ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஊரார் எடுத்த அலர் எருவாக அன்னை சொல்லும் சொற்கள் நீராக;
பரிப்பெருமாள்: ஊரார் எடுத்த அலர் எருவாக அன்னை சொல்லும் சொல் தண்ணீராக;
பரிதியார்: ஊரவர் ஏசுஞ்சொல் எருவாகவும் அன்னை வசைமொழி நீராகவும்;
காலிங்கர்: நெஞ்சே! நம்மைத் தான் எய்தப்பெறாமையாலுள்ளவாறு அருமை அவள் தனக்கும் ஒக்கும் அன்றே. அதனால் ஊரவர் உரைக்கும் கவ்வைதானே எருவாகத் தாய் சொல்லும் செறுத்துரையே நீராகக் கொண்டு;
பரிமேலழகர்: (வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தலைமகன் சிறைப்புறத்தானாதல் அறிந்த தோழி, ஊரவர் அலரும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும் எனச் சொல்லெடுப்பியவழி அவள் சொல்லியது.) இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாக அது கேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகின்ற வெஞ்சொல் நீராக; [சொல்லெடுப்பிய வழி - சொல் எழுப்பியவிடத்து; அது கேட்டு-அவ்வுரைக் கேட்டு]
பரிமேலழகர் குறிப்புரை: 'ஊரவர்' என்பது தொழிலான் ஆணொழித்து நின்றது.
'ஊரார் உரைக்கும் அலர் எருவாக அன்னை சொல்லும் சொற்கள் நீராக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஊர்ப்பேச்சு உரம்; தாயின் கடுஞ்சொல் நீர்', 'ஊரார் பேசுகின்ற ஏளனப் பேச்சு எருவாகவும், என் தாய் அதற்காக என்னை
இடித்துக் கூறும் சொற்கள் நீராகவும்', 'ஊராருடைய அலர் எருவாகவும் அதுகேட்டுத் தாய் சொல்லும் வெம்மொழி நீராகவும்', 'நோய் இவ்வூரார் பேசும்
பேச்சு எருவாக அது கேட்டு அன்னை வெகுண்டுரைக்கும் சொல் நீராக' என்ற பொருளில் உரை தந்தனர்.
ஊர்ப்பேச்சை உரமாகக் கொண்டும் தாயின் சொல்லை நீராக ஏற்றும் என்பது இப்பகுதியின் பொருள்.
நீளும் இந்நோய்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இந்நோய் வளராநின்றது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அலரின் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. இவையிரண்டிற்கும் வரைவானாதல் பயன்.
பரிப்பெருமாள்: இந்நோய் வளராநின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அலரினான் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. இவையிரண்டிற்கும் வரைவுகடாவுதல் பயன்.
பரிதியார்: நீளும் இந்நோய் என்றவாறு.
காலிங்கர்: நெடிது வளரும் போலும் இந்நோயானது இவள் திறத்தும் என்றவாறு.
பரிமேலழகர்: இக்காம நோயாகிய பயிர் வளராநின்றது.
பரிமேலழகர் குறிப்புரை: ஏக தேச உருவகம். சுருங்குதற்கு ஏதுவாவன தாமே விரிதற்கு ஏதுவாக நின்றன என்பதாம் வரைவானாதல் பயன்.
'இந்நோய் வளர்கின்றது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இப்படியாக வளரும் இக்காதற் பயிர்', '(என் மனத்தில் முளைத்துவிட்ட) காமப்பயிர் வளர்ச்சி அடைகிறது',
'இக்காமநோயாகிய பயிர் பெற்று வளர்கின்றது', 'இக்காதல் வளர்க்கின்ரது' என்றபடி பொருள் உரைத்தனர்.
வளரும் இந்தக் காதல் நோய் என்பது இப்பகுதியின் பொருள்.
|