இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0431 குறள் திறன்-0432 குறள் திறன்-0433 குறள் திறன்-0434 குறள் திறன்-0435
குறள் திறன்-0436 குறள் திறன்-0437 குறள் திறன்-0438 குறள் திறன்-0439 குறள் திறன்-0440

குற்றம் கடிதல் என்பது குற்றங்களை நீக்குவதும், விலக்குவதும் கண்டிப்பதும் ஆகிய மூன்றையும் குறிப்பது. ஒவ்வொரு மனிதனும் தன்னிடத்தில் உள்ள குற்றங்களை அறிந்து அவற்றை நீக்க வேண்டும். பிறகு மீண்டும் குற்றங்கள் வந்துவிடாமல் விலக்க வேண்டும். அதன் பிறகு தன்னைச் சேர்ந்தவர்களிடத்திலுள்ள குற்றங்களைக் கண்டிக்க வேண்டும்.
- நாமக்கல் இராமலிங்கம்

குற்றங்கள் இவையென அறிதலும் அவற்றை நீக்குதலும் குற்றங்கடிதல் எனப்படும். குற்றங்கடிதல் அதிகாரம் அரசுக்கும் குடிமக்கட்குமாகப் பொதுமையிற் கூறப்பட்டது. இறுமாப்பு, சினம், அற்பத்தனம், நிதியைப் பதுக்கிக் கொள்ளல்(இவறல்), வறட்டு மானவுணர்ச்சி, பெருமையற்ற மகிழ்ச்சி காட்டல் ஆகிய குற்றங்களைக் குறிப்பிட்டுக் கடியச் சொல்கிறது. இவறல் அதாவது பொருளைத் தன்னிடமே இறுகப் பிடித்து வைத்துக் கொள்வது பற்றி ஒருமுறைக்கு மேல் பேசப்படுகிறது.

குற்றங்கடிதல்

கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என்ற அறிவு பெறுதல் பற்றிய அதிகாரங்களை அடுத்து, ஒருவன் அறிவுடையனாயினும் தன்னுடைய குற்றங்களை உணர்ந்து அவற்றைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துவதற்காக, குற்றங்கடிதல் அதிகாரம் அமைக்கப்பெற்றது. தன்னிடம் காணப்படும் குற்றங்கள் மட்டுமன்றி பிறரிடம் காணப்படும் குற்றங்களைக் கடிதலையும் கூறுவதாகக் கொள்ளவேண்டும் என்பர்.

இறுமாப்பு, சினம், அற்பத்தனம், பொது நிதியைச் செலவழியாமை, போலியான மானவுணர்ச்சி, பெருமையற்றவற்றில் உவகை கொள்ளல் தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொள்வது, நல்லதல்லாதனவற்றில் விருப்பு கொள்வது; பகைவர் அறிய பொருட்காதல் கொள்வது ஆகியன கடியப்படவேண்டிய குற்றங்கள் எனச் சொல்கிறது இவ்வதிகாரம்.
சிறிய குற்றம் நேர்ந்துவிட்டால் கூட பெரியதாக நடந்துவிட்டதே என வருந்த வேண்டும்; குற்றமின்மையே வாழ்க்கையின் பொருள் என்ற எண்ணத்துடன் வாழவேண்டும்; குற்றம் நிகழாமல் தடுக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும்; பிறர் குற்றங்களை நீக்க முற்படும் முன் தன்னிடமுள்ள குறைகளை முதலில் களையவேண்டும்; பொதுநிதியைச் செலவிடாமல் முடக்கிவைத்துக் கொள்வது குற்றம் என உணரவேண்டும்; சேமிப்பு நன்மைதானே என்று செய்யப்படவேண்டியன செய்யாமல் இருப்பது தவறான சிந்தனை என்று கொள்ளவேண்டும். இவை குற்றந் திருந்திக் குணமுற்றோங்க இவ்வதிகாரம் தரும் செய்திகள்.

இவற்றுள் இவறல், போலிமானம், மாணாஉவகை இவற்றை நீக்குதல் என்பதும், பிறர் குற்றம் காணுமுன் தன் குற்றம் நீக்குதல் என்பதும், 'இறைக்கு' என்று குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளன. இன்றைய சூழலில் இவை அரசுக்கும் அல்லது தலைவனுக்கும் கூறப்பட்டதாகக் கொள்ளவேண்டும். மேலும் இவ்வதிகாரத்துக் கருத்துக்கள் இறைக்கு மட்டுமன்றி மாந்தர் அனைவருக்கும் பொருந்துவனவே.

குற்றங்கடிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்:

  • 431 ஆம்குறள் ஆம்குறள் இறுமாப்பு, சினம், அற்பத்தனம் ஆகிய குற்றங்களை நீக்கி உயர்வு காண்பது பெருமைக்குரியது என்கிறது.
  • 432 ஆம்குறள் நிதியைப் பதுக்கிக் கொள்ளல், வறட்டு மானவுணர்ச்சி, பெருமையற்றனவற்றுக்கு மகிழ்ச்சி காட்டல் ஆகிய குணக்கேடுகளை ஆட்சியாளர் நீக்கிக்கொள்ள வேண்டும் எனச் சொல்வது.
  • 433 ஆம்குறள் சிறு குற்றம் உண்டானாலும் பொறாது உள்ளம் துடிப்பர் பழிக்கு அஞ்சி நாணுபவர்கள் என்கிறது.
  • 434 ஆம்குறள் குற்றம் இன்மையே பொருளாகக் கொண்டு வாழ்தல் வேண்டும் என அறிவுறுத்தும் பாடல்.
  • 435 ஆம்குறள் குற்றம் வராமல் தடுக்கும் ஆற்றலை வளர்த்து கொள்ளுதல் குற்றங் களையப் பெரிதும் உதவும் என்று கூறும் பா.
  • 436 ஆம்குறள் தன் குற்றம் களைந்து பிறர் குற்றம் ஆராயும் தலைவனிடம் எக்குறையும் காண்பது அரிது எனப்பாராட்டும் பாடல்.
  • 437 ஆம்குறள் பொதுப் பொருளைப் பொதுச் செயல்களுக்குச் செலவழிக்காது பதுக்குபவன் குற்றமுடையோன் எனப் பகரும் பாடல்.
  • 438 ஆம்குறள் செய்யப்பட வேண்டியவற்றுக்குச் செலவிடாத சிக்கனத்தன்மை எந்த நன்மையுள்ளும் சேராது எனச் சொல்கிறது.
  • 439 ஆம்குறள் உள்ளத்தாழ்மையையும் நன்மையற்ற செயல்களை விரும்பாமையையும் விதிக்கும் பாடல்.
  • 440 ஆவதுகுறள் பகைவர் அறிய பொருட்காதல் கொள்வது குற்றமாய் விடும் என எச்சரிக்கிறது.

எவ்வகையான குற்றங்கள் இங்கு கூறப்பட்டுள்ளன?

ஒருவன் செயல் மற்றவர்க்கோ, சமுகத்துக்கோ கேடு விளைவித்தால் குற்றமாகக் கருதப்படும். அதுபோல ஒருவன் பிறர்க்குச் செய்யும் உதவியைத் தடுப்பதும் பறிப்பதும் குற்றங்களாகும். குற்றத்தின் தன்மையைப் பொறுத்து சில பெருந்தீங்கை விளைவிக்கும். சில சிறு தீமை செய்வன. பெருந்தீங்குக்குக் காரணமாகாத குற்றங்களையே இவ்வதிகாரம் பேசுகிறது எனலாம்.
குறைகளை மற்றவர்கள் சுட்டிக்காட்டுவதற்கு முன்பே ஒருவன் அந்தக் குறைகளைத் தானே கண்டுகொண்டு அவற்றை நீக்க வேண்டும். தன்னிடம் உள்ள குறையை மற்றவர் சுட்டும்போது உரிய முறையில் திருத்திக் கொள்ளவும், தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமல் இருக்கவும் முயன்று பழகிக் கொண்டால், அவன் குறைகளை மூடி மறைக்க மாட்டான்; போலித்தனமாக நடக்கவும் மாட்டான்.

நீக்கப்படவேண்டிய குற்றங்களாகச் செருக்கு, சினம், சிறுமை இவறல், போலி மானம், மாணா உவகை இவற்றை இவ்வதிகாரம் முதல் இரண்டு குறட்பாக்களில் குறிக்கிறது. இவற்றை மனக்குற்றங்கள் என்பர். செருக்கு என்பது இறுமாப்பு. சிறுமையாவது தன் நிலையைத் தாழ்வு படுத்துவது போன்ற சொல்லும் செயலுமாகும். இவறல் என்பது பொதுப் பொருளை-அதாவது வரி போன்றவற்றின் மூலம் பெறப்பட்ட செல்வத்தை- அதற்குரிய நோக்கத்துக்காக செலவழிக்காமல், இறுகப் பற்றிப் பேழையிற் புதைத்தல் அல்லது அபகரித்துக் கொள்ளும் குணத்தை குறிக்கும். வறட்டுத்தனமான மானவுணர்ச்சியும் குற்றமேயாகும். மாணாஉவகை என்பது பிறர் துன்புறுதல் போன்றவற்றிற்கு உவகை கொண்டு எள்ளி நகைக்கும் குற்றத்தைக் குறிக்கும்.
தன்னைத்தானே பெரிதாக எண்ணி வியத்தலும் நன்மை தராத செயலைச் செய்தலும் தவிர்க்கப்பட வேண்டிய குற்றங்களாம். பகைவர் அறிய தான் காதலிக்கும் (விரும்பும்) பொருட்கள் மேல் வேட்கை கொள்வது குற்றமாய் ஆகிவிடும்.
இவறன்மை செலவழிக்காத தன்மை; அது சேமிப்பையும் குறிப்பதால் நன்மைதானே என்று சிலர் கேட்கலாம்; அது எந்த நன்மையுள்ளும் சேர்த்துக் கொள்ளக்கூடியது அல்ல என்பது தெளிவாகச் சொல்லப்படுகிறது. செலவழிக்கப்பட வேண்டியவற்றுக்கு செலவழிக்காதது குற்றமே என்று திரும்பத் திரும்ப குற்றங்கடிதல் அதிகாரம் கூறுகிறது.
குற்றங்கள் அறிவித்தது மட்டுமல்லாமல் ஒருவன் வாழ்தலின் அர்த்தம் என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் இவ்வதிகாரக் குறள் ஒன்று திடமாகக் கூறுகிறது- குற்றம் இல்லாமல் வாழ்தலே பொருளாக இருக்கவேண்டும் என்பது அது.

சில உரையாளர்கள் இவ்வதிகாரம் வடவரின் சுக்கிரநீதியுள் கூறப்பட்டுள்ள காமம், குரோதம், லோபம், மானம், உவகை, மதம் என்ற பகைவர்க்கம் (அரிஷட்வர்க்கம்) ஆறினையே கூறுகிறது எனக்கருதி அதன் அடிப்படையில் உரை எழுதினர். ஆனால், இந்த ஆறும் வள்ளுவர் காட்டும் ஆறுக்கும் மேலான குற்றங்களும் ஒத்தவையல்ல என்பது படிக்கும் யாவரும் உணர்வர். வள்ளுவர் சிறுமை என்று சொன்னதைக் சுக்கிரநீதி சொல்லும் காமம் எனக் கொண்டு 'காம விழைவே குற்றமில்லை, விழைவை எதிரிகள் அறிந்து கொள்ளும்படி துய்ப்பதே குற்றம்' என வலிந்து உரை கண்டனர் சிலர். வேறு சிலர் செருக்கு என்பதைக் காமத்துள் பொருத்தி உரைத்தனர்.

குற்றங்கடிதல் அதிகாரச் சிறப்பியல்புகள்

இவறல் பற்றி வள்ளுவர் இங்கு நிறையக் கூறியுள்ளார். பொதுப்பணம் பயன்பட்டே ஆகவேண்டும் என்பதில் அவர் எடுக்கும் உறுதிநிலை அவற்றில் தெரிகிறது.
ஒரு சிறந்த பொருளியல் கொள்கையையும் அவை வெளிப்படுத்தின.

குற்றமின்மையே வாழ்க்கையின் பொருளாகக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியது குற்றமில்லா வாழ்வை அவர் எவ்வளவு மதிக்கிறார் என்பதைக் காட்டுகிறது.




குறள் திறன்-0431 குறள் திறன்-0432 குறள் திறன்-0433 குறள் திறன்-0434 குறள் திறன்-0435
குறள் திறன்-0436 குறள் திறன்-0437 குறள் திறன்-0438 குறள் திறன்-0439 குறள் திறன்-0440