இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0181 குறள் திறன்-0182 குறள் திறன்-0183 குறள் திறன்-0184 குறள் திறன்-0185
குறள் திறன்-0186 குறள் திறன்-0187 குறள் திறன்-0188 குறள் திறன்-0189 குறள் திறன்-0190

புறங் கூறாமை- அஃதாவது, (பிறன்) புறத்தில் (அவனைப் பழித்து) உரையாமை.
- வ உ சிதம்பரம்

ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றி இகழ்ந்து பேசுவது புறங்கூறுதல் ஆகும். தம் கண்முன்னே நேர்மையான உணர்வோடு உண்மையைப் பேசுவது போன்று சொல்லி பின்னால் இழித்துப் பேசுதலை அது குறிக்கும். தன்னலம், கோழைத்தனம், நடிப்பு, ஏமாற்று, வஞ்சகம் போன்றவை புறங்கூறலின் கூறுகள். கடிந்து கூறுவதையும் இன்சொற்களால் கூற வேண்டும் என்று கருதும் வள்ளுவர், பிறர்முன்னிலையில் ஒருவரைப் புகழ்ந்தும் அவர் இல்லாதபோது புறத்தே இகழ்ந்து பேசுவதைப் பெருங்குற்றம் என்கிறார்.

புறங்கூறாமை

புறங்கூறாமையாவது காணாதவிடத்துப் பிறரை இகழ்ந்து உரையாமல் இருத்தல். ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் கூறுதலும் புறங்கூறுதலாம். கோள் சொல்லுதல் என்பது புறங்கூறலின் சிறிது வேறுபட்டது என்றாலும் கோள் சொல்லுதலையும் புறங்கூறலில் அடக்குவர். இட்டுக் கட்டிப் புறம் பேசுதலைக் கோள்மூட்டல், மூட்டல், புறணி, பொரணி பேசுதல், குறளை எனவுங் கூறுவதுண்டு. 'கோள் சொல்லுதலும் புறங்கூறுதலும் நோக்கத்தால் வேறுபட்டன.ஒருவருடைய புகழும் தகுதியும் மறைதற்பொருட்டு திரித்துக் கூறுதல் புறங் கூறுதல். கோள் அவருக்குத் தீமை விளைக்கும் நோக்குடன் அவர் செய்த தவறுகளையும் பிறரிடம் கூறுதல். ஆகவே கோள்-மாறுபாட்டால் விளைவது. புறங்கூறுதல் பெருமையைக் குறைக்கக் கூறுதல்' (தண்டபாணி தேசிகர்).

புறம் என்பது பின்பக்கம்; கூறப்படுபவன் புறத்துள்ளான்; கூறப்படும் இடமும் புறம்; கூறப்படும் செய்தியும் புறம் ஆகும். புறங்கூறுபவன் என்பான் முன் நின்று புகழ்ந்து பேசிப் பின் நின்று பழிகூறும் பகையுள்ளம் கொண்டவன். நேரில் கூறும் நேர்மையும துணிவுமற்றவரே புறங்கூறுவர். தன்னலத்தால், தான் கவரக் கருதிய பொருளை அடைய முடியாத போதும், அவர் செய்யும் முயற்சிகள் பலிக்காதபோதும் ஆக்கமுடைய பிறரைப்பற்றிப் புறங்கூறுவர். ஆற்றாமை காரணமாக பிறரது நற்குணங்களை மறுக்கும் உள்ளத்தால், பழிதூற்றுவர். புறங்கூறுபவர்களைப் புன்சொல் உரைப்பான் எனக் குறள் இகழ்கிறது.
ஒருவரைப் பொய்ம்மையாக வஞ்சக இன்சொல் பேசிப் புகழ்ந்துரைத்து வாழ்வு நடத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கும்பொழுதும், தெளிவு, துணிவு, ஆகிய நற்பண்புகள் இல்லாதபோதும் புறங்கூறல் தோன்றும். ஒருவரின் கருத்தை நேரிடையாகப் பேசி மறுக்கும் திறனும் நெஞ்சுரமும் இல்லாமல், அதே நேரம் தன் கருத்தை மிகைப்படுத்த முனையும்போது புறங்கூறுவர். பிறரைத் தாழ்த்தினால் தன்நிலை உயரும் என்ற பிழையான எண்ணத்தினாலும் புறங்கூறத் தோன்றும்.

புறாங்கூறாது இருத்தலாகிய அறத்தைக் கடைப்பிடிப்பதால் உண்டாகும் நன்மையையும் புறங்கூறுவதன் கொடுமைகளையும், புறம் கூறுகின்றவர்க்கு உண்டாகும் குற்றத்தையும் துன்பத்தையும் கூறி, முடிவில் புறங்கூறுதலை ஒழித்தற்கு வழியும் கூறுகின்றன இத்தொகுதியின் பாடல்கள்.

அறத்திற்குப் புறம்பான வழியில் எழுதுவதையும் புறங்கூறல் வகையில் சேர்ப்பர். மொட்டைக் கடிதங்கள் அதாவது எழுதுவோர் யார் என்று பெயர் தெரிவிக்காமல் இழிவாக எழுதப்படுபவை சிறந்த எடுத்துக்காட்டு.

புறங்கூறாமை அதிகாரப் பாடல்களின் சாரம்:

  • 181 ஆம்குறள் அறத்தை பொருட்படுத்தாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், புறங்கூற மாட்டான் என்று பெயர் பெற்றவனானால் இனியதாகிவிடும் என்கிறது.
  • 182 ஆம்குறள் ஒருவனைக் காணாத இடத்தில் இகழ்ந்துரைத்து, அவனைப் பார்த்த இடத்தில் பொய்யாகச் சிரித்துப் புகழ்தல், அறநெறிகளைப் புறந்தள்ளித் தீயனவற்றைச் செய்தலைவிடத் தீதாகும் எனச் சொல்கிறது.
  • 183 ஆம்குறள் புறம்சொல்லிப் பொய்யாக வாழ்க்கை நடத்துவதிலும் ஒருவன் இறந்துபடுவது அறநூல்கள் சொல்லும் நன்மைகள் தரும் என்கிறது.
  • 184 ஆம்குறள் நேருக்கு நேர் நின்று இரக்கமில்லாமல் இடித்துரைத்தாலும் ஒருவன் புறத்தே இருக்க அவனைப் பின்னர் முகம் நோக்க முடியாத இழிசொற்களைச் சொல்லாது விடுக என்று சொல்கிறது.
  • 185 ஆம்குறள் புறங்கூறும் இழிகுணம் ஒன்றாலேயே ஒருவன் அற எண்ணம் கொண்டவன் அல்லன் என்பது தெரிந்துவிடும் என்கிறது.
  • 186 ஆம்குறள் பிறனைப் பற்றிய பழிகளை ஒருவன் புறத்தே சொல்லும்முன், தன் குற்றங்களும் ஆய்ந்து தேர்ந்து கூறப்படும் என்பதை உணரவேண்டும் எனச் சொல்கிறது.
  • 187 ஆம்குறள் மகிழ்ந்து உரையாடி நட்புக்கொள்வதை அறியாதவரே பிளவு உண்டாகுமாறு புறங்கூறி நண்பர்களைப் பிரிப்பர் எனக் கூறுகிறது.
  • 188 ஆம்குறள் நன்கு பழகியவர் பற்றியும் புறம் பேசும் இயல்பினர், அயலார் இடத்து என்ன செய்வாரோ? என வியக்கிறது.
  • 189 ஆம்குறள் எவரும் இல்லாதவாறு புறத்தே பார்த்து மற்றவரைப் பற்றி பழிச்சொல் சொல்பவனையும் தனக்கு அறமென்று கருதித்தான் இவ்வுலகம் பொறுத்துக் கொள்கிறது போலும் எனக் கூறுகிறது.
  • 190 ஆவதுகுறள் மற்றவர் குற்றத்தைக் காண்பதுபோல் தம் குற்றத்தையும் காண்பாரானால் இவ்வுலகத்து வாழும் மக்களுயிர்க்கு வரக் கூடிய தீமை எதுவும் இருக்குமா? எனக் கேட்கிறது.

புறங்கூறாமை அதிகாரச் சிறப்பியல்புகள்:

புறங்கூற்றினால் பிளவு உண்டாகி ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையில் இருக்கும் நல்லுறவு பகையாக மாறிவிடும். இது போன்ற தீமைகள் விளைவதால், புறங்கூறினாலன்றி உயிர்வாழ இயலாது என்ற நிலைஇருந்தாலும் புறங்கூறாதிருந்து வறுமையால் உயிர்விடுதலே நல்லது என்கிறது இவ்வதிகாரப்பாடல் ஒன்று. புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்அறம்கூறும் ஆக்கம் தரும் (குறள் 183) என்பது அது.

கடிந்து கூறுவதை கூட இன்சொல்லால் கூறவேண்டும் என்பது வள்ளுவர் விரும்புவது. அவரே இரக்கமற்ற சொற்களால்கூட ஒருவர் குற்றத்தை நேருக்குநேர் கடியலாம்; ஆனால் புறத்தே இகழ்ந்து பேசக்கூடாது என்று கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல் (குறள் 183) எனப் புறங்கூறுதலைக் கண்டிக்கிறார்.

புறம் கூறும் இயல்பை ஒழிப்பதற்குரிய வழியையும் அறிவிக்கின்றார் வள்ளுவர். 'முதலில் உன்னிடமுள்ள குறைகளைக் கருத்தூன்றிக் காண்பாயானால், உன்னை நீயே செப்பம் செய்துகொண்டு சீர்பட வாய்ப்புண்டு; அதன்பின் புறங்கூறமாட்டாய்' என ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு என்ற பாடல் மூலமாக அதற்கான வழியைக் கூறுகிறார்.
குறள் திறன்-0181 குறள் திறன்-0182 குறள் திறன்-0183 குறள் திறன்-0184 குறள் திறன்-0185
குறள் திறன்-0186 குறள் திறன்-0187 குறள் திறன்-0188 குறள் திறன்-0189 குறள் திறன்-0190