இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1258பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை

(அதிகாரம்:நிறையழிதல் குறள் எண்:1258)

பொழிப்பு (மு வரதராசன்): நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது. பலமாயங்களில் வல்ல கள்வனான காதலருடைய பணிவுடைய மொழி அன்றோ?மணக்குடவர் உரை: பலபொய்களையும் பேசவல்ல கள்வனது தாழ்ந்த மொழியல்லவோ நமது பெண்மையை அழிக்குங் கருவி?
இது பெண்மையல்ல என்ற தோழிக்கு அவன் என்னோடு கலந்த நாளில் சொன்ன சொற்கள் காண் நம் பெண்மையைக் கெடுக்கின்றது: அல்லது கெடாதென்று தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நம் பெண்மை உடைக்கும் படை - நம் நிறையாகிய அரணை அழிக்கும் தானை; பல் மாயக் கள்வன் பணிமொழியன்றோ - பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ? ஆனபின் அது நிற்குமாறென்னை?
(பெண்மை ஈண்டுத் தலைமைபற்றி நிறைமேல் நின்றது. 'வந்தாற் புலக்கக் கடவேம்' என்றும், 'புலந்தால் அவன் சொற்களானும் செயல்களானும் நீங்கேம்' என்றும், இவை முதலாக எண்ணிக்கொண்டிருந்தன யாவும் காணாது கலவிக்கண் தன்னினும் முற்படும் வகை வந்து தோன்றினான் என்பாள், 'பன்மாயக்கள்வன்' என்றாள். பணிமொழி - தம்மினும் தான் அன்பு மிகுதியுடையனாகச் சொல்லுஞ் சொற்கள். 'அவன் அத்தன்மையனாக, சொற்கள் அவையாக, நம் நிறையழியாயது ஒழியுமோ'? என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: பல பொய்மொழிகள் பேசுவதில் வல்ல காதல் கள்வனின் பணிவான இனிய மொழியன்றோ நம் பெண்மையிற் சிறந்த மனத்திண்மையுடைய (நிறையை) உடைத்தெறியும் படைக்கருவியாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நம் பெண்மை உடைக்கும் படை பல் மாயக் கள்வன் பணிமொழியன்றோ?

பதவுரை: பன்மாய-பலவாறாக ஏமாற்றவல்ல, பல வேடங்கள் புனைய வல்ல; கள்வன்-திருடன்; பணிமொழி-தாழ்ந்த சொல், பணிந்து கூறும் இன் சொற்கள்; அன்றோ-அல்லவா, இல்லையா; நம்-நமது; பெண்மை-பெண்தன்மை; உடைக்கும்-கெடுக்கும், அழிக்கும்; படை-கருவி.


பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பலபொய்களையும் பேசவல்ல கள்வனது தாழ்ந்த மொழியல்லவோ;
பரிப்பெருமாள்: பலபொய்களையும் வல்ல கள்வனது தாழ்ந்த மொழியல்லவோ;
பரிதி: பலபல மாயத்தை உள்ள கள்ளனின் மெத்தென்ற வார்த்தையன்றோ;
காலிங்கர்: தோழி நின்மாட்டு அன்பு பெரிது உடையேன்; அருளும் நீங்கேன்; நின்னிற் பிரியேன்; பிரியேனும் ஆற்றேன்; புறத்து உடம்பு இரண்டு அல்லது அகத்து உயிர் ஒன்றென வஞ்சனை பலவும் வகுத்து உடன்படுத்து எம்கவின் திறம் முழுதும் கவர்ந்த கள்வன் பண்புற மொழிந்த பணிமொழி அன்றோ;
பரிமேலழகர்: (இதுவும் அது.) பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ? ஆனபின் அது நிற்குமாறென்னை?
பரிமேலழகர் குறிப்புரை: 'வந்தாற் புலக்கக் கடவேம்' என்றும், 'புலந்தால் அவன் சொற்களானும் செயல்களானும் நீங்கேம்' என்றும், இவை முதலாக எண்ணிக்கொண்டிருந்தன யாவும் காணாது கலவிக்கண் தன்னினும் முற்படும் வகை வந்து தோன்றினான் என்பாள், 'பன்மாயக்கள்வன்' என்றாள். பணிமொழி - தம்மினும் தான் அன்பு மிகுதியுடையனாகச் சொல்லுஞ் சொற்கள். [நீங்கேம்-அப்பிணக்கினின்றும் நீங்கேம்]

'பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'பணிமொழி' என்றதற்குத் 'தாழ்ந்த மொழி' என்று மணக்குடவரும் 'மெத்தென்ற வார்த்தை' என்று பரிதியாரும் 'பண்புற மொழிந்த பணிமொழி' என்று காலிங்கரும் 'தாழ்ந்த சொற்கள்' எனப் பரிமேலழகரும் பொருள் தந்தனர். இதற்குத் தனது சிறப்புரையில் 'தம்மினும் தான் அன்பு மிகுதியுடையனாகச் சொல்லுஞ் சொற்கள்' என்று பரிமேலழகர் விளக்கம் தருவார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பசப்புடைய காதலனது தாழ்ந்த மொழியன்றோ', 'மிக்க ஓரவஞ்சகனாக (மறைந்து நின்று பாணம் விடும்) கள்ளானாகிய மன்மதனுடைய கட்டளையல்லவா', 'பல சூழ்ச்சிகளையுடைய உள்ளங்கவர் தலைவனுடைய பணிவான இனியமொழி', 'பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ?' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பசப்புடைய உள்ளங்கவர் கள்வரான காதலரின் மென்மையான இனிய சொற்கள் அல்லவா என்பது இப்பகுதியின் பொருள்.

நம் பெண்மை உடைக்கும் படை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நமது பெண்மையை அழிக்குங் கருவி?
மணக்குடவர் குறிப்புரை: இது பெண்மையல்ல என்ற தோழிக்கு அவன் என்னோடு கலந்த நாளில் சொன்ன சொற்கள் காண் நம் பெண்மையைக் கெடுக்கின்றது: அல்லது கெடாதென்று தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: நமது பெண்மையை அழிக்குங் கருவி?
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது 'அன்பில்லாதானை நினைத்து யான் சொன்ன மாற்றத்திற்கு மாறுபடக் கூறுதல் பெண்மையல்ல' என்ற தோழிக்கு அவன் என்னோடு கலந்த நாளில் சொன்ன சொற்கள் காண் நம் பெண்மையைக் கெடுக்கின்றது: அல்லது கெடாதென்று தலைமகள் கூறியது.
பரிதி: என் பெண்மைப் படையை ஓடவெட்டும் படை என்றவாறு.
காலிங்கர்: நம் பெண்மையை உடைக்கும் கருவி என்றவாறு.
பரிமேலழகர்: நம் நிறையாகிய அரணை அழிக்கும் தானை;
பரிமேலழகர் குறிப்புரை: பெண்மை ஈண்டுத் தலைமைபற்றி நிறைமேல் நின்றது. 'அவன் அத்தன்மையனாக, சொற்கள் அவையாக, நம் நிறையழியாயது ஒழியுமோ'? என்பதாம். [அத்தன்மையனாக-பன்மாயக் கள்வனாக; அவையாக-பணிமொழியாக]

நமது பெண்மையை அழிக்குங் கருவி என மற்ற தொல்லாசிரியர்கள் கூற பரிமேலழகர் நம் நிறையாகிய அரணை அழிக்கும் தானை என்று உரை எழுதினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நம்பெண்மைக் கதவைத் தகர்க்கும் படை', 'என்னுடைய நிறையை உடைக்கும் (கோடாரி) ஆயுதம்?', 'நம்முடைய நிறையைத் தகர்க்கும் ஆயுதமாக இருக்கின்றதல்லவா?', 'நம் பெண்மைத் தன்மையைக் கெடுக்கும் கருவி' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நமது பெண்மையின் மன உறுதியை அழிக்குங் கருவி என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
பசப்புடைய உள்ளங்கவர் கள்வரான காதலரின் மென்மையான இனிய சொற்கள் அல்லவா நமது பெண்தன்மையை அழிக்குங் கருவி என்பது பாடலின் பொருள்.
'பன்மாயக் கள்வன்' யார்?

'கொஞ்சு மொழி பேசி என்னவெல்லாமோ நாடகமாடி என்னைக் கவிழ்ப்பார்! என் தலைவர்' என்கிறாள் தலைமகள்

'பல மாயங்களையும் அறிந்த கள்வனாகிய காதலனின் பணிவான சொற்கள் அல்லவோ, தன் பெண்மையை அழிக்கும் கருவியாய் இருந்தன' என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாக அயல் சென்றிருந்த தலைவன் நெடுங்காலம் ஆகியும் இன்னும் திரும்பி வரவில்லை. பிரிவின் வேதனை தாங்கமாட்டாமல் காதலி துயருறுகிறாள். அது சமயம் பிரிவிற்கு முன்னர் நிகழ்ந்த புலவிக் காட்சிகள் அவள் நினைவுக்கு வருகின்றன. 'நாணம் என்ற தாழ்ப்பாள் இட்ட கதவை காமம் என்ற கருவி உடைக்கும்; ஊரெல்லாம் உறங்கும் நள்ளிரவிலும் காமம் இரக்கமின்றி என் நெஞ்சத்தை வருத்தி ஆளும்; காதல் உணர்வுகளை மறைக்க முயன்றாலும் அது தும்மல்போல் வெளிப்பட்டுவிடும்; என் மனத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றலுடையேன் என எண்ணிக்கொண்டிருக்கும்போது என் காதல் வெளியில் தெரிந்துவிடும்; தன்னை வெறுத்தவர் பின் காதல் நோய் உற்றவர் மட்டுமே செல்வர்; வெறுத்தவர் பின்னே செல்லும் என் துன்பத்தை என்னவென்று சொல்வேன்; தான் விரும்பும் காதலர் தனக்குப் பிடித்தமானவற்றைச் செய்யும்போது நாண் என்ற ஒன்றை அறியமாட்டோம்' இவ்வாறு மனத்தில் அடக்க வேண்டியதைப் பொறுக்க முடியாமல் வாய்விட்டுக் கூறிக் கொண்டிருக்கிறாள் அவள்.

இக்காட்சி:
காதலனுடன் பிணங்கியிருக்கும் சமயங்களில் வழக்கமாகத் தலைவி 'அவன் வந்தால் புலக்கவேண்டும்; அவனோடு பேசவும் மாட்டேன்; அவன் முகத்தைப் பார்க்கவும் மாட்டேன்; யார் வந்து யாது கூறினும் அதனைக் கேட்கவும் மாட்டேன்; அவன் என்ன சொல்லினும், எது செய்யினும் புலவி நீங்கேன்' என்று எண்ணிக் காத்திருப்பாள். காதலன் அவள் முன்வந்து தோன்றுவான். தன்மீது பிணக்கம் கொண்டுள்ளாள் என்பதறிந்து அவளை ஆட்கொள்ளும் நோக்கில், காதற்பெண்ணிடம் தன் ஆண்மையை ஒப்படைத்துவிட்டான் போல நடந்துகொள்கிறான். வஞ்சனை பலவும் வகுத்து அவள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வித்தகனாவான். மண்டியிடுவான்; அவளினும் தான் அன்பு மிகுதியுடையான் போன்று 'செல்லமே! செல்லமே' எனக் குழைந்து இனிக்கப் பேசுவான். பணிந்து கெஞ்சும் நோக்கில் அவளை மகிழ்விக்கிறதான மெய்யானதும் பொய்யானதுமான செய்திகளைச் சொல்வான். இப்பொழுது காட்சி மாறுகிறது. அவள் சினம் மறைகிறது. நாணமுள்ள அவளது பெண்தன்மை காமத்துக்கு அடிமையாகிறது. தலைவி அவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து விடுகிறாள்.
இங்கு மனைவி ஊடும்போது கணவன் அவளை எதிர்த்து அடக்கி வெல்ல முயலாமல் பணிமொழி பேசி தோற்க முன்வருகின்றான். அவனிடம் இல்லாத குற்றத்தையும் இருப்பதாகக் கூறிய காதலியின் நெஞ்சம் கசிந்து உருகிவிடுகின்றது, 'காதலனுடைய இனிய சொற்களே என் பெண்தன்மையை அழிக்கும் கருவியாகி என்னை நெகிழச் செய்தது' என்கின்றாள்: இவ்வாறாக அவன் வஞ்சகமாக நடந்து கொண்டவற்றையும் அவன் பேசிய வகையையும் தான் பெண்தன்மையை இழந்ததையும் நினவு கூர்ந்து சொல்கிறாள் தலைவி. பெண்தன்மை மிகக் கொண்டவற்குத் தன்மீது பெருமையும் பெருமதிப்பும் உண்டானாலும் காதல் துன்பத்தைப் பொறுக்க இயலாத நிலையில் மன அடக்கம் கெட்டு நாணம் நீங்கிவிடுகிறது.

இப்பாடலிலுள்ள ‘பெண்மை’ என்ற சொல்லுக்கு நிறையுடைமை எனப் பொருள்கொண்டு 'பெண்மைக்கு பெருமை தருவது நிறை; அதை உடைக்கும் கருவி மாயங்கள் செய்து தலைவியை மயக்கிய தலைவனது இனிய சொற்கள்' என இக்குறட்கு உரை கூறினர். ஆனால் உரிமையுள்ள கணவனிடம் எப்படி ஒரு பெண் நிறை இழக்க முடியும்? நிறையழிதல் என்பதற்கு 'நிறையழிதலாவது வேட்கை மிகுதியால் தன் நிலை யழிந்து தலைமகள் கூறுதல்' என்று மணக்குடவரும் 'தலைமகள் மனத்து அடக்கற்பாலனவற்றை வேட்கை மிகுதியான் அடக்க மாட்டாது வாய்விடுதல்' என்று பரிமேலழகரும் அதிகாரவிளக்கத்தில் கூறியுள்ளனர். அதாவது தலைவி வெளிஉலகத்து மாந்தரிடம் தனது காதல் செய்திகளைக் கூறுதலே நிறையழியதலாம்.

காதலன் காதலியிடம் பணிவாகப்போவது போலவே காதலி காதலனிடம் பணிமொழி பகர்வது பற்றியும் வள்ளுவர் இன்னோரிடத்தில் கூறியுள்ளார்: பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர் (காதற் சிறப்பு உரைத்தல் 1121 பொருள்: மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர், பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்) என்பது அது. பணிமொழி பகர்தல் காதலன் - காதலி இருவருக்கும் பொதுவாகக் கூறப்பட்டிருத்தல் அறிந்து இன்புறத்தக்கதாகும்.

மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் நினையுங் காலைப் புலவியுள் உரிய என்கிறது தொல்காப்பியம். (பொருளியல். 223 பொருள்: புலவியின்கண் தலைவியது உயர்வும் தலைவனது பணிவும் உரியவாம்). உயர்வு என்றது தலைவன் பணிந்துழி உட்கும் நாணுமின்றித் தலைவி அதனை ஏற்றுத்தலைமை செய்தொழுகுதலை. பணிவு என்றது தலைமைப்பாடு கருதாது தலைவியைப் பணிந்து தாழ்ந்து இரத்தலை. இவ்வுயர்வும் பணிவும் காமத்திற்குச் சிறப்பளித்து இன்பமிகுதி செய்தலின் "புலவியுள் உரிய" என்றார் தொல்காப்பியர். கற்பு வாழ்க்கையில் புலவிக்காலத்துத் தலைமக்கட்கு உரியதான மரபை அடியாகக் கொண்டமைந்தது இக்குறள்.

'இப்பாடலுக்கும் மற்றும் இவ்வதிகாரத்து மூன்று குறட்பாக்களுக்கும் (1257,1259,1260) பரிமேலழகர் 'பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு நிறையழிதலாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது' என்று தலைவன் பரத்தை இல்லிலிருந்து வருவதாகச் சூழல் அமைக்கிறார். பரத்தையர் பிரிவுக்கு குறளில் இடமில்லை என்பதால் இவ்வுரைகள் ஏற்கக்கூடியனவல்ல.

'பன்மாயக் கள்வன்' யார்?

'பன்மாயக் கள்வன்' என்ற தொடர்க்கு பலபொய்களையும் பேசவல்ல கள்வன், பலபொய்களையும் வல்ல கள்வன், பலபல மாயத்தை உள்ள கள்ளன், வஞ்சனை பலவும் வகுத்து உடன்படுத்து எம்கவின் திறம் முழுதும் கவர்ந்த கள்வன், பல பொய்களை வல்ல கள்வன், பலவிதமான மாயங்களைச் செய்து மயக்கும் காதலன், பசப்புடைய காதலன், பல பொய்மொழிகள் பேசுவதில் வல்ல காதல் கள்வன், மிகுந்த மாயக்காரத் திருடன், பலவகை மயக்கச் செயல்களைச் செய்யவல்ல காதலராம் கள்வன், பல சூழ்ச்சிகளையுடைய உள்ளங்கவர் தலைவன், பல பொய்களை வல்ல கள்வன், பல நடிப்புச் செயல்களில் வல்ல கள்வராகிய நம் காதலர், மாயக் கள்வன், பல பொய்த்தன்மைகளைக் கொண்ட திருடன் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

'பன்மாயக் கள்வன்' என்றதற்குப் பலவகையிலும் ஏமாற்றித் திருட்டுத்தனம் செய்பவன் என்பது பொருள். பல வஞ்சகச் செயல்களைச் செய்து தலைவியின் ஊடல் நீக்கப் போராடும் அவள் கணவனே பன்மாயக் கள்வன். மற்ற எதற்கும் இளகாது கணவனது நயந்து பேசும் பணிமொழிக்கு மயங்கி அவனுக்காட்படுவாள் மனைவி. ஊடற்காலங்களில் மயக்கும் ஆற்றல் நிறைந்தவனாக, பலவேடங்கள் புனைந்து, இனிய சொற்களைக் கூறித் தாழ்ந்து வேண்டிக் கூடுவதையும் அவளது உள்ளங்கவர் தலைவன் தன் இயல்பாகக் கொண்டுள்ளமையால் அவனைச் செல்லமாகப் 'பன்மாயக் கள்வன்' எனகூறி மகிழ்கிறாள் தலைமகள்.

இங்கு கணவன் 'மாயக்கள்வன்' என அன்புடனே அழைக்கப்படுகிறான். ஆனால் இதற்கு முந்தைய ஓர் அதிகாரத்தில் பொருட்பெண்டிர் 'மாயமகளிர்' என வெறுப்புடன் குறிக்கப்பெறுகின்றனர். ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப மாய மகளிர் முயக்கு (வரைவில்மகளிர் 918 பொருள்: மாயம் செய்வதில்வல்ல மகளிரது சேர்க்கை அறிவற்றவர்க்குக் காமத் தெய்வம் போன்று என்பர்) என்கிறது அப்பாடல்.

'பன்மாயக் கள்வன்' என்ற தொடர் பலபொய்களையும் பேசவல்ல கள்வன் எனப்பொருள்படும்.

பலவிதமான மாயங்களைச் செய்து மயக்கும் காதலனது மென்மையான இனிய சொற்களல்லவா பெண்தன்மையை உடைக்கும் கருவி? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதலனது படுக்கையறைக் கருவிகளைத் தலைவி வெளிப்படுத்தியதால் நிறையழிதல் ஆயிற்று.

பொழிப்பு

அந்த பசப்புக் கள்வனின் மென்மை மொழிதானே நம் பெண்மையைத் தகர்க்கும் கருவி.