி அது இனிதாகும்?

தங்கள் காதல் உறவு பற்றி ஊரார் தூற்றுகின்றனர். ஆனல் அதற்காக வருத்தம் கொள்ளாமல் மகிழ்கிறான் காதலன். அதுமட்டுமின்றி வம்புப்பேச்சுகள் மேலும் வெளிப்பட வெளிப்பட, கள் வெறி மேலும் மேலும் களிப்பூட்டுதல் போல், தனக்கு காமக்களிப்பு உண்டாகிறது என்கிறான். இது ஒரு வியப்பான செய்திதான். அலர் எழ எழ அவர்களின் காதலுறவு வலுப்படுவது போலவும், காதல் கைகூடி இணையும் காலம் நெருங்கி வருகிறது என்பது போலவும் அவன் உணர்வதால் களிப்பு உண்டாகிறது. அதனாலேயே மேலும் அலருரை பரவட்டும் என்று உவப்புடன் கூறுகிறான்.

அலரறிவுறுத்தலை வரவேற்கிற முறையில் வள்ளுவர் பாடுவது புதுமை என்று கூறும் தெ பொ மீனாட்சிசுந்தரம் இக்குறள் ஒரு புத்தம்புதுப் பா அமுதம் எனப் பாராட்டுவார்.

களிப்புண்டாக உண்டாக கள்ளுண்டலை மேலும் மேலும் விரும்புமாறு போல, காமம் அலராகும் தோறும் இனிதாகின்றது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அலர் அறிவுறுத்தல் பெறப்பெற காமம் கூடுகிறது என்கிறான் காதலன்.

பொழிப்பு

களிப்பு என்னும் போதை ஏறஏறக் கள்ளுண்டலை மேலும் மேலும் விரும்புமாறு போல, எங்கள் காதல் அலராகும் தோறும் இனிதாகின்றது.