படல்ஆற்றா பைதல் உழக்கும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் உறங்கமாட்டாவாய்த் துன்பமுறாநின்றன;
பரிப்பெருமாள்: தாம் உறங்கமாட்டாவாய்த் துன்பமுறாநின்றன;
பரிதி: துயரமாற்றாமல் அழும்;
காலிங்கர்: தோழீ! ஒருபொழுதும் துயில மாட்டாமல் இங்ஙனம் சால உறுதுயர் உழக்கும்; யாவை எனின்;
பரிமேலழகர்: (இதுவும் அது) அத் தீவினையால் தாமும் துயில்கிலவாய்த் துன்பத்தையும் உழவாநின்றன; [அத்தீவினையால் - காமநோயைச் செய்த அத்தீவினையால்; தாமும் -கண்களும்; துயில்கிலவாய்-தூங்காதனவாகி]
'உறங்கமாட்டாவாய்த் துன்பமுறாநின்றன' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தூங்கமுடியாது துன்பப் படுகின்றன', 'அக்கொடுஞ் செயலால் தாமும் துயில் கொள்ளாதனவாகித் துயருறும்', 'இமை மூடாமல் விழித்துக் கொண்டிருந்து தாம் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனவே', 'அத்தீவினையாலே தாமும் தூக்கமில்லாது துன்புறுகின்றன' என்ற பொருளில் உரை தந்தனர்.
இமைகள் மூடமுடியாமல் துன்பமுறுகின்றன என்பது இப்பகுதியின் பொருள்.
கடல்ஆற்றாக் காமநோய் செய்தஎன் கண்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கடலினும் மிக்க காமநோயை என்மாட்டு நிறுத்துதலானே கண்கள்
மணக்குடவர் குறிப்புரை: இது பிறர்க்கு இன்னாமை செய்தார்க்கு இன்னாமை வந்ததென்று தோழிக்குத் தலைமகள் கூறியது
பரிப்பெருமாள்: கடலினும் மிக்க காமநோயை என்மாட்டு நிறுத்துதலானே கண்கள்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிறர்க்கு இன்னாமை செய்தார் தமக்கும் இன்னாமை வந்ததென்று தோழிக்குத் தலைமகள் கூறியது. இவை எல்லாம் ஒன்றின் ஒன்று வந்ததாகக் கொள்ளப்படா. இவ்வதிகாரத்து காமவேதனையால் கண்ணுக்கு உறுவன எல்லாம் கூறப்பட்டது என்றவாறு.
பரிதி: கடலினும் பெரிதாகிய காமநோய் செய்த கண்கள் என்றவாறு.
காலிங்கர்: கடலும் நிறையாற்றாப் பெருவெள்ளம் ஆகிய காமநோய் உற்ற என் கண்களானவை.
காலிங்கர் குறிப்புரை: யான் இதற்கு என் செய்யத் தகுவது என்றவாறு.
பரிமேலழகர்: எனக்குக் கடலும் சிறிதாம் வண்ணம் பெரியதாய காம நோயைச் செய்த என் கண்கள்.
பரிமேலழகர் குறிப்புரை: காமநோய் காட்சியான் வந்ததாகலின், அதனைக் கண்களே செய்ததாக்கிக் கூறினாள். துன்பம் அழுதலானாயது. [காட்சியான் - தலைமகனைக் காணுதலால்; அதனை - காமநோயை]
'கடலினும் மிக்க காமநோயைச் செய்த என் கண்கள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கடலினும் பெரிய காமம் தந்து என் கண்கள்', 'கடலைவிடப் பெரிதாய்க் காமநோயைச் செய்த என் கண்கள்', 'சமுத்திரத்தைவிடப் பெரிய காம வேதனையை எனக்கு உண்டாக்கி வைத்துவிட்டு என் கண்கள்', 'கடலும் ஒப்பாகாது சிறிதாகும்படி பெரிதாகிய காம நோயை எனக்குச் செய்த கண்கள்' என்றபடி பொருள் உரைத்தனர்.
கடல் கொள்ளாத அளவு காமநோயைச் செய்த என் கண்கள் என்பது இப்பகுதியின் பொருள்.
|