துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('துன்னார்' பாடம்): மனமே! நம்மோடு செறியாராய்த் துறந்து போனவரை நெஞ்சகத்தே யுடையோமாயின்;
பரிப்பெருமாள்: மேன்மேல் நம்மோடு செறியாராய்த் துறந்து போனவரை நெஞ்சகத்தே யுடையோமாயின்;
பரிதி: கூடாமல் பிரிந்தவரை நெஞ்சத்திலே கொண்டிருந்து;
காலிங்கர் ('துன்னார்' பாடம்): நெஞ்சே! இன்றியமையாமை அறிந்தும் நம்மோடு கூடி வாழாருமாய்ப் பின்னை நினைந்து அருளாலும் இன்றிப் பெரிதும் துறந்தே ஒழிந்தாரை நாம் மற்று உடையேம்;
பரிமேலழகர்: (அவரை மறந்து ஆற்றல் வேண்டும் என்பதுபடச் சொல்லியது.) நம்மைக் கூடாவண்ணம் துறந்துபோயினாரை நாம் அகத்து உடையேமாக;
பரிமேலழகர் குறிப்புரை: 'குன்றின், நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்' (குறுந்.கடவுள்வாழ்த்து) என்புழிப்போல் 'நெஞ்சு' என்பது ஈண்டும் அகப் பொருட்டாய் நின்றது. [பொருட்டாய்-பொருள் உடையதாய்]
'நம்மோடு கூடி வாழாராய் துறந்து போனவரை நெஞ்சகத்தே யுடையோமாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். துன்னார் என்ற பாடவேறுபாட்டால் சிறிது பொருள் வேறுபட்டது.
இன்றைய ஆசிரியர்கள் 'நம்மோடு கூடாமல் விட்டுப் பிரிந்த காதலரை நாம் நம் நெஞ்சகத்தே வைத்துள்ளோம்', 'நெருங்காமல் நீங்கியவரை (வேற்றூர் போயிருக்கிற காதலரை) மனதில் வைத்துக் கொண்டே (ஏங்கி) இருந்தால்', 'நம்மைக்கூட நினையாது பிரிந்து போனவரை நம்முடைய நெஞ்சத்திலே வைத்திருப்போமாயின்', 'நம்மைக் கூடாவண்ணம் துறந்து போயினாரை நாம் நெஞ்சில் உடையேமாக', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
உடனிராமல் நீங்கிச் சென்றாரை நம்முடைய நெஞ்சத்திலே வைத்திருப்போமாயின் என்பது இப்பகுதியின் பொருள்.
இன்னும் இழத்தும் கவின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முன்னும் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம்;
மணக்குடவர் குறிப்புரை: ஆதலான் மறத்தலே கருமம். ஈண்டு நெஞ்சென்றது மனத்துடைய தானத்தை. இது நினைக்கின்றதனால் பயனில்லை யென்று கூறியது.
பரிப்பெருமாள்: முன்னம் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம்; ஆதலான் மறத்தலே கருமம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஈண்டு நெஞ்சம் என்றது மனத்தினுடைய தானத்தை. இது நினைக்கின்றதனால் பயனில்லை யென்று கூறியது.
பரிதி: மேன்மேலும் அழகை இழக்க வேண்டா என்றவாறு.
காலிங்கர்: ஆதலால் முன்பு இழந்த கவினே அன்றி மற்று இன்னமும் கவின் இழப்பேம்; எனவே, இறந்துபாடும் இயையும் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: முன் இழந்த புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினும் இழப்பேம். [புறக்கவின் -வெளித்தோற்ற அழகு; அகக்கவின் -நிறை]
பரிமேலழகர் குறிப்புரை: 'அவர் நம்மைத் துன்னாமல் துறந்தார் ஆகவும். நாம் அவரை மறத்தல் மாட்டேமாகவும், போன மெய்க்கவினே அன்றி நின்ற நிறையும் இழப்பேம்' என்பதாம். [துன்னாமல் - நெருங்காமல் (கூடாமல்); மெய்க்கவின் - உடலழகு]
'முன்பு இழந்த கவினே அன்றி மற்று இன்னமும் கவின் இழப்பேம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஆதலால் முன் இழந்த உடலழகேயன்றி இன்னும் அக அழகையும் (நிறை, நாணம்) இழப்போம்', '(இதுவரை அதனால் உறுப்பு நலனழிந்ததற்கு மேல்) இன்னும் அதிகமாக உடல் நலங்களையும் இழந்துவிடுவோம்', 'நாம் இன்னும் அழகை யிழந்தொழிவோம்', 'இன்னும் அழகினை இழப்போம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
நாம் இன்னும் அழகை இழப்போம் என்பது இப்பகுதியின் பொருள்.
|