தொடியொடு தோள்நெகிழ:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வளையோடே தோள்கள் பண்டுபோல் இறுகாது நெகிழவும்;
பரிப்பெருமாள்: வளையோடே தோள்கள் பண்டுபோல் இறுகாது நெகிழவும்;
பரிதி: தொடியொடு தோள் வாட;
காலிங்கர்: தோழீ! இங்ஙனம் தொடியுடனே தோளும் கூட நெகிழ அதற்கு யான் உடம்பட்டிருப்பது என் எனின்;
பரிமேலழகர்: (தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) யான் ஆற்றவும், என்வயத்தவன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிய;
பரிமேலழகர் குறிப்புரை: ஒடு - மேல் வந்த பொருண்மைத்து.
'வளையோடே தோள்கள் பண்டுபோல் இறுகாது நெகிழவும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வளையலும் தோளும் நெகிழ்வதால்', 'பிரிவாற்றி இருக்கவும் வளைகழலத் தோள்கள் மெலிவதற்கே யான் வருந்துகின்றேன்', 'வளைகள் கழலும்படி என் கை மெலிவடைந்ததைப் பார்த்து', 'நான் பொறுத்திருக்கவும் வளையல்கள் கழலுமாறு தோள்கள் மெலிய' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
என் தோள்கள் மெலிந்து அணிகள் கழலவும் என்பது இப்பகுதியின் பொருள்.
நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நினக்குச் சொல்லாது யானே நோவேன்: நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றுவலென்பதுபடத் தலைமகள் சொல்லியது.
பரிப்பெருமாள்: நினக்குச் சொல்லாது யானே நோவேன்: நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றுவலென்பதுபட சொல்லியது.
பரிதி (‘நோவேம் இவர்தாம்’ பாடம்): நோவோம். நாயகர் விட்டுப் பிரிந்தால் கொடியர் இவர் என்று சொல்லுதற்கு என்றவாறு.
காலிங்கர் ('நேர்வர்' பாடம்): என்மாட்டு அன்பு உடையவரைக் கொடியர் என்று இவை பிறர்க்கு உரைத்தலை உள்ளுள்ளே பெரிதும் நொந்து என்றவாறு.
பரிமேலழகர்: அவற்றைக் கண்டு, நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது யான் என்னுள்ளே நோவா நின்றேன். [அவற்றை - தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிவனவற்றை]
பரிமேலழகர் குறிப்புரை: 'யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கன்று; நீ கூறுகின்றதற்கு' என்பதாம். [கூறுகின்றதற்கு-கொடியர் என்று சொல்லியதற்கு]
'யானே நோவேன்: நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவரைக் கொடியரெனக் கூறக்கேட்டு வருந்துகிறேன்', 'அதற்காக என் காதலரைக் கொடுமையுடையவர் என்று நொந்து கூறாதே', 'நீ அவரைக் கொடியவரென்று சொன்னதை என்னுள்ளம் பொறுக்கமாட்டாமையால், யான் வருந்துகின்றேன்', 'அவற்றைக் கண்டு நீ அவரைக் கொடியர் என்று கூறுதலைப் பொறாது நான் வருந்துவேன்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
ஆற்றமாட்டேன்; தலைவரைக் கொடியரென்று கூறுவதைப் பொறுக்கமாட்டாமல் வருந்துவேன் என்பது இப்பகுதியின் பொருள்.
|