மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்புஇன்றித்
தும்மல்போல் தோன்றி விடும்
(அதிகாரம்:நிறையழிதல்
குறள் எண்:1253)
பொழிப்பு (மு வரதராசன்): யான் காமத்தை என்னுள் மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல்போல் தானே வெளிப்பட்டு விடுகின்றது.
|
மணக்குடவர் உரை:
காமத்தை யான் அடக்கக்கருதுவேன்: அவ்வாறு செய்யவும். அது தும்மல் தோன்றுமாறுபோல என் குறிப்பின்றியும் தோன்றாநின்றது.
இது தலைமகள் நிறையழிந்து கூறிய சொற்கேட்டு இவ்வாறு செய்யாது இதனை மறைத்தல் வேண்டுமென்ற தோழிக்கு அவள் கூறியது.
பரிமேலழகர் உரை:
(மகளிர் காமம் மறைக்கப்படும், என்றாட்குச் சொல்லியது.) காமத்தை யான் மறைப்பேன் - இக்காமத்தை யான் என்னுள்ளே மறைக்கக் கருதுவேன்; குறிப்பு இன்றித் தும்மல் போல் தோன்றிவிடும் - அதனாலென், இஃது என் கருத்தின் வாராது தும்மல் போல் வெளிப்பட்டே விடாநின்றது.
('மன்' ஒழியிசைக் கண் வந்தது. ஓகாரம் இரங்கற்கண் வந்தது. 'தும்மல் அடங்காதாற் போல அடங்குகின்றதில்லை' என்பதாம்.)
இரா சாரங்கபாணி உரை:
இக்காம வேட்கையை என்னுள்ளே நான் மறைக்க நினைப்பேன். ஆனால் என் நினைவுக் குறிப்புக்கு அடங்காது தும்மல்போல வெளிப்பட்டு நிற்கும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
யானோ காமத்தை மறைப்பேன்மன் குறிப்புஇன்றித் தும்மல்போல் தோன்றி விடும்.
பதவுரை: மறைப்பேன்-ஒளிப்பேன், மறைத்து வைப்பேன்; மன்-(ஒழியிசை); காமத்தை-காதலை, காதல் வேட்கையை; யானோ-நானோ; குறிப்பு-கருத்து, (நினைவுக்)குறிப்பு; இன்றி-இல்லாமல்; தும்மல்-தும்முதல்; போல்-போன்று; தோன்றிவிடும்-வெளிப்பட்டுவிடும்.
|
மறைப்பேன்மன் காமத்தை யானோ:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காமத்தை யான் அடக்கக்கருதுவேன்;
பரிப்பெருமாள்: காமத்தை யான் அடக்கக்கருதுவேன்;
பரிதி: தன்னை ஒறுப்பதற்கு நொந்து நிறுத்துவேன்;
காலிங்கர்:['நிறுப்பென்மன்' பாடம்] தோழீ! அங்ஙனம் உற்ற எம் காமத்தை யானோ மற்று ஆம் துணையும் புலப்படாமை அகத்துள் நிறுத்து அமைப்பனாயினும்;
பரிமேலழகர்: (மகளிர் காமம் மறைக்கப்படும், என்றாட்குச் சொல்லியது.) இக்காமத்தை யான் என்னுள்ளே மறைக்கக் கருதுவேன்;
பரிமேலழகர் குறிப்புரை: 'மன்' ஒழியிசைக் கண் வந்தது. ஓகாரம் இரங்கற்கண் வந்தது. [மறைப்பேன்மன்' என்றவிடத்து 'மன்' என்னும் இடைச்சொல் யான் மறைக்கக் கருதினேன். ஆயினும் அது என்னால் முடியவில்லை என்று ஒழிந்த பொருளைத் தருதலின் ஒழியிசை ஆயிற்று]
'காமத்தை யான் மறைக்கக் கருதுவேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'நிறுப்பென்மன்' என்பது காலிங்கர் பாடமாதலால் அவர் அகத்துள் நிறுத்து அமைப்பனாயினும் என உரைத்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'நான் காமத்தை மறைக்கத்தான் செய்கின்றேன்', 'நானோ என் காம ஆசையை அடக்கி வைக்கத்தான் முயல்கின்றேன்', 'ஓ! யான் இக்காமத்தை மறைப்பேன்', 'இக்காதலை என் உள்ளத்தில் மறைக்க முயல்வேன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நானோ என் காதல் வேட்கையை மறைக்கத்தான் செய்கின்றேன் என்பது இப்பகுதியின் பொருள்.
குறிப்புஇன்றி தும்மல்போல் தோன்றி விடும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வாறு செய்யவும், அது தும்மல் தோன்றுமாறுபோல என் குறிப்பின்றியும் தோன்றாநின்றது.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் நிறையழிந்து கூறிய சொற்கேட்டு இவ்வாறு செய்யாது இதனை மறைத்தல் வேண்டுமென்ற தோழிக்கு அவள் கூறியது.
பரிப்பெருமாள்: அவ்வாறு செய்யவும், அது தும்மல் தோன்றுமாறுபோல என் குறிப்பின்றியும் தோன்றாநின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் நிறையழிந்து கூறிய சொற்கேட்டு இவ்வாறு செய்யாது இதனை மறைத்தல் வேண்டுமென்ற தோழிக்கு அவள் கூறியது.
பரிதி: என்றாலும், தும்மல்போல் ஆசை தோன்றும் என்றவாறு.
காலிங்கர்: தும்மலானது ஒருவர் குறிப்பின்றிப் புறத்து எழுந்து புறம் தோன்றுமாப்போலே மற்று இதுவும் என் குறிப்பு இன்றித் தானே புறத்து எங்கும் புலப்படும். ஆயின் என் செய்வேன் என்றவாறு.
பரிமேலழகர்: அதனாலென், இஃது என் கருத்தின் வாராது தும்மல் போல் வெளிப்பட்டே விடாநின்றது.
பரிமேலழகர் குறிப்புரை: 'தும்மல் அடங்காதாற் போல அடங்குகின்றதில்லை' என்பதாம்.
'அவ்வாறு செய்யவும், அது தும்மல் தோன்றுமாறுபோல என் குறிப்பின்றியும் தோன்றியது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'திடீரென்று தும்மல்போல் வெளியாகின்றது', 'ஆனால் அது (அடக்கி வைத்தாலும்) தும்மல் வருவது போல் திடீரென்று வந்துவிடுகிறது. (நானென்ன செய்வேன்?)', 'அஃது என் கருத்துவழி வராது தும்மலைப்போல அடக்க முடியாதபடி வெளிப்பட்டு விடுகின்றது', 'அதனால் எனக்குத் தெரியாமல் தும்மல்போல் வெளிப்பட்டு விடுகின்றது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
ஆனால் என் கருத்துக்கு மாறாக, தும்மல்போல் வெளிப்பட்டு விடுகின்றது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நானோ என் காதல் வேட்கையை மறைக்கத்தான் செய்கின்றேன்; ஆனால் குறிப்பின்றி, தும்மல்போல் தானாக வெளிப்பட்டு விடுகின்றது என்பது பாடலின் பொருள்.
'குறிப்பின்றி' குறிப்பது என்ன?
|
'காதல் வேட்கை பொத்துக்கொண்டு வெளிவந்துவிடுகிறதே' - தலைவி
நானோ காம உணர்வை மறைப்பேன். ஆனால் அது முன்அறிவிப்பின்றி வரும் தும்மல்போல் புறத்து வெளிப்பட்டுவிடுகின்றது.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகச் சென்ற தன் கணவர் மீண்டு வருவதாகக் குறித்துச் சொல்லியிருந்ததை நினைந்து நினைந்து வருந்திக் கொண்டிருக்கிறாள் தலைமகள். அவரை எப்பொழுது காண்போம் என்ற வேட்கை அவளிடம் மிகுந்து வருகிறது.
நாணம் என்ற தாழ் போட்ட மனஉறுதி என்னும் கதவால் தற்கட்டுப்பாடுடன், காதல் விருப்பங்கள் வந்து தலைவியின் உள்ளத்தைக் கலக்காமல் காப்பாற்றி வந்தாலும் காமம் என்னும் கோடரி அத்தாழையும் கதவையும் சேர்த்து உடைத்து அவளது நிறையைத் தகர்த்து எறிந்து விடுகிறது;
காமம் என்னும் கொடியது இரக்கமில்லாமல் தன் மனத்தை நள்ளிரவுப் பொழுதிலும் ஏவல் செய்து வேலை வாங்குகிறது அதாவது அவளது நெஞ்சத்தில் உணர்வுகளைத் தூண்டிக் காமவேட்கையை உண்டுபண்ணித் துன்புறுத்துகிறதாம்;
இவ்வாறு காமஎண்ணங்கள் உள்ளத்தில் மேலோங்கிவர கணவர் வரவிற்காக நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கிறாள் அவள்.
இக்காட்சி:
எங்கிருக்கிறார் என்று கூடத் தெரியாத அவரிடத்துச் சென்று கூடி மகிழலாமா என்று கூடத் தோன்றுகிறது தலைவிக்கு. இதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடாக இருக்கும். அது நிறையிழந்த நிலை. எனவே மறைக்க முயல்கிறாள். ஆயினும் அவளை அறியாமல் தான் தலைவரை உடனடியாகக் காணவேண்டுமென்று துடிப்பதையும் அவருடன் சேர்ந்திருக்கவேண்டும் என்ற வேட்கையுடன் இருப்பதையும் சொல்லத் தொடங்குகிறாள். 'என் காதல் விருப்பங்களை வெளியில் சொல்லாமல் மறைக்கத்தான் முயல்கிறேன். ஆனால், என்ன செய்ய? அது முன் அறிவிப்பின்றி வரும் தும்மலைப்போல என்னிடமிருந்து வெளிப்பட்டு விடுகின்றதே!' என்கிறாள் தலைவி.
பெண்டிரின் காமம் மறைக்கப்பட வேண்டியது, அது வெளிப்பட்டால் இழுக்காம். ஆனால் தும்மலானது ஒருவர் குறிப்பின்றிப் எழுந்து புறம் தோன்றுவதுபோல மற்று இதுவும் தன் குறிப்பு இன்றித் தானே புறத்து எங்கும் புலப்படுகிறது. நான் என் செய்வேன்? என வேதனையுடன் கூறுகிறாள் தலைவி.
தும்மல் என்பது தானாக வருவது. நாம் வேண்டும்போது வருவதல்ல. நாம் நினைத்தவேளை நிறுத்தவும் முடியாது. பொது இடங்களில் தும்மல் வரும்பொழுது அடக்கிக் கொள்ள முயற்சிப்பது ஒரு நாகரிகச் செயல். ஆனாலும் அதையும் மீறித் தோன்றுவதற்குரிய முன் அடையாளம் எதுவுமின்றித் தும்மல் வந்தே விடும். அதுபோல தன் உள்ளத்து காம உணர்வுகளை வெளியே சொல்லக்கூடாது என்று தலைவி கருதினாலும் அவள் நாண் குணத்தையும் மீறி அவை வெளிப்பட்டுவிடுகின்றனவாம்.
காமம் தோன்றியபிறகு அது மனத்தால் வெல்லமுடியாததாகிறது.
|
'குறிப்பின்றி' குறிப்பது என்ன?
'குறிப்பின்றி' என்ற சொல்லுக்கு என் குறிப்பின்றியும், என் குறிப்பு இன்றி, என் கருத்தின் வாராது, என் வசமின்றி, திடீரென்று, என் நினைவுக் குறிப்புக்கு அடங்காது, முன்னறிவிப்பு இல்லாமல், எச்சரிக்கை செய்யாமல், யான் அறியாமல், என் கருத்துவழி வராது, எனக்குத் தெரியாமல், முன் அறிவிப்பின்றி, என் எண்ணத்தின்படி மறைந்து நிற்காமல், என் கருத்துவழி நிற்காமல், தன்னிச்சையாக, தோன்றுவதன் அறிகுறியில்லாமல் திடீரென்று என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
'மன்' என்ற சொல் முடியாமைக் குறிப்பை உணர்த்த ஆளப்பட்டது.
மகளிரால் காதல் வேட்கையை அடக்கிக் கொள்ளுதல் இயலும். அடக்கமும் நாணமும் உடைய தலைவியும் அவள் உற்ற காம வேட்கையைப் பிறர் அறியாதவாறு அடக்கிக் கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் அதுவோ அவள் கருத்தின்வழி நில்லாது தும்மலைப் போலத் தானாக வெளிப்பட்டு விடுகின்றது.
உடலில் இயற்கையாக உண்டாகும் தும்மலை அடக்க முடியாதது போல, மனத்தில் எழுந்த காமத்தைத் தன்னால் மறைக்க முடியவில்லை என்று தலைவி தன் நிறையழிந்து அது வெளித்தோன்றுவதைக் குறிப்பிடுகிறாள்.
தலைமகள் தனது இயல்பாகிய நாணத்தால் அடக்கத்தக்க குறிப்புக்களைக் காதல் மிகுதியால் நிறையழிந்து வெளியிடுகிறாள் என்பது செய்தி.
குறிப்பின்றி என்பதற்கு முன்எச்சரிக்கையின்றி என்பது பொருள்.
|
நானோ என் காதல் வேட்கையை மறைக்கத்தான் செய்கின்றேன்; ஆனால் என் கருத்துக்கு மாறாக, தும்மல்போல் வெளிப்பட்டு விடுகின்றது என்பது இக்குறட்கருத்து.
தன் காதல் வேட்கையைச் சொல்லாமல் இருக்கமுடியவில்லை என்னும் தலைவியின் நிறையழிதல்.
காம வேட்கையை என்னுள்ளே மறைக்கத்தான் செய்கின்றேன்; ஆயின் அது தும்மல்போல் குறிப்பு ஏதும் தராமல் வெளியாகின்றது.
|