காலிங்கர் உரை இவ்வதிகாரத்துப் பொருண்மையை நன்கு உணர்த்துகிறது. அவர் 'ஒருவன் ஒன்றை முயலும்போது மனத்தினால் கருதி, வாக்கினால் உரைத்து உடலால் செய்வர். அவற்றுள் அடக்கமுடைமை, வெஃகாமை எனப் பலவாறான மனக்கருத்தின் அறஇயல்பு உணர்த்தி, பின்பு புறங்கூறாமை, இனியவை கூறல் எனப் பலவற்றால் வாய்மொழியின் அறஇயல்பு உணர்த்தி, மற்று இனித் தீவினைஅச்சம், ஒப்புரவறிதல், ஈகை, புகழ் என்பனவற்றால் உடம்புச் செய்தியின் அறத்தியல்பு உணர்த்துவான் எடுத்துக்கொண்டார்; அவற்றுள் முதலில் தீவினைக் குற்றம் அறிவிக்கின்றது' என்ற பொருள்பட மொழிகிறார்.
தண்டபாணி தேசிகர் 'தீவினை செய்தல் மெய்யின் செயலும், அதற்கு அஞ்சுதல் மனத்தின் தொழிலுமாக இருத்தலின் உள்ளம் உள்ளியதையன்றி உடல் நிகழ்த்தாதாதலின் ஒற்றுமை நயம்பற்றி அதன் செயலாகக் கொள்ளினும் இழுக்காது என்க' என இவ்வதிகாரம் பற்றிக் கருத்துரைப்பார்.
தீவினை என்பது மிகக்கொடிய செயலைக் குறிப்பது. தீவினை பழக்கத்தால் செய்யப்படுகிறது. இச்செயலைச் செய்தால் பழி வருமே என்று தெரிந்தும் செய்யப்படுவதும், இச்செயலால் ஏற்படும் தீய விளவுகளைப் புறக்கணித்துச் செய்யும் செயலும் தீவினை என அறியப்படும். தீவினையச்சம் என்பதற்குப் பாவம் என்னும் அளவிற்கான கொடுமையான செயல்கள் புரிய அஞ்சுவது பற்றியது இவ்வதிகாரம் என உரையாளர்கள் கொள்வர். பிறர்க்குத் தீங்கிழைத்தல், பழி பாவங்களுக்கு அஞ்சாது குற்றஞ் செய்தல், களவு, உயிர்க்கொலை போன்ற பெருந்தீமைகள் கொடிய செயல்களாம்.
உலக இயக்கம் உயிர்களின் செயற்பாட்டில் அதாவது வினைசெய்தலில் அமைந்து கிடக்கிறது. தீய செயல் தீமை தரும். தீமையின் பக்கம் ஒருவன் சாயாமல் இருப்பதற்கு அதன்மேல் அச்சம் கொள்ளவேண்டும். நெருப்பினுள் நுழைய அஞ்சுவது போல் தீவினைகள் என்ற பகுதிக்குள் செல்ல அஞ்சவேண்டும்.
அறக்கடவுள் ஒருவனது தீய செயல்களைக் கண்காணித்து உரிய காலத்தில் ஒறுக்கும் என்பது வள்ளுவரது உறுதியான நம்பிக்கை. மு வரதராசன் 'ஊழால் இன்ப துன்பங்களும் அமைகின்றன. புறவாழ்வில் செல்வம் நுகர்வு முதலியவற்றை அமைப்பது போலவே அகவாழ்வில் பிறர்க்கு நன்மை செய்தோர் நன்மை அடையுமாறும் தீமை செய்தோர் தீமை அடையுமாறும் ஊழே அமைகின்றது. அகவாழ்வில் அறத்தைப் போற்றி வளர்க்க உரிமை கொடுத்த ஊழ் அதற்கு ஏற்ப நன்மை தீமை விளையும் முறை பிறழாமல் ஆட்சி புரிந்து வருகின்றது. அதாவது அறநெறி போற்றி வாழ்ந்தால் நன்மை விளையுமாறும், அறநெறி புறக்கணித்து வாழ்ந்தால் தீமை விளையுமாறும் அமைந்திருக்கின்றது. அறத்தைப் போற்றவும் புறக்கணிக்கவும் மக்களுக்கு உரிமை இருக்கின்றதே அல்லாமல் அதனால் விளையும் நன்மை தீமையை மாற்றிவிட உரிமை இல்லை. இந்தக் கருத்தையே திருவள்ளுவர் இவ்வதிகாரக் குறள்களிலும் அறிவித்துள்ளார்' என்பார். .