தும்முச் செறுப்ப:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தும்மல் தோற்ற அதனை யடக்கினேன்;
பரிப்பெருமாள்: தும்மல் தோற்ற அதனை யடக்கினேன்;
பரிதி: தும்மல் உண்டாகக் கண்ட நாயகி அழுதாள்;
காலிங்கர்: தும்மல் தோன்ற அதனை அடக்கினேன்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) எனக்குத் தும்மல் தோன்றியவழி, யார் உள்ளித் தும்மினீர்? என்று புலத்தலை அஞ்சி, அதனையான் அடக்கினேன், அங்ஙனம் அடக்கவும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'தும்மு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். செறுப்ப என்புழி இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தால் தொக்கது.
'தும்மல் தோன்றியவழி அதனை யடக்கினேன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வந்த தும்மலை அடக்கினேன்', 'நான் தும்மலை அடக்கினதற்கு', 'தும்மலையடக்கவும்', 'உண்டான தும்மலை அடக்க', என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தும்மல் அடக்கியபோது என்பது இப்பகுதியின் பொருள்.
அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதற்காக நுமர் உள்ளினமையை எமக்கு மறைக்கின்றீரோ வென்று சொல்லி அழுதாள்.
மணக்குடவர் குறிப்புரை: இது தும்மாதொழியினும் குற்றமென்று கூறியது.
பரிப்பெருமாள்: அதற்கு நுமர் உள்ளினமையை எம்மை மறைக்கின்றீரோ வென்று சொல்லி அழுதாள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தும்மாதொழியினும் குற்றமாம் என்று கூறியது.
பரிதி: உமது நாயகி வாழ்த்தத் தும்முவதன்றி இவள் வாழ்த்தத் தும்ம ஒண்ணாது என்று ஊடினாள் என்றவாறு.
காலிங்கர்: அதற்கு அழுதாள், நீர் நுமர் உள்ளினமையை எம்மை மறைத்திரோ என்று சொல்லி என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: தும்மாதொழியினும் குற்றமாம் என்று கூறிற்று.
பரிமேலழகர்: நுமர் நும்மை நினைத்தலை எம்மை மறைக்கல் உற்றீரோ என்று சொல்லிப் புலந்தழுதாள்.
பரிமேலழகர் குறிப்புரை: எம்மை என்பது 'நும்மோடு யாதுமியைபில்லாத எம்மை' என்பதுபட நின்ற இசையெச்சம். இதனை வடநூலார் 'காகு' என்ப. 'தும்மினும் குற்றம், ஒழியினும் குற்றமாயக்கால் செயற்பாலது யாது'? என்பதாம்.
'நுமர் உள்ளினமையை எமக்கு மறைக்கின்றீரோ வென்று சொல்லி அழுதாள்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அதற்குள் அழுதாள் உம்பெண்டிர் நினைப்பதை ஒளிக்கிறீர் என்று', 'அவள் 'உமக்கு வேண்டியவர் (யாரோ உம்மை) நினைக்கிறதை எனக்கு ஒளிக்க முயல்கின்றீர் என்று அழுதாள்', 'நுமக்கு வேண்டியவர் நும்மை நினைப்பதை எமக்கு மறைப்பதைக் கருதினீரோவென்று அழுதாள்', 'உம்மை விரும்பிய மகளிர் நினைத்தலை எமக்கு மறைக்கின்றீரோ என்று கூறி அழுதாள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
உமக்கு வேண்டியவர் உம்மை நினைப்பதை எமக்கு மறைக்கின்றீரோ என்று அழுதாள் என்பது இப்பகுதியின் பொருள்.
|