இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0661 குறள் திறன்-0662 குறள் திறன்-0663 குறள் திறன்-0664 குறள் திறன்-0665
குறள் திறன்-0666 குறள் திறன்-0667 குறள் திறன்-0668 குறள் திறன்-0669 குறள் திறன்-0670

எண்ணிய எண்ணியாங்கு எய்தல் வேண்டும் என்ற பேரெண்ணம் நமக்கு உண்டு. இவ்வெண்ணமெல்லாம் நிரம்பி வழியும் நமக்கு, ஊன்றிக் கொண்மின், எண்ணத் திட்பம் இல்லை, இல்லை, இல்லை. எண்ணியதை மீண்டும் மீண்டும் பெருக்கல் வாய்ப்பாடு போல் நினைவுக்குக் கொண்டு வரும் எண்ணப் பயிற்சி இல்லை. ....உரம்போடா நல்வித்து விளையாமை போல, திட்பம் இல்லா எண்ணம் செயலாதல் இன்று.
- வ சுப மாணிக்கம்

முன்பு 'ஊக்கமுடைமை'யில் வினைசெய்தற்கண் கிளர்ச்சி உடைத்தாதல் சொல்லப்பட்டது. இங்கு 'வினைத்திட்பம்' என்ற தலைப்பில் வினை முடித்தற்கான செயலுறுதி பேசப்படுகிறது. முறையாக ஆராய்ந்து தேர்ந்தெடுத்த தொழிலை, பின் வாங்காது திண்ணமாய் முன்னின்று முயன்று, முற்ற முடித்தலுக்கு வினைத்திட்பம் வேண்டும். மனத்திட்பம்தான் வினைத்திட்பம். அதாவது வினையின்திட்பம் விளங்குவது செய்வானுடைய உள்ளத்தைப் பொறுத்தது. வினைத்திட்பம் இருந்தால் எண்ணிய பொருளை எண்ணியபடி எய்த இயலும்.

வினைத்திட்பம்

வினைத்திட்பமாவது வினை செய்யும்பொழுது திண்ணியராகிச் செய்யவேண்டும் என்பதைச் சொல்வது. ஒருவர் மேற்கொண்ட தொழிலின் மீது உறுதியான பிடிப்பு உண்டானால் அது வினைத்திட்பம் ஆகிறது. மன உறுதியுடன் தொழிலில் ஈடுபட்டால்தான் அதைச் செப்பமுறச் செய்து முடிக்க இயலும். ஒரு செயலைக் கையில் எடுத்துக்கொண்டபின் எது வந்தாலும் அதனை விடாது இறுதிவரை சென்று செய்து முடிக்கவேண்டும். திண்மை இல்லாமல் செயலை மேற்கொண்டால் இடையூறுகளும் தோல்விகளும் துன்பங்களும் வரும்போது எடுத்துக்கொண்ட பணிகளைக் கைவிட்டு விடுவர். அல்லது ஆற்றாமை காரணமாகச் சோம்பலின் வயப்படுவர். மனத்தளர்ச்சியும், உடல் சோம்பலும் எத்தகைய பெருமுயற்சியையும் முறியடிக்கும் ஆற்றலைப் பெற்று இருப்பதால் அவ்விரண்டும் வினையைப் பற்றாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்; வினையில் விட்டகலாப்பற்று கொண்டு மனத்திட்பத்துடன் மெய்ம்முயற்சியையும் இணைத்து வினையாற்றினால் அரிய செயல்களையும் எளிதில் நிறைவேற்றிக் காட்ட முடியும். மிகப்பெரிய இடையூறுகள் நேரும்போது அவற்றை விலக்க வினைத்திட்பமுடையோரையே எண்ணி நாடுவர். இறுதியில் பலருக்கு நன்மை பயக்கும் செயலை துன்பங்களைத் தாங்கிக்கொண்டு உறுதியுடன் செய்யவேண்டும். ஆராய்ந்து ஒரு தொழிலை ஏற்றுக் கொண்டவர் முதலிலிருந்து முடிவுவரை ஏற்படும் குறிக்கீடுகள், இடையீடுகள், தடுமாற்றங்கள் கண்டு கலங்காது-அசையாத மன உறுதியுடையவராய்ச் செயற்பட்டால் 'எண்ணியவாறே எண்ணியதை எய்துதல்' இயலும். வேறுபல திண்மைகள் ஒருவர் கொண்டிருந்தாலும் வினைத்திண்மை உள்ளவர்களையே இவ்வுலகம் ஏற்கும்.

'செயல் திட்பம்' என்ற பொருளைத் தரும் வினைத்திட்பம் என்ற சொல் குறளில் மட்டுமே அமைந்துள்ள சொல்லாகும் என்பர்.

வினைத்திட்பம் அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 661ஆம் குறள் வினையுறுதி எனப்படுவது ஒருவனது மனத்திண்மை; அதனை ஒழிந்தவையெல்லாம் வேறு என்கிறது.
  • 662ஆம் குறள் வினை அறிஞரின் கொள்கை, செயல் ஆற்றும்போது இடையூறு வரும் என முன்னே அறிந்து நீக்குதலும், இடையிலே ஊறு நேரின் அதற்குத் தளராதிருத்தலும் ஆகிய இந்த இரண்டினது வழி எனக் கூறுகிறது.
  • 663ஆம் குறள் செயலை இறுதிவரையில் முடித்து வெளிவருவதே திறமையாகும்; இடையிலேயே மீள்வானாயின் அது எண்ணமுடியாத துன்பத்தைக் கொடுக்கும்.
  • 664ஆம் குறள் ஒரு செயலை இவ்வாறு செய்யலாம் என்று சொல்லுதல் எல்லோர்க்கும் எளியவாம்; சொல்லிய வண்ணமே செய்து முடித்தல் கடினம் ஆகும் என்கிறது.
  • 665ஆம் குறள் தனிச்சிறப்பு பெற்ற மாட்சிமைப்பட்டாரது வினைத் திட்பம் அரசு ஊறுற்றபொழுது வெல்லும்வழி எண்ணி அழிக்கும் என்பதைத் தெரிவிக்கிறது.
  • 666ஆம் குறள் எண்ணியவர் கருதிய செயலின் கண் உறுதியுடையவராக இருந்தால் கருதிய பொருள்களை எண்ணியவாறே அடைவர் என்கிறது.
  • 667ஆம் குறள் சுழலும் பெரிய தேருக்குச் சிறிய அளவிலான அச்சாணி போல வினைத்திட்பமுடையாரும் உள்ளனர்; ஒருவரது தோற்றம் கண்டு தாழ்வாக எண்ண வேண்டாம் எனச் சொல்கிறது.
  • 668ஆம் குறள் மனம் தெளிந்து செய்வதாக மேற்கொண்ட செயலின்கண் தளர்ச்சியின்றிக் காலத்தாழ்வை நீக்கிச் செய்க என்கிறது.
  • 669ஆம் குறள் துன்பம் மிகுதியாக வரினும் உறுதியொடு பொருந்திச் செய்க முடிவில் இன்பந்தரும் செயலை எனக் கூறுகிறது.
  • 670ஆவது குறள் எவ்வகைத் திட்பங்களைப் பெற்றிருந்தாலும் செயலின் கண் உறுதிப்பாடு இல்லாதவரை உலகம் விரும்பாது என்கிறது.

வினைத்திட்பம் அதிகாரச் சிறப்பியல்புகள்

வினைத்திட்பம் உடையோராலேயே ஒரு செயலைச் சொல்லியவண்ணம் செய்து முடிக்க முடியும் என்கிறது சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் (664) என்ற பாடல். நான் இவ்வினையை இவ்விதம் செய்து முடிப்பேன் எனச் சொல்வதாயினும் பிறர்க்கு அறிவுரை கூறுவதாயினும் அது எளிதே. ஆனால் செயல்திடம் உள்ளோரே அதைச் செய்து காட்டுவர் என்று மனித இயல்பை உணர்த்துவதாக அமைகிறது இது.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்(666) என்ற பாடல் படிக்கும்போதே மனதிற்கு உரம் போட்டு வினை செய்வார்க்கு ஊக்கம் ஊட்டுவதாக உள்ளது. மனத்திட்பம் உடையார்க்கு முடியாதது எதுவுமில்லை என்பதையும் சொல்கிறது இது.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து (667) பிறப்பொடு அமையும் வடிவு இகழுதற்குக்குக் காரணமாக இருக்கக்கூடாது. தேரின் அலங்காரத்தை விரும்பி நோக்குவோர் அதன் கடையாணியின் பக்கம் பார்வையை ஓடவிடமாட்டார். ஆனால் அது பாரமுள்ள தேரைத் தாங்கி அதன் நிலைக்குக் கொண்டுசெல்லும் வல்லமை வாய்ந்தது. மிக எளிமையாகவும் சுருக்கமாகவும் உள்ள இக்குறள் நடை சிறப்பாக அமைந்துள்ளது. 'அச்சாணி அன்னார்' என வினைத்திட்பம் பெற்றவர்கள் கூறப்படுகின்றனர். உருவம் நோக்காது ஒருவரது செயல்திறம் நோக்கி அவரை வினையேற்கச் செய்யவேண்டும் என்பதைச் சொல்வது இது.
குறள் திறன்-0661 குறள் திறன்-0662 குறள் திறன்-0663 குறள் திறன்-0664 குறள் திறன்-0665
குறள் திறன்-0666 குறள் திறன்-0667 குறள் திறன்-0668 குறள் திறன்-0669 குறள் திறன்-0670