காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காமமாகிய பெருக்காற்றினை நீந்திக் கரை காண்கின்றிலேன்;
பரிப்பெருமாள்: காமமாகிய பெருக்காற்றினை நீந்திக் கரை காண்கின்றிலேன்;
காலிங்கர்: நெஞ்சே! நமது காதலர்மாட்டுக் கருத்துறப் பெருகிச் செல்கின்ற இக்காம நோயாகிய கடும்புனல் வெள்ளத்தை நீந்தி ஒருகால் கரை காணப் பெறேனாகி மற்று;
பரிமேலழகர்: ('காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்', என்றாட்குச் சொல்லியது) காமமாகிய கடல் நீந்தாதேனல்லேன், நீந்தியும் அதற்குக் கரை காண்கின்றிலேன்; [நிறை- மறை பிறர் அறியாமை, மறைந்ததாகிய ஒன்றைப் பிறர் அறியாமல் செய்தல்; நீந்தாதேன் அல்லேன் - இரண்டு எதிர்மறைவினையும் சேர்ந்து நீந்தினேன் என்னும் உடன்பாட்டுப் பொருளைத் தந்தன; அதற்கு - காமமாகிய கடலுக்கு]
பரிமேலழகர் குறிப்புரை: கடுமை, ஈண்டு மிகுதிக்கண் நின்றது. உம்மை முன்னும் கூட்டப்பட்டது.
'காம நோயாகிய கடும்புனல் வெள்ளத்தை நீந்திக் கரை காண்கின்றிலேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'காமமாகிய கடலை நீந்தியும் கரையைச் சென்று என்னால் அடைய முடியவில்லை', 'காம வேதனையாகிய பெரிய கடலில் விழுந்து நீந்தி நீந்திக் கரை காணாதவளாகிய', 'காமமாகிய கடலை நீந்தியும் அதற்குக் கரை காணாது வருந்துகின்றேன்', 'காதலாகிய விரைந்து செல்லும் நீரைக் கடந்து அதன் கரையைக் காண முடியாதவளாகின்றேன்' என்ற பொருளில் உரை தந்தனர்.
காமமாகிய வெள்ளத்தைக் கடந்து கரை காணமுடியாதவளாக இருக்கின்றேன் என்பது இப்பகுதியின் பொருள்.
யாமத்தும் யானே உளேன்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரையிருள் யாமத்தினும் உறங்காது யானேயுளேன் மற்று உறங்காதாரில்லை.
மணக்குடவர் குறிப்புரை: இதுகாதலர் குறித்தநாள் வருந்துணையும் ஆற்றுமாறு என்னையென்று தலைமகள் தன்னுள்ளே சொல்லியது
பரிப்பெருமாள்: அரையிருள் யாமத்தினும் உறங்காதேன் யானேயுளளென மற்று உறங்காதாரில்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இதுகாதலர் குறித்தநாள் வருந்துணையும் ஆற்றுமாறு என்னையென்று தலைமகள் தன்னுள்ளே சொல்லியது
காலிங்கர்: அவ்விடையிருள் யாமத்தும் யானே உளேன். இனி இதற்கு உய்யுமாறு என்னை என்றவாறு.
பரிமேலழகர்: அக்காணாமைக் காலந்தான் எல்லோரும் துயிலும் அரையிருளாயிற்று, அவ்வரை இருட்கண்ணும் அதற்கு ஒரு துணையின்றி யானேயாயினேன், ஆயும் இறந்துபட்டுய்ந்து போகாது உளேனாகாநின்றேன், ஈதொரு தீவினைப்பயன் இருந்தவாறென். [அதற்கு - காமமாகிய கடலுக்கு; இறந்துபட்டு மடிந்து; உய்ந்து போகாது - அக்காமத் துன்பத்திலிருந்து தப்பித்துப் போகாது; உளேனாகா நின்றேன் - உயிரோடிக்கிறேன்]
பரிமேலழகர் குறிப்புரை: யானே ஆயினேன் என்பது நீ துணையாயிற்றிலை என்னும் குறிப்பிற்று. [நீ-தோழியே நீ; துணை ஆயிற்றிலை- துணை ஆயினாய் இல்லை]
'அரையிருள் யாமத்தினும் உறங்காது யானேயுளேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நள்ளிரவில் பிறரெல்லாம் உறங்க யான் மட்டும் இரவுக்குத் துணையாக இருக்கிறேன்', 'நான் இந்த நடுச்சாமத்தில் என் துணைவரின்றித் தனியே தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்', 'நான் இரவிலும் யாதொரு துணையும் இன்றித் தனித்திருக்கிறேன்', 'நள்ளிருள் இரவிலும் தனியாக யானே துணையின்றி உளேன்' என்றபடி பொருள் உரைத்தனர்.
நடுச்சாமத்திலும் நான் உறங்காமல் தனியாக விழித்துள்ளேன் என்பது இப்பகுதியின் பொருள்.
|