தன்னை உணர்த்தினும் காயும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னை ஊடல் தீர்த்தற்கு உணர்த்தினும் வெகுளும்;
பரிப்பெருமாள்: தன்னை ஊடல் தீர்க்கும்பொழுதும் வெகுளும்;
காலிங்கர்: தன்னை ஊடல் தீர்க்கும் பொழுதும் வெகுளும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) இவ்வாற்றான் ஊடிய தன்னை யான் பணிந்து உணர்த்துங்காலும் வெகுளா நிற்கும்; [உணர்த்துங் காலும் - ஊடலை நீக்கும் போதும்]
'தன்னை ஊடல் தீர்க்கும் பொழுதும் வெகுளும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவள் ஊடலைப் பணிந்து நீக்கினாலும் காய்வாள்', 'ஊடிய தலைவியைப் பணிந்து மென்மொழி பேசி ஊடலைப் போக்கினாலும் சினப்பாள்', '(வேறு யாரும் என்னை நினைப்பவரில்லை நீதான் நினைத்தாய்' என்று) அவளையே புகழ்ந்து சொல்லிப் பிணக்கம் நீக்க முயன்றும்கூட சினந்து கொள்ளுகிறாள்', 'அவளைப் பிணக்குத் தீர்த்தாலும் சினக்கின்றாள்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தன் ஊடல் தீர்த்தாலும் சினப்பாள் என்பது இப்பகுதியின் பொருள்.
பிறர்க்குநீர் இந்நீரர் ஆகுதிர் என்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர்க்கும் நீர் இவ்வாறு செய்வீரே யென்றுசொல்லி.
மணக்குடவர் குறிப்புரை: இது தன்னைப் போற்றினும் குற்றமென்று கூறியது.
பரிப்பெருமாள்: பிறர்க்கும் நீர் இவ்வாறு செய்வீரே யென்றுசொல்லி.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தன்னைப் போற்றினும் குற்றமாம் என்று கூறியது.
இவை எட்டும் தலைமகன் கூற்று. இவை நெஞ்சோடு புலத்தலின்பின் கூறற்பாலது ஆயினும், புலவி நுணுக்கம் சேரச்சொல்ல வேண்டும் ஆதலானும் இறந்தது காட்டல் என்னும் தந்திர வுத்தியானும் ஈண்டுக் கூறப்பட்டது.
காலிங்கர்: பிறர்க்கும் இவ்வாறு செய்வீரே என்று சொல்லி என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: தன்னைப் போற்றினும் குற்றமாம் என்று கூறியது.
பரிமேலழகர்: பிற மகளிர்க்கும் அவர் ஊடியவழி இவ்வாறே பணிந்துணர்த்தும் நீர்மையையுடையீராகுதிர், என்று சொல்லி. [நீர்மையை உடையீர் - இத்தன்மையை உடையீர்; ஆகுதிர் - ஆவிர்]
பரிமேலழகர் குறிப்புரை: 'இவள் தெளிவித்தவழியும் தெளியாள் என்பதுபற்றி என்மேல் ஏற்றிய தவற்றை உடம்பட்டுப் பணிந்தேன்; பணிய, அது தானும் புலத்தற்கு ஏதுவாய் முடிந்தது. இனி இவள் மாட்டு செய்யத் தகுவது யாது'? என்பதாம்.
'பிறர்க்கும் நீர் இவ்வாறு செய்வீரே யென்றுசொல்லி' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிறரிடமும் இங்ஙனந்தானே நடப்பீர் என்று', 'பிறரிடமும் ஊடல் நீக்க இவ்வாறுதான் நடந்து கொள்வீர் என்று', ''மற்றப் பெண்களிடத்தும் நீர் இப்படித்தானே பேசுவீர்' என்று', 'பிற பெண்டிர்க்கும் இத்தன்மையாய்ப் பிணக்குத் தீர்ப்பீர் என்று' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பிறரிடமும் இவ்வாறுதானே நடந்து கொள்வீர் என்று சொல்லி என்பது இப்பகுதியின் பொருள்.
|