இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-1271 குறள் திறன்-1272 குறள் திறன்-1273 குறள் திறன்-1274 குறள் திறன்-1275
குறள் திறன்-1276 குறள் திறன்-1277 குறள் திறன்-1278 குறள் திறன்-1279 குறள் திறன்-1280

அவளிடம் அவன் திரும்ப வருகிறான். பிரிவு அவர்களின் கூடலைப் புதியதாக்குகிறது. இது புறஅடக்கம். ஆனால் உள் உணர்ச்சிகள் எல்லை மீறுகின்றன. இந்தக் கட்டுப்பாடு, மனித இயல்பின் அறியாமையை மேலும் அழகுள்ளதாக்குகின்றது. அவளது காதல், புன்னகையின் பின்னால் மொட்டுக்குள் மறைந்திருக்கும் மணத்தைப் போன்று மறைந்து கண்கள்மூலம் வெளிப்படுகின்றது. அவள் காதலின் வலியிலிருந்து விடுதலை பெறக் கெஞ்சுகிறாள்.
- தெ பொ மீனாட்சி சுந்தரம்

கடமை காரணமாக நெடுநாட்கள் பிரிந்து சென்றிருந்து திரும்பி வந்துள்ள கணவர் குறிப்புக்கள் மூலம் தலைவியின் அழகைப் பாராட்டுகிறார். கண்ணுக்கு மையெழுதி, மணிமாலை யணிந்து, கைநிறைய வளைஏந்தி, புன்னகை பூத்த முகத்துடன், பெண்மை நிறைந்த பொலிவுடன் விளங்கும் மனைவியும் அவருடன் குறிப்புக்கள் மூலம் பேசுகிறாள். புன்னகை, வளையல்ஒலி, தோள், தாள், கண் இவற்றின்வழி காதல் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள். தலைவர் இக்குறிப்புகளை வாசித்து இன்புறுகிறார். தன் காமநோயினைத் தீர்க்குமாறு, மனைவி, வாய்ச்சொற்கள் இல்லாமல், கண்களால் இறைஞ்சுவதை பெண்மைக்கு பெண்மை சேர்ப்பதுபோல உள்ளது என்று அவர் கூறுகின்றார்.

குறிப்பறிவுறுத்தல்

குறிப்பறிவுறுத்தல் அதிகாரம் காதலுடைய இணையர் தம் உள்ளக் குறிப்பைப் புறத்தே உடம்பில் தோன்றும் மெய்ப்பாடுகளால் ஒருவர்க்கொருவர் அறியுமாறு செய்தலைச் சொல்கிறது.
பணி காரணமாகப் பிரிந்து சென்றிருந்த தலைவர், நீண்ட நாட்களுக்குப் பின் இல்லம் திரும்பியுள்ளார். இன்னும் மனைவியை நெருங்கித் தனிமையில் சந்திக்க இயலவில்லை. ஆனாலும் இருவரும் தங்கள் மனத்தில் எழுந்த உணர்வுகளை எண்ணங்களை, வாய்ச்சொற்களே இல்லாமல் குறிப்புக்களால் அறிவுறுத்திக் கொள்கின்றனர்.
கண்‌, முறுவல்,‌ வளை, பசலை முதலியவற்றின்‌ குறிப்புகளால்‌ உள்ளுணர்வுகள் வெளிப்படுகின்றன. முதலில் தலைவர் அவள் உள்ளத்தில் உள்ள கருத்தோட்டங்களைப் புரிந்துகொண்டவராகி அவள் அழகையும் சுவைக்கின்ற பகுதி உள்ளது. அடுத்து தலைவி பற்றியது. தலைவர் திரும்பி வந்தது அவளுக்குப் பெரும் ஆறுதல் அளிப்பதுதான்; அவர்கள் கூடி இன்பம் துய்த்தார்கள். மிக அன்பு காட்டி ஆசையாகக் கூடுவதில் பிரியும் கொடுமைக் குறிப்பை உணர்ந்தாள் அவள். அதனால் அவர் மறுபடியும் அன்பற்று பிரிந்து விடுவாரோ என்ற அடிப்படையற்ற அச்சம் அவளுக்குத் தோன்றிவிடுகிறது. அந்தப் பய மனநிலையில் அவர் பிரிந்துவிட்டார் என்பது போலக் கலக்கமுற்று, அவளது தோள் மெலிந்தது; வளை கழன்றது; உடலில் பசலை படர்ந்தது என எண்ணத் தொடங்கிவிட்டாள். இவ்வளவு நாட்கள் பிரிவின் துயரத்தை அனுபவித்தவள் ஆதலால் இன்னொருமுறை அவர் அவளை விட்டு நீங்குவதை அவளால் தாங்கமுடியாது என உணர்கிறாள். இவ்விதமான உள்ளக் குமுறல்களையும் தலைவி குறிப்புக்களால் கணவர்க்கு அறிவுறுத்துவதாகப் பாடல்கள் உள்ளன. மறுபடியும் வரும் தலைவர் பகுதியில் தலைவி தொடிநோக்கி, தோள்நோக்கி, பின் அடி நோக்குவதை - பிரியின் உடன்வருவேன் என்று அவள் சொல்வதை அறிந்து கொள்கிறார். மனைவி தன் காதல் விருப்பத்தைக் கண்கள் வழி குறிப்பால் உணர்த்துவதை மிகவும் பாராட்டி மகிழ்கிறார்.

குறிப்பறிவுறுத்தல் - சில புரிதல்கள்

கணவன் - மனைவி இடை குறிப்பறிவுறுத்தல் ஏன்?
களவியலிலுள்ள குறிப்புஅறிதல் அதிகாரம் ஒருவரையொருவர் முன்பின் அறியாதவர்களாக இருந்தவர்கள், பொதுஇடங்களில், மற்றவர் குறிப்பை-உள்ளக் கிடக்கையை அறிதல் பற்றிச் சொல்லியது. குறிப்பறிவுறுத்தல் அதிகாரம். கற்பியலில் அதாவது மணவினை முடிந்து இல்லறவாழ்வில் ஈடுபட்டுள்ள கணவன் மனைவி இவர்களிடை உள்ள காதல் உறவு பற்றிய பகுப்பில் உள்ளது. பிறர் கருதியதனை அவர் வாயால் கூறாமல் குறிப்புக்கள் மூலம் வெளிப்படுத்துவது குறிப்பறிவுறுத்தல் ஆகும். தமது இல்லத்தில் ஒன்றாக உறையும் இவர்களிடை குறிப்புக்கள் மூலம் பேசவேண்டிய தேவை என்ன? இல்லத்தில் பெற்றோர் மற்றும் சுற்றம் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அவர்கள் முன்னிலையில் இவர்கள் எப்படி வெளிப்படையாகக் காதல் எண்ணங்களைப் பகிர முடியும்? நெருங்கித் தனித்துப் பேசும் வேளை அவர்களுக்கு இன்னும் உண்டாகவில்லை. எனவே குறிப்புக்கள் மூலம் பேசினர் எனலாம்.

உடன்போதல்-கற்பியலுக்கு ஏற்குமா?
தொடிநோக்கி.... என்னும் குறள் எண் 1279 உடன்போக்கைக் குறிப்பதாக உரையாசிரியர்களும் ஆய்வாளர்களும் கொள்கின்றனர். உடன்போக்கு என்றதால் இது களவியலுக்குரியது என்ற முடிவுக்கும் வருகின்றனர். ஏனெனில் கற்பினுள் உடன்போக்கு நிகழ்தல் இல்லை எனப் பல புலவர்கள் கூறி வருகின்றனர். களவியல் என்று உரை செய்தவர்கள் களவுக்காலத்தில் வரைவிடைவைத்து (அதாவது பின்பு வந்து திருமணம் செய்வதாகக் கூறிப்) பிரிய எண்ணிய தலைவர் கருத்துக்கு உடன்படாது உடன்போக எண்ணிய தலைவியின் செயலே இக்குறளில் கூறப்பட்டது என்று கூறி தலைவர் பிரியின் தன் தொடி கழலும் தோள் மெலியும் என எண்ணி அவற்றை நோக்கி அவ்வாறு நிகழாமல் அவர் செல்லுங்கால் உடன் நடத்தல் வேண்டும் என்னும் குறிப்புடன் தன்னடியையும் நோக்கினாளாம் என்பர்.
ஆனால் திருமணமாகிய கற்பியல் வாழ்விலும் உடன் போகுதல் உண்டு என்பார் வ சுப மாணிக்கம். மேலும் அவர் 'தலைவியர் களவிலும் கற்பிலும் உடன்போக்கை நாடுபவர்களாகப் புலவரின் பல பாடல்கள் காட்டுகின்றன. தலைவர்களும் அத்தகைய துணைப்போக்கினை ஒருவாறு உடன்படக் காண்கிறோம்' எனவும் கூறியுள்ளார்.
உடன்போக்கு என்றால் உடன் செல்லுதல் என்று பொருள். இப்பாடலில் 'தலைவரின்றி என்னால் ஆற்றியிருக்க முடியாது; பிரியின் தன்னையும் அழைத்துச் செல்லுங்கள்' என்று மனைவி வேண்டுகிறாள். அவ்வளவுதான். அவள் உடன் சென்றாள் என்று சொல்லப்படவில்லை; தொழில் காரணமாகத் தலைவர் அயல் செல்லும்போது மனைவி உடன் செல்லும் வழக்கம் அன்றைக்கும் இல்லை இன்றைக்கும் கிடையாது.
குறளின் காமத்துப்பால் கோவைகளைப் போலக் காதற் கதையைத் தொடர்ச்சியாகக் கூறுவதில்லை என்றாலும், அதிகாரங்களின் வைப்பு ஓர் ஒழுங்குமுறையைப் பின்பற்றவே செய்கிறது என்பதை மறுக்க முடியாது. களவியலுக்குரியனவும் கற்பியலுக்குரியனவுமான பாடல்கள் மாறிமாறிக் கலந்து வந்துள்ளதாகக் காமத்துப்பால் அதிகாரங்களைக் கொள்வது குழப்பங்களுக்கே வழிவகுக்கும். எனவே உடன்போக்கு போன்றவற்றைக் களவு வாழ்வில்மட்டும்தான் நடக்கும் எனக் கொள்ளத் தேவையில்லை. இவ்வதிகாரப் பாடல்கள் அனைத்தும் கற்பியலுக்கு உரியதாக ஏற்பதில் குறையேதும் இல்லை.

இவ்வதிகாரத்துப் பாடல்கள் தலைமகன், தலைமகள், தோழி என்றிவர்கள் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்தல் எனச் சொல்லி இவர்கள் கூற்றுவழி மொழிவதாக உரையாசிரியர்கள் உரை செய்தனர். ஆனால் தலைவனும் தலைவியும் சொற்கள் இல்லாமல் வெறும் குறிப்புகளினாலே பேசினார்கள் என்று கொண்டால் பாடல்கள் படிப்பதற்கும், படிப்போர் தம் மனத்திரையில் காட்சிகளைக் காண்பதற்கும், சுவையானதாக இருக்கும்.

குறிப்பறிவுறுத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 1271 ஆம்குறள் நீ மறைத்தாலும் அதற்கு உடன்படாது உன்னையும் மீறி உன் மையுண்ட கண்கள் சொல்ல வருவது ஒன்றிருக்கின்றது என்று தலைவன் கூறுவதைச் சொல்கிறது.
  • 1272 ஆம்குறள் கண் நிறைந்த அழகினையும் மூங்கில் போன்ற தோளினையும் உடைய பேதைக்கு, பெண்மை நிறைந்த தன்மை மிகுதி என்று தலைவன் கூறுவதைச் சொல்வது.
  • 1273 ஆம்குறள் பளிங்கு மணி மாலையுள் தோன்றுகின்ற நூல் போல், இப்பெண்ணின் அணியில் இருந்து விளங்குகின்ற ஒரு குறிப்பு உண்டு என்று தலைவன் சொல்வதைக் கூறுவது.
  • 1274 ஆம்குறள் மலரப் போகின்ற மொட்டில் இருக்கும் மணம்போல இப்பெண்ணினது மலரும் சிரிப்பினுள் ஒரு குறிப்பு உண்டு என்று தலைவன் கூறுவதை சொல்கிறது.
  • 1275 ஆம்குறள் அடுக்கிய வளையணிந்தவள் செய்து போன கள்ளக் குறிப்பில் எனக்கு நேர்ந்ததுயரைத் தீர்க்கும் மருந்து ஒன்று உள்ளது எனத் தலைவன் சொல்வதைக் கூறுவது.
  • 1276 ஆம்குறள் மிகுதியான ஆறுதலைச் செய்து மகிழுமாறு கூடுதல், அரிய துன்பத்தைப் பொறுத்து அவரது அன்பின்மையை எண்ணும் தன்மையை உடையது எனத் தலைவி சொல்வதைக் கூறுகிறது.
  • 1277 ஆம்குறள் குளிர்ந்த துறையையுடையவன் நம்மை மனத்தினாற் பிரிந்தமையை, நம்மைவிட முன்னமேயே அறிந்து விட்டன நம் வளையல்கள் என்று தலைவி கூறுவதைச் சொல்கிறது.
  • 1278 ஆம்குறள் எம் காதலர் நேற்றுத்தான் பிரிந்து போயினார்; அதற்குள் ஏழு நாள் அளவு மேனி நிறவேற்றுமை அடைந்து விட்டேன் எனத் தலைவி சொல்வதைக் கூறுவது.
  • 1279 ஆம்குறள் தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி அது அவ்விடத்து அவள் செய்த குறிப்பு எனத் தலைவன் கூறுவதைச் சொல்வது.
  • 1280 ஆவதுகுறள் கண்களினால் காதல் துன்பத்தைச் சொல்லி வேண்டிக்கொள்ளல் பெண்ணினால் பெண்மை உடைத்து என்று சொல்லுவர் எனத் தலைவன் தலைவியைப் பாராட்டுவதைச் சொல்வது.

குறிப்பறிவுறுத்தல் அதிகாரச் சிறப்பியல்புகள்'ஒன்று உண்டு', 'ஒன்று உடைத்து', என்று அவை என்னவென்று சொல்லாமல் பயன்படுத்தப்பட்ட இவ்வதிகாரத்துப் பாடல்களிலுள்ள தொடர்கள் படிப்போர் மனதில் ஆவலைத் தூண்டும் வகையில் உள்ளன.

வெகுநாட்கள் கழித்துத் திரும்பி வந்துள்ள தலைவன் தன் மனைவியைப் பார்த்து அவள் புத்துணர்ச்சியுடனும் புத்தழகுடனும் உள்ளதாக எண்ணுகிறான். கண்நிறைந்த காரிகைக் காம்புஏர்தோள் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது (குறள் 1272) என்று அவளது கண்கொள்ளா அழகையும் பெண்மை நிறைந்த தன்மையையும் உவந்து கூறுகிறான்.

நீண்ட இடைவெளிக்குப் பின் வந்துள்ள தலைவனை நோக்கி மெல்லப் புன்முறுவல் செய்கிறாள் மனைவி. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு (குறள் 1274) என்று அதைத் தலைவன் ஓர் அழகிய உவமையால் விவரிக்கிறான்.

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண்டு அவள் செய்தது (குறள் 1279) என்ற குறள் ஓர் இனிமை பயக்கும் நாடகக் காட்சியாக உள்ளது.

இயல்பாகவே நாண் கொண்ட மனைவி, அனைத்து உரிமையுள்ள கணவனிடம்கூட, வாய்ச்சொற்களால் கூறாது கண்களால் தன் காதல் ஆசைகளை வெளிக்காட்டுவாள் என்பது பெண்களின் உளவியல் அடிப்படையில் சொல்லப்படுவது. இவ்வியல்பு பெண்மைக்குச் சிறப்புச் சேர்ப்பது என்று கூறுவது பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு (குறள் 1280) என்ற பாடல்.
குறள் திறன்-1271 குறள் திறன்-1272 குறள் திறன்-1273 குறள் திறன்-1274 குறள் திறன்-1275
குறள் திறன்-1276 குறள் திறன்-1277 குறள் திறன்-1278 குறள் திறன்-1279 குறள் திறன்-1280