பொய்மை, கடுஞ்சொல், புறங்கூறுதல் (குறளை), பயனில் சொல் ஆகிய நான்கு வகை பேச்சுக்களையும். மணிமேகலை சொற்குற்றங்களாகக் குறிப்பிடுகின்றது. வாய்மை, இனியவை கூறல், புறங்கூறாமை ஆகிய அதிகாரங்கள் மற்றவற்றைக் கூற பயனில் சொல்லைச் கடிவது இங்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. புறங்கூறத் தலைப்பட்டவன், வெற்றுரை பேசவும் பின்வாங்கமாட்டான் என்பதால் புறங்கூறாமை அதிகாரத்துக்குப் பின்னர் பயனிலசொல்லாமை அதிகாரம் வைக்கப்பட்டது.
தமக்கும் பிறர்க்கும் பயன்படாத சொற்களைப் பேசுதல் பயனில சொல்லுதல் ஆகும். இது இவ்வதிகாரத்தில் பொருள் தீர்ந்த அதாவது பொருளற்ற சொல் எனவும் குறிக்கப்பெற்றது. இதை வீண்பேச்சு, சோம்பல் பேச்சு, அற்பப் பேச்சு, சொற்பந்தல் போடுதல் எனவும் சொல்வர். பயனில பேசுவதால் பேசுபவனுடையதும் எதிரில் இருப்பவர்களதுமான காலமும் ஆற்றலும் வீணாகின்றன. வெறும் சொல்வன்மையைக் காட்டவோ, தான் எது சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டிய நிலையிலே சிலர் உளர் என்ற நினைப்புடனோ, எந்தவிதமான பயனும் தராததைப் பேசுவர்கள் இதைக் குற்றமென்றே நினைப்பதில்லை. வாழ்க்கையில் நோக்கமில்லாதவர்கள், யாதொரு கடமையும் பொறுப்புடன் ஏற்றுக்கொள்ளாதவர்கள், பிறரை ஏமாற்றி வாழ்பவர்கள், நடுநிலைப் பண்பில்லாதவர்கள் ஆகியோர் வீண் அரட்டை, வம்புப் பேச்சுகளிலும், வெற்று ஆரவாரப் பேச்சுக்களிலும் ஈடுபடுவர்.
அறிவு, பண்பு, நீர்மை, மனிதத்தன்மை ஆகியவற்றிற்கு எதிரானதென்பதாகக் குறள் பயனில சொல்லைக் கடிகிறது.
'அற்பப் பேச்சானது பலரது சினத்தைத் தூண்டுவதால் அது பலராலும் இகழப்படும். அதிலிருந்து எவ்வித பயனும் கிடைப்பதில்லை. பயனில பேசுபவன் தனது சிறப்புகளையும் உயர்வுகளையும் இழப்பான். அறிவுக் கூர்மையும் உணர்வாற்றலும் கொண்ட பெரியவர்கள் அறத்தை விரும்புகிறவர்கள், வீண் வார்த்தைகளைப் பேசமாட்டார்கள். அவர்கள் தெளிவான காட்சி கொண்டவர்கள், பயனற்ற வார்த்தைகளைப் பேசுகின்றவர்களை மக்களுள் பதர் என்று அழை எனச் சொல்கிறார் வள்ளுவர்.
முன்னேற்றம் அடைந்த நாடுகளில் பயனின்றிப் பேசித்திரியும் பழக்கம் இல்லை; அதற்கான நேரமும் அவர்களிடம் இல்லை என்பது நினைக்கத்தக்கது.
இன்று பயனற்ற செய்தி பரப்பும் ஊடகங்களையும், ஊடகங்கள் வழி தேவையற்றனவற்றைப் பேசுவோரையும் பயனில சொல் பாராட்டுபவர்களாகக் கொள்ளலாம்.