உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன்பத்தை நச்சாது வலிமையையே நச்சிப் பேசுகின்ற மனமே துணையாகச் சென்றவர்;
பரிப்பெருமாள்: இன்பத்தை நச்சாது வலிமையையே நச்சிப் பேசி மனமே துணையாகச் சென்றவர்;
பரிதி: நாயகர் தனியே போகாமல் என் நெஞ்சைத் துணைக்கூட்டிப் போனவர்;
காலிங்கர்: அருங்கலை கற்றவர் அருகு சென்று பெருங்கலை ஞானம் பெறுதல் வேண்டித் தம் பண்பு அறிவு தான் ஒரு பருவம் செய்து எழுந்த உள்ளமே அதற்கு உறுதுணையாகக் கொண்டு ஓதற்குப் போனவரது;
காலிங்கர் குறிப்புரை: உரம் என்பது அறிவு.
பரிமேலழகர்: (இதுவும் அது.) இன்பம் நுகர்தலை நச்சாது வேறலை நச்சி நாம் துணையாதலை இகழ்ந்து தம்ஊக்கம் துணையாகப் போனார்; [(பகைவரை) வெல்லுதலை விரும்பி]
பரிமேலழகர் குறிப்புரை: 'உரன்' என்பது ஆகுபெயர்.
'இன்பத்தை நச்சாது வலிமையையே நச்சிப் பேசுகின்ற மனமே துணையாகச் சென்றவர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் உரம் என்ற சொல்லுக்கு அறிவு என்று பதவுரை கூறி இக்குறள் ஓதற்பிரிவு பற்றியது என உரை செய்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'உறுதியை நம்பி ஊக்கத்தோடு சென்றவர்', 'கலை அறிவை விழைந்து ஊக்கம் துணையாக ஓதற் பிரிவை மேற்கொண்ட காதலர்', '(வாழ்க்கைக்கு வலிமையான) பொருள் தேடும் ஆசையுடன் என்னைப் பிரிந்து போயிருக்கிற காதலர்', 'இன்பத்தை விரும்பாமல் வெற்றி விரும்பித் தமது ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு சென்றவர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
வெல்லுதற்குரிய வலிமையை நம்பித் தம் ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு சென்றவர் என்பது இப்பகுதியின் பொருள்.
வரல்நசைஇ இன்னும் உளேன்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வருவாரென்கின்ற ஆசைப்பாட்டினால் இன்னும் உளேனானேன்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அவர் வாராரென்று கூறியது.
பரிப்பெருமாள்: வருவாரென்கின்ற ஆசைப்பாட்டினால் இன்னும் உளேனானேன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பிரியப்பட்டாருக்கு இதனின்மேல் இறந்துபாடு அல்லது துன்பம் நிகழாமையின் குறிப்பறிவுறுத்தல் பின் கூறினார் ஆயினர்.
பரிதி: என் அருமையும் பெருமையும் உள்ள நெஞ்சைத் தனியே விடார் தாமும் கூட வருவார் என்றவாறு.
காலிங்கர்: வரவை நச்சி இது பற்றுக் கோடாக இன்னும் இறந்துபடாது உளேன் என் நெஞ்சமே;
காலிங்கர் குறிப்புரை: எனவே இதனாலும் இவளது தூது விடுதல் பயன் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அவற்றை இகழ்ந்து ஈண்டு வருதலை நச்சுதலான், யான் இவ்வெல்லையினும் உளேனாயினேன்.
பரிமேலழகர் குறிப்புரை: 'அந்நசையான் உயிர் வாழா நின்றேன்,அஃதில்லையாயின் இறந்துபடுவல்', என்பதாம்.
'வருவாரென்கின்ற ஆசைப்பாட்டினால் இன்னும் உளேனானேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வருதலை நம்பி இன்னும் வாழ்கின்றேன்', 'விரைவில் வருதலை விரும்பி இன்னும் உயிர் வாழ்கின்றேன்', 'திரும்பி வருவதில் ஆசை வைத்து அந்த ஆசைக்கு என் மனமே அவரை மறவாமல் எனக்குத் துணை புரிவதனால் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்', 'மீண்டும் வருதலை விரும்பி யான இன்னும் உயிர் வைத்துக் கொண்டிருக்கிறேன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
திரும்பி வருதலில் ஆசைவைத்து இன்னும் உயிரோடு உளேன் என்பது இப்பகுதியின் பொருள்.
|