இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0591 குறள் திறன்-0592 குறள் திறன்-0593 குறள் திறன்-0594 குறள் திறன்-0595
குறள் திறன்-0596 குறள் திறன்-0597 குறள் திறன்-0598 குறள் திறன்-0599 குறள் திறன்-0600

ஊக்கம் உடைமை என்பது காரியத்தைச் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையும், செய்து முடிக்க வேண்டும் என்ற துடிப்பும் கூடிய மனக் கிளர்ச்சியுடையவராக இருப்பது. இது எல்லாருக்கும் வேண்டியது.
- நாமக்கல் இராமலிங்கம்

ஊக்கமுடைமை என்பது செயல் ஆற்றுவதில் தளர்ச்சியின்றி மன எழுச்சி உடைத்தாதலைக் குறிக்கும். செயலின் கண் ஆர்வமும் நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் ஒருப்பாட்டையும் முயற்சியையும் உள்ளடக்கியது. ஒருவன் வாழ்வில் உயர்வடைவதற்கு ஊக்கம் இன்றியமையாததாக வேண்டப்படுகிறது. ஊக்கமில்லையெனில் போட்டிநிறைந்த உலகில் வெற்றி பெற்று முன்னிலையில் நிற்க இயலாது. இவ்வதிகாரத்தைத் தொடர்ந்துவரும் மடியின்மை, ஆள்வினை உடைமை, இடுக்கணழியாமை என்பனவும் ஊக்கமுடைமைக்கு நெருங்கிய தொடர்புடையனவே.

ஊக்கமுடைமை

ஊக்கமுடைமை செயல்களை நிறைவேற்றுவதற்குத் துணை நிற்கும். அவற்றைச் செய்து முடிப்பேன் என ஒருப்பட கருதுவதால் பெறப்படும் உந்து ஆற்றல் அது. ஊக்கமுடையோர் குறிக்கோள்களில் ஒரு சிறுபகுதியும் தவறாதிருந்து, செயல்களை ஆற்றுவதில் பெரிதும் கண்ணும் கருத்துமாய் இருப்பர்.
அறிவை ஒர் கருவியாக அறிந்திருக்கிறோம். ஆனால் அறிவைக் கருவியாகப் பயன்படுத்த, செயல்களை இயக்க உதவும் உந்து சக்திதான் ஊக்கம். மனித உயிருக்கு இயல்பிலேயே அறிவறியும் ஆற்றலும் கிளர்ந்து எழுகின்ற இயல்பும் உண்டு. உயிரின் இந்தக் கிளர்ந்தெழும் ஆற்றல் நல்வழிப் படுத்தப்பெறும்பொழுது சிறந்த பயன் கிடைக்கிறது. உள்ளம் கிளர்த்தெழுந்து செயல் செய்யும் உணர்வுக்கு ஊக்கமுடைமை என்பது பெயர் வள்ளுவர் ஊக்கத்திற்கு அசைவிலா ஊக்கம் என்று அடைமொழி கொடுத்துப் பேசுகின்றார். இது இடுக்கண்கள் பல ஏற்பட்டாலும் சோர்வடையாமல் முன்னோக்கிச் செல்வதைக் குறிக்கும்.

உடைமைகள் என்று சொல்லப்படுகிற எல்லாப் பொருள்களையும் அடைதற்கு ஊக்கமே காரணமாகும். ஆதலால், அதனையுடையவரை உடையர் என்றும், அது இல்லார் உடையராகார் என்றும் ஊக்கமுடைமையின் உயர்வை உணர்தல் வேண்டும் என்கின்றன அதிகாரத்துப் பாடல்கள்.
ஊக்கமுடைமை சிறந்த செல்வம்; தம்மிடமுள்ள பொருளை இழந்தாலும் ஊக்கத்தால் அதை மீண்டும் பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை இருப்பதால் ஊக்கமுடையோர் இழப்புக்கு வருந்தமாட்டார்கள்; ஒருவனது ஆக்கம் அவனது ஊக்கத்தின் அளவாகும்; அவ்வாக்கங்களும் அவன் இருப்பிடம் தேடிச் செல்லும்; எப்பொழுதுமே ஊக்கம் கொண்டவனாகவே இருக்கவேண்டும். சிலபல செயல்களில் வெற்றி கிடைக்காவிட்டாலும் அவை தோல்வியாகக் கருதப்படா; ஊக்கம் இருந்தால்தான் பொருள் ஈட்டி வள்ளன்மைக்குப் பயன்படுத்தமுடியும்; ஊக்கத்தில் முன்னேறிச் செல்பவர்க்கு பெரிய இடையுறுகள் வந்தாலும் அவர்கள் சிந்தை தளரமாட்டார்கள்; யானையினும் சிறிய உருவான புலி யானையை விட ஊக்கம் மிகுதியாக இருப்பதால் அது யானையை அஞ்சச் செய்கிறது. ஊக்கத்தின் மேல் ஊக்கம் பெற்று வாழ்வில் வெற்றி பெற வேண்டும்; ஊக்கமே ஒருவற்கு அறிவாவது. அது இல்லாதவர்கள் உருவத்தால் மட்டுமே மக்கள். மற்றப்படி அவர்கள் மரத்துக்கு ஒப்பானவர்களே. இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.

ஊக்கமுடைமை அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 591ஆம் குறள் ஒருவரை இன்ன உடையவர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அது இல்லாதவர் வேறு என்ன பெற்றிருந்தாலும் உடையவர் ஆவாரோ? எனக் கேட்கிறது.
  • 592ஆம் குறள் ஊக்கம் உடைமையே ஒருவனுக்குச் செல்வமாகும்; பொருட்செல்வம் நில்லாது நீங்கி விடும் எனக் கூறுகிறது.
  • 593ஆம் குறள் ஊக்கத்தைத் திண்ணமாகக் கைப்பொருளாக உடையவர், செல்வத்தை இழந்து விட்டோம் என்று வருந்தார் எனச் சொல்கிறது.
  • 594ஆம் குறள் உறுதியான ஊக்கம் உடையவனிடம் வழி கேட்டுச் செல்வம் சென்றடையும் என்கிறது.
  • 595ஆம் குறள் நீர்நிலையில் நிறைந்துள்ள நீரின் அளவினதாக இருக்கும் அங்குள்ள பூத்தண்டின் நீளம்; மாந்தரது உயர்வு அவர்களது ஊக்கத்தின் அளவாகும் எனத் தெரிவிக்கிறது.
  • 596ஆம் குறள் நினைப்பன எல்லாம் உயர்வையே நினைக்க; அவ்வுயர்வை அடைய முடியாமல் போனாலும், எய்திய தன்மையோடு ஒக்கும் என்கிறது.
  • 597ஆம் குறள் உடம்பில் புதைந்த அம்பினால் புண்பட்டும் யானை தளராது யானை பெருமையை நிலைநிறுத்தும்; ஊக்கம் உடையார் தமது முயற்சிக்கு பேரிடர் வந்த இடத்துத் தளரார் என்பதைச் சொல்கிறது.
  • 598ஆம் வள்ளன்மை யுடையோம் என்ற பெருமிதத்தை இவ்வுலகில் ஊக்கமில்லாதவர் பெறமாட்டார் என்கிறது.
  • 599ஆம் குறள் பருத்த உடம்பினதாய்க் கூர்மையான தந்தத்தை உடையதாய் யானை இருந்தாலும் புலியால் தாக்குற்றால் அஞ்சும் எனக் கூறுகிறது.
  • 600ஆவது குறள் ஒருவற்கு வலிமையாவது ஊக்கமிகுதியே; அது இல்லாதவர் மரங்களாவார். வடிவால் மக்களாய் இருப்பதே மரங்களிலிருந்து வேறுபட்ட தன்மையாகும் என்கிறது.

ஊக்கமுடைமை அதிகாரச் சிறப்பியல்புகள்

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. அப்பொருளை அடைய ஊக்கம் கொண்டு செயல்பட வேண்டும். ஊக்கத்தின் இன்றியமையாமை கருதி அதற்கென ஒரு தனி அதிகாரம் அமைத்தார் வள்ளுவர்.

எல்லோரும் செல்வத்தைத் தேடி அலைகின்றனர். ஆனால் எவர் ஒருவர் சற்றும் மன அசைவில்லா ஊக்கங்கொண்டு செயல்படுகிறாரோ அவர் இருக்குமிடம் தேடி செல்வமும் செல்வாக்கும் வரும் என்கிறது இங்குள்ள ஒரு பாடல். ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை என்பது அக்குறள் (594).

முதல்வாசிப்பிலேயே படிப்பவரின் உள்ளத்தில் பதிந்து மனக்கிளர்ச்சியை உண்டுபண்ணக் கூடிய பாடல் வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு என்பது (595). இது ஒருவரது ஊக்கத்தின் அளவு உயர்வு என்கிறது. இரண்டு சின்னஞ்சிறு வாக்கியங்களில் நறுக்குத் தெறித்தாற் போன்று வேகமும் விறுவிறுப்பும் கொடுத்து அமைக்கப்பட்ட குறள் இது.

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து என்று எப்பொழுதும் உயர்ந்த குறிக்கோள்களையே எண்ணுக எனச் சொல்லும் குறள் (596) இவ்வதிகாரத்தின் கண் உள்ளது. அந்தக் குறிக்கோள் அடையமுடியாமல் தடைபட்டுப் போனாலும் அது நிறைவேறிய தன்மை உடையது என்று ஊக்கம் தருவது இது. உயர்வு வாராவிடுனும், உயர்வாக எண்ணுவதை விட்டுவிடாதே என்பது இதன் கருத்து. 'உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்' என்றது பழமொழியாய் விட்டது.
குறள் திறன்-0591 குறள் திறன்-0592 குறள் திறன்-0593 குறள் திறன்-0594 குறள் திறன்-0595
குறள் திறன்-0596 குறள் திறன்-0597 குறள் திறன்-0598 குறள் திறன்-0599 குறள் திறன்-0600