பரிந்தவர் நல்காரென்று ஏங்கி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்னெஞ்சே! நீ வருத்தமுற்று அவர் அருளுகின்றிலரென்று இரங்கி;
பரிப்பெருமாள்: என்னெஞ்சே! நீ வருத்தமுற்று அவர் அருளுகின்றிலரென்று ஏங்கி;
பரிதி: பிரிந்த நாயகனார் எனக்கு மேலும் இன்பம் தரவேணும் என்று;
காலிங்கர்: 'நாம் இவரைப் பாதுகாக்கவேண்டும்' என்று உள்ளத்தாற் பரிந்து 'நம்மை அவர் நல்கின்றிலர்; என்னை' என்று ஏங்கியே;
பரிமேலழகர்: (இதுவும் அது) அவர் இவ்வாற்றாமையை அறியாமையின் நொந்து வந்து தலையளி செய்யாராயினார் என்று கருதி;
'வருத்தமுற்று அவர் அருளுகின்றிலரென்று இரங்கி/ஏங்கி/கருதி' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'காதலர் அருளார் என்றேங்கி', 'அவராக ஆசை கொண்டு (நம்மை நாடி) வரமாட்டார் என்று ஏக்கமடைந்து', 'பிரிந்தவர் மீண்டு வந்து அருள்செய்ய மாட்டாரென்று கவலைப்பட்டு', 'நம்மிடம் இரங்கி அவர் அன்பு செய்யமாட்டார் என்று ஏக்கமுற்று', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
காதலர் பரிந்து வந்து அருள் செய்யவில்லையே என்று ஏங்கி என்பது இப்பகுதியின் பொருள்.
பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்னெஞ்சே! நம்மைவிட்டுப்போனவர் பின்னே போகாநின்றாய், பேதையா யிருந்தாய்.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் தலைமகனிருந்த தேயத்தை நினைத்துக்கவன்ற நெஞ்சிற்குச் சொல்லியது.
பரிப்பெருமாள்: என்னெஞ்சே! நம்மைவிட்டுப்போனவர் பின்பே போகாநின்றாய், பேதையா யிருந்தாய்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் தலைமகனிருந்த தேயத்தை நினைத்துக்கவன்ற நெஞ்சிற்குச் சொல்லியது.
பரிதி: பிரிவு வைத்தபின் செல்வை; ஆகையாலே நெஞ்சே! மிகவும் பேதைகாண் நீ என்றவாறு.
காலிங்கர்: பின்னும் பிரிந்தவர் பின்சென்று நிற்பாய்; நீ சாலப்பேதைகாண்; என்னுடைய நெஞ்சே! என்றவாறு.
பரிமேலழகர்: என் நெஞ்சே; அறிவித்தற் பொருட்டு நம்மைப் பிரிந்து போயவர்பின் ஏங்கிச் செல்லலுற்ற நீ யாதும் அறியாய். [செல்லல் உற்ற நீ-சென்ற நீ]
பரிமேலழகர் குறிப்புரை: ஆற்றாமை கண்டு வைத்தும் நல்காது போயினாரைக் காணா வழிச்சென்று அறிவித்த துணையானே நல்க வருவர் என்று கருதினமையின் 'பேதை' என்றாள். [நல்காது-அருள் செய்யாமல்; நல்க-அருள் செய்ய]
'பின்னும் பிரிந்தவர் பின்சென்று நிற்பாய்; யாதும் அறியாய்; என்னுடைய நெஞ்சே!' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சே! பிரிந்தவர்பின் போவாய்; நீ பேதை', 'அறிவு கெட்ட என் மனமே! நம்மைப் பிரிந்து (வராமல் இருக்கிற) அவரிடம் நீ ஆசை கொண்டு போகப் புறப்பட்டுவிட்டாயே! (என்ன மதியீனம்!)', 'அவர்பின் விரும்பிச் செல்கின்றாயே; எனது நெஞ்சமே, நீ அறிவிலியே', 'என் நெஞ்சே! நம்மை விட்டுப் பிரிந்தவர் பின்னே செல்லுகின்றாய் ஒன்றும் அறியாய்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
என் நெஞ்சே! பிரிந்து சென்ற காதலரின் பின்னே நீ செல்கிறாய். உன்னுடைய அறியாமை என்னே! என்பது இப்பகுதியின் பொருள்.
|