புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: நம்மை நினையாமையை நினைத்துப் புலந்து நிற்பேனா? நெட்டாறு நீந்தி வருகின்றார் ஆதலின் எதிர் சென்று புல்லிக் கொள்வேனோ? இவை இரண்டும் செய்யாதே வேட்கை தீரக் கலப்பேனோ? இவை மூன்றிலும் யாது செய்வேன்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, கண்டாற் செய்வன இவை ஆதலின் இவை மூன்றும் செய்ய வேண்டா நின்றது என்று ஆராமை கூறியது.
பரிதி: ஊடுவோமோ? தழுவுவோமோ? கலவி நலம் கட்டுரைப்போமோ? என் செய்வோம்;
காலிங்கர்: தோழீ! அப்பொழுது சிறுது புலந்துகொள்வேனோ? அல்லது புல்லிக் கொள்வேனோ? இரண்டும் ஒருநாளே கலந்து கொள்வேனோ? யாது செய்வேன்? இக்குறி மெய்க்குறி யாயின் நினது நினைவினைச் சொல்வாயாக;
பரிமேலழகர்: (இதுவும் அது.) அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக்கடவேனோ, அன்றி என் ஆற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ, அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ? யாது செய்யக் கடவேன்? [அவ்விரு செயல்களையும் - புலத்தல் (பிணங்குதல்) புல்லல் (தழுவுதல்) என்னும் அவ்விரு செயல்களையும்; விரவக்கடவேனோ? - கலக்கக் கடவேனோ]
பரிமேலழகர் குறிப்புரை: புலவியும் புல்லலும் ஒரு பொழுதின்கண் விரவாமையின், 'கலப்பேன் கொல்' என்றாள். மூன்றனையுஞ் செய்தல் கருத்தாகலின், விதுப்பாயிற்று. இனிக் 'கலப்பேன்கொல்' என்பதற்கு 'ஒரு புதுமை செய்யாது பிரியாத நாட்போலக் கலந்தொழுகுவேனோ'? என்று உரைப்பாரும் உளர். [மூன்றனையும் - புலத்தல், புல்லல், கலத்தல் என்னும் மூன்று தொழிலையும்; புதுமை - ஊடலுடையவர் போன்று நடித்தல்; கலந்து ஒழுகுதல் - கூயொழுகுதல்]
புலக்கக் கடவேனோ, புல்லக்கடவேனோ, அவ்விரு செயல்களையும் விரவக் கடவேனோ/வேட்கை தீரக் கலப்பேனோ? என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். கலப்பேன்கொல் என்றதற்கு காலிங்கர், பரிமேலழகர் இருவரும், இரண்டும் (புல்லல், புலத்தல்) கலந்து கொள்வேனோ? என்று பொருள் கூற பரிப்பெருமாளும் பரிதியும் கலத்தல் பற்றி மட்டும் பேசுகின்றனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'காலத்தாழ்ச்சி கருதி புலவி கொள்வேனா? முயங்குவேனா? வேட்கை தீரச் செறியக் கூடுவேனா?', '(தாமதித்து வந்ததற்காகப்) பிணக்கம் காட்டுவேனா! (காம ஆசையால் உடனே ஓடி) தழுவிக் கொல்வேனா! அல்லது பிணக்கமும் ஆசையும் கலந்து தடுமாறுவேனா! (ஒன்றும் தெரியவில்லையே)', 'பிணங்குவேனோ; அல்லது தழுவுவேனோ; அல்லது இரண்டையும் கலந்து செய்வேனோ? தெரியவில்லை', 'ஊடுவேனோ? தழுவுவேனோ? வேற்றுமையின்றி இரண்டறக் கலந்து விடுவேனோ?', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஊடுவேனோ? தழுவுவேனோ? இரண்டறக் கலந்து விடுவேனோ? என்பது இப்பகுதியின் பொருள்.
கண்அன்ன கேளிர் வரின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: என் கண்போன்ற காதலர் வருவர் ஆயின்.
பரிதி: நாயகர் வந்தால்.
காலிங்கர்: நம் கண் அன்ன கேளிர் ஆகிய எம் காதலர் மடித்து வருவராயின்.
பரிமேலழகர்: கண்போற்சிறந்த கேளிர் வருவராயின்.
'கண்போற்சிறந்த கேளிர் வருவராயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கண்போற் சிறந்த காதலர் வருவாரானால்', 'எனக்குக் கண்ணான என் காதலர் வந்துவிட்டால்', 'கண்போன்ற காதலர் வருவாராயின்', 'கண்போற் சிறந்த காதலர் வந்தால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
என் கண்போன்ற காதலர் திரும்பிவரும்பொழுது என்பது இப்பகுதியின் பொருள்.
|