அன்பு காட்டுவது, விருந்தோம்பல், உதவி செய்வது, நடுநிலையாய்ச் செயல்படுவது, அடக்கம், ஒழுக்கம், பொறை ஆகியவற்றைப் போற்றுவது, பிறனில் விழையாமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனிலசொல்லாமை, தீவினை செய்யாமை போன்ற அறங்களை ஏற்று ஒழுகுதல் ஆகிய பண்புகள் உடையவனுக்குப் புகழ் சேரும்.
புகழுக்குரிய செயல்கள் என்று எண்ணத் தகுந்தவை பல இருப்பினும், இல்லாதவருக்கும் இயலாதவருக்கும் இயல்பாகவே கொடுக்கும் ஈகையே முதன்மையான புகழுக்குரிய செயல் என்று வள்ளுவர் கருதுவார்.
ஈகை ஒன்றுதான் புகழுக்குரியது அல்ல. கல்வி, ஆண்மை, கலைப்பணி, ஆட்சித்திறன், பொருளீட்டல் போன்றவற்றாலும் புகழ் பெற முடியும்.
ஒருவனைச் சுற்றி வாழும் மக்கள் அவனுடைய நற்பண்புகளையும் செயல்களையும் அறிந்து போற்றுவது புகழ் எனப்படும்,
பிறருக்கு நலம் விளைக்கக்கூடியதைச் செய்வதும் தனக்கு இகழ்ச்சி நேராவண்ணம் ஒழுகுவதும் ஒருவனுக்குப் பெயர் பெற்றுத்தரும்.
மனிதன் வாழ்கிறான் என்பதற்கு அடையாளமே நற்குணங்களாலும் நற்செயல்களாலும் நற்பெயர்பெறுதல் ஆகும். புகழ் என்பது நாம் செய்யும் நிலைத்த செயல்களின் விளைவாகத் தாமே நமக்கு வந்து சேருவது.
புகழ் என்பது வாழும் காலத்தும், மறைந்த பின்பும் செயல்களுக்கேற்பச் சில ஆண்டும், பல ஆண்டும், உலகம் உள்ளளவும் எய்தப் பெறுவது.
வறியார் பசிப்பிணி தீர ஈதலே புகழுக்குரியதாக முதன்மை பெறும்; உலகத்தில் புகழ்ந்து சொல்பவர் சொல்வன எல்லாம், இரப்பவர்க்குக் கொடுப்பவர்மேல் நிற்கும் புகழே ஆகும்; தனக்கு இணைசொல்லத்தக்கதாக இல்லாமல் பெறப்பட்ட உயர்ந்த புகழல்லது உலகத்து அழியாமல் இருப்பது பிறிது ஒன்றில்லை;
நாட்டின் மூலை முடுக்கெல்லாம் செல்லும் புகழ் (நிலவரை நீள் புகழ்) என்பது போன்ற பல புகழ்நிலைகள் பேசப்படுகின்றன;
தேவர்களைவிட புகழ்பெற்றவர்களையே வானுலகம் போற்றும்;
நிலையானதான புகழைப் பெற ஒருவன் தனது பொருட் செல்வத்தை இழக்க நேரிடலாம், உயிரையும் இழக்க வேண்டி இருக்கலாம், வித்தகத்தன்மை கொண்டவர்களாலேயே இவற்றையெல்லாம் தாண்டி உயர்புகழை எய்த முடியும்;
தனி மனிதன் புகழ் நோக்கொடு செயலாற்ற வேண்டும்;
புகழ் பெறமாட்டாதார் தம்மீதுதான் வருத்தம் கொள்ளவேண்டும், தம்மை இகழ்வார் மீது வருத்தம் தெரிவிப்பது எதற்கு?;
இசையென்னும் எச்சம் பெறாவிட்டால் உலகத்து எத்தகையோர்க்கும் இகழ்ச்சியாகுமென்று சொல்வர்;
புகழ் மிக்கார் இல்லாத நாடு அதன் வள ஆதாரங்களில் குறைவுபடும்;
விளங்கித் தோன்றாமல் வாழ்வது வாழ்க்கை அல்ல; இவன் வீணாய்ப்போனவன் என்னும் பழி இல்லாமல் வாழ்வதே வாழ்க்கை.
இவை இவ்வதிகாரம் கூறும் செய்திகள்.