இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-1031 குறள் திறன்-1032 குறள் திறன்-1033 குறள் திறன்-1034 குறள் திறன்-1035
குறள் திறன்-1036 குறள் திறன்-1037 குறள் திறன்-1038 குறள் திறன்-1039 குறள் திறன்-1040

வள்ளுவர் கருத்துப்படி பொருளியல் வாழ்வுக்கு அடிப்படையானது உழவு அல்லது வேளாண்மை. வேளாண்மை தழைத்த சமுதாயத்திலே தாம் வாழ்ந்த காரணத்தால் அன்று; என்றும் எத்தொழிலுக்கும் உழவே அடிப்படையாக அமைந்திருப்பதால், அதனை முதன்மைப்படுத்தியுள்ளார். வாழ்க்கைக்கு இன்றியமையாதது, உணவு. உணவைப் படைத்தல் மக்களின் தலையாய பணி. உழுவோர் உலகத்தோர்க்கு ஆணி போன்றவர்கள். பிற தொழில்களைச் செய்வோர்க்கும் உணவினை அவர்களே நல்கின்றமையின், உலகம் உழுவாரைச் சார்ந்தே நிற்கின்றது.
- பா நடராஜன்

நிலத்தில் உழுது பாடுபடும் தொழிலைப் போற்றுவது உழவு அதிகாரம். குறளில் ஒரு தொழிலுக்காக ஓர் அதிகாரம் படைக்கப்பட்டது உழவு ஒன்றுக்குத்தான்.
உழவு இல்லையேல் உணவு இல்லை. மாந்தர்க்குப் பசி இருக்குமட்டும் உழவு இருக்கும். உலகுக்கு உணவு வழங்கும் பயிர்த்தொழிலின் சிறப்பு பற்றி இங்கு பேசுகிறார் வள்ளுவர். உழுவோரின் பெருமை, உழவுத்தொழிலின் நுட்பங்கள், அது செய்யாது உண்டாகும் குறைகள் ஆகியன வகுத்துக் கூறப்பட்டுள்ளன. இத்தொகுப்பில் உலகோர் உழவை முன்னிறுத்தியே வாழ்கின்றனர் எனும் கருத்து அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. எந்த ஒரு தொழில் இல்லாது போனாலும் உழவுத் தொழில் செய்து வளம் கொழிக்க வாழலாம் என்பதை நிலத்தின் சிரிப்போடு வள்ளுவர் இவ்வதிகாரத்து குறள் ஒன்றில் நயம்படக் கூறுகின்றார்.

உழவு

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால் (வான் சிறப்பு 14) எனப் பாயிரத்திலேயே உழுதொழில் ஏரினால் நடைபெறுவது என்பதும் அத்தொழில் செய்பவர் 'உழவர்' என்பதும் எடுத்துக் காட்டப்பட்டன. நாட்டிற்கு இன்றியமையாது வேண்டும் மாந்தர் யாவர் என்பதை வரையறுக்கும் பாடலான தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு (நாடு 731) என்பதில் குறைவுபடாத நிறைந்த விளைச்சலை ஆக்கும் உழவர்க்கு முதன்மை நிலை தந்துள்ளமை ஏர்த்தொழில்புரிவார்தம் சிறப்பினை உணர்த்தும்.
நெடுங்காலமாக உழவு ஒன்றே மிகப்பெரும்பாலோரின் தொழிலாக இருந்து வந்திருக்கிறது, இன்றும் பெரும்பாலோரின் தொழில் அதுவே. நிலத்திலிருந்து விளையும் கூலமே உலகத்தினருக்கு முதன்மையான உணவாக உள்ளது. ஆகவே அதை உண்டாக்கும் உழவுத்தொழில் சிறந்த தொழிலாகப் போற்றப்படுகிறது. வையத்தில் ஏழ்மையே இல்லாது அகல வேண்டுமெனில் நிலத்தை உழுது பயிரிட்டு வேளாண்மை செய்வதாலேயே முடியும்.
நிலத்தைத் தன் காதலிபோல எண்ணிப் பேணவேண்டும் என்று உழவர்களுக்கு அறிவுரை தருகின்றார் வள்ளுவர்.

பொருளியல் வாழ்வுக்கு அடிப்படை உணவு விளைவித்தலே என்பது இவ்வதிகாரத்தில் சுட்டிக் காட்டப்படுகிறது. என்றும் எத்தொழிலுக்கும் உழவே அடிப்படையாக அமைந்திருப்பதால், அதனைக் குறள் முதன்மைப்படுத்தப்படுகிறது. 'இந்த நவீன காலத்திலும் கூட ஏனைய தொழில்களைவிட இது தனித்த மதிப்புள்ளதாக இருக்கிறது. உழவுதான் ஒரு நாட்டின் முதுகெலும்பு' என்பார் தெ பொ மீனாட்சிசுந்தரம். உழவின் இன்றியமையாமையையும் பயன்களையும் கருதி வள்ளுவர் உழவரையும் உழவுத் தொழிலையும் பெருமைக்குரியனவாய் உரைக்கிறார்.

தமக்குரிய நிலத்தைத் தாமே உழுது பயிரிட்டு உண்டு வாழ்பவர் உழுதுண்பார் எனப்படுவர். இவர்களையும் பிறர் நிலத்தைக் குத்தகைக்கோ, வாரத்துக்கோ, கூலிக்கோ பிடித்து உழுபவர்களையும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்று பொதுப்படக்கூறி ஒரே வகையில் அடக்குவர்.
உழவுத் தொழிலைச் செய்விப்போர் 'உழுவித்து உண்போர் எனப்பட்டனர். உழுவித்துண்போர் நிலத்தலைவர்கள். உழவர்களைச் சிறப்பித்துக் கூறியபோது .வள்ளுவர் பெரும்பாலும் முதல் பிரிவினராகிய உழுதுண்பாரையே உளத்திற் கொண்டார் எனத் தோன்றும்.

உழவுக்கென ஒரு பாடல்தொகுதியை உண்டாக்கி எதற்கும் இல்லாததொரு தனிப்பெருஞ் சிறப்பினை இதற்குத் தந்துள்ளார் வள்ளுவர். உழவுத் தொழில் அளவுக்கு வேறு எந்த ஒரு தொழிலையும் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றவில்லை அவர். உழவுத்தொழிலுக்கு வள்ளுவர் ஏன் இத்துணைச் சிறப்புத் தருகிறார்? .........சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (பெருமை 972) என்பதில் 'உயிர்களின் செயல் வேற்றுமையால் சிறப்புநிலைகள் வேறுபடும்' எனக் குறள் கூறும். உழவுத்தொழில் சிறப்பில் உயர்ந்தது என்று வள்ளுவர் கருதுகிறார்.
உழைப்பைப் பொதுவாக அறிவுழைப்பு, உடலுழைப்பு என இருவகையாகப் பகுக்கலாம். இவற்றில் இரண்டாவதான உடலுழைப்பு குறைத்தே மதிப்பிடப்படுகிறது. அதனால் உடலுழைப்பு மிகத் தேவைப்படும் உழவுத்தொழில் எக்காலத்திலும் எல்லா நாட்டினராலும் புறக்கணிக்கப்பட்டதாகவே உள்ளது. மனுதர்மம், அர்த்தசாஸ்திரம் போன்ற நூல்கள் உழவை ஒரு தாழ்ந்த தொழிலாகவே கருதுகின்றன. அவ்வாறே, வேளாண்மையானது இரும்புத் தரத்திரனருக்கு உரியது என்று பிளேட்டோ, அடிமைகள் தாம் இத்தொழில் செய்தற்கு உரியவர்கள் என்று அரிஸ்டாட்டில், அறிவுத் திறன் குறைந்தவருக்கு உரியது உழவு எனக் கேம்ப்ப நெல்லா போன்ற மேற்குநாட்டு நூலார்களும் கூறினர். பொதுவாகக் கடினமான உழைப்பு போன்றவற்றைக் கீழ் மக்களின் பண்பாகவே காட்டுவர். திறமையில் குறைந்தவர்கள் உழவுத் தொழிலை மேற்கொள்கிறார்கள் என்ற கருத்து உருவாக்கப்பட்டிருந்தது. இன்றும் உடலுழைப்புக்கு உலகம் உரிய இடம் தருவதில்லை. ஆனால் வள்ளுவரோ அந்தக் காலத்திலேயே உடல் உழைப்பை உயர்த்திப் பிடித்து உழவை மேன்மையாகப் பேசுகிறார். உழுது உண்ணும் உடல் உழைப்பாளிகளைத்தான் மிகுதியாகப் பேசினார் என்பதை, 'உழந்தும்', 'கைசெய்து ஊண் மாலையவர்' (கையால் உழுதொழில் செய்து, உண்பதை இயல்பாகக் கொண்டவர்), 'உழவினார் கைமடங்கின்' (உழவரின் கைகள், உழுதொழில் செய்யாவிட்டால்) போன்ற சொல்லாட்சிகள் தெளிவுபடுத்துகின்றன. குளிரூட்டப்பட்ட அறைகொண்ட எந்திரக் கலைப்பை (AC Cabin Tractor) போன்ற வசதிகள் வந்தபின்னும் உழவுத்தொழில் கடினமானதுதான்.
'உண்டி முதற்றே உலகு'. மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது உணவு. உணவுப் பொருள் விளைச்சல் பெருகவில்லையானால், நாட்டிலே பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும். உணவுப்பொருளைப் பெருக்கவேண்டுமென்றால் உழவுத் தொழில் சிறக்க வேண்டும். மெய்வருந்தி உழைக்கும் தொழிலென்பதால் அதனைச் செய்யமாட்டாது மாந்தர் பிறதொழில்கள் மேற்செல்கின்றனர். அவர்களை அங்கு செல்லவிடாமல் தடுத்து உழவுத்தொழிலுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். இன்னபிற காரணங்களுக்காக உழவை மிக உயர்வாகப் பேசுகிறார் வள்ளுவர்.

எந்தத் தொழிலைச் செய்து உழன்றாலும் ஏரின்வழியிலே உலகம் உள்ளது. ஆதலால் வருந்தினாலும் ஏர்த்தொழிலே தொழில்; வேறு தொழில்கள் செய்வார்கள் யாவரையும் தாங்குதலால் உழுபவர்கள் உலகத்திற்கு ஆணிபோல்வார்; உழுது உண்டு வாழ்பவர்களே உரிமை வாழ்வுடையார்கள். மற்றவர்கள் ஏவல் செய்பவர்கள்; நெற்கதிர் உடையராய உழவர்கள் பிற துறையினர் தம்மை நாடிவரச்செய்வர்; உழுது உண்டு வாழ்பவர்கள் இரக்க மாட்டார்கள். தம்மிடம் இரப்பவர்களுக்கு உணவளிப்பர்; உழவர்கள்‌ தமது தொழிலைச்‌ செய்யாவிட்டால்‌, யாவரும்‌ விரும்பும்‌ உணவும்‌ இல்லை. ஏருழுதல், எருவிடுதல், களைகட்டல், நீர் பாய்ச்சுதல், காத்தல் என்னும் ஐந்து உழவுத் தொழில் முறைகளாக தொகுத்து உரைக்கப்பட்டுள்ளது; உழவன் நிலத்தைத் தினஞ்சென்று பாராமலிருந்துவிடின் காதலிபோல நிலமும் ஊடிவிடும்; தம்மிடம் ஒன்றுமில்லை என்று சோம்பியிருப்பாரைக் கண்டால் நிலப்பெண் ஏளனம் செய்வாள். இவை இவ்வதிகாரப் பாடல்கள் தரும் செய்திகள்.

உழவு அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 1031ஆம் குறள் எத்தொழிலைச் செய்து சுழன்றுவந்தாலும் உலகோர் உழவுத்தொழிலின் பின்னேதான் ஆதலால் துயறுற்றாலும் உழவே தலைசிறந்ததாம் என்கிறது.
  • 1032ஆம் குறள் உழவுத் தொழிலைச் செய்யாது பிற தொழில்மேல் செல்வாரையும் தாங்குதலால், உழவர் உலகத்தார்க்கு ஆணி போன்றவர் என்று சொல்கிறது.
  • 1033ஆம் குறள் உழுது பயிர்செய்து உண்டு வாழ்கின்றவர்களே சிறப்பாக வாழ்வார் ஆவர்; மற்றைய எல்லாரும் பிறரை வணங்கி உணவுகொண்டு அவர் பின்னே செல்வார் ஆவர் என்கிறது.
  • 1034ஆம் குறள் நெற்கதிரின் நிழலில் வாழும் உழவர்கள் பல்வேறு துறையிலும் ஆட்சி செய்கின்றவர்களைத் தம்முடைய குடை நிழலை நாடி வரச் செய்கின்றவர்கள் எனச் சொல்கிறது.
  • 1035ஆம் குறள் தம் கையால் உழவுத் தொழிலைச் செய்து உண்டலை இயல்பாகவுடையார் பிறரிடம் சென்று இரவார்; இரப்பவர்க்கு ஒளியாமல் பொருள் கொடுப்பார்கள் எனச் சொல்கிறது.
  • 1036ஆம் குறள் உழுதொழிலைச் செய்வார் கைகளை மடக்கிக்கொண்டு இருப்பரேல் விரும்பத்தகுவது விட்டொழிந்தோம் என்று கூறுவார்க்கும் அந்நிலைக்கண்ணே நிற்றல் இயலாது என்கிறது.
  • 1037ஆம் குறள் ஒரு பங்குப் புழுதியைக் காற்பங்காகக் காயவிடின் பிடியளவு எரு இல்லாமலும் மிகுதியாக விளையும் என்கிறது.
  • 1038ஆம் குறள் உழுதலினும் எரு இடுதல் நல்லது; களையெடுத்த பின்னர் நீர் விடுதலினும் அதனைக் காத்தல் நல்லது எனச் சொல்கிறது.
  • 1039ஆம் குறள் நிலத்திற்குரியவன் உரிய காலங்களில் சென்று நிலத்தை பாராது இருப்பானானால் அது மனைவிபோலப் பிணங்கி வாடும் என்கிறது.
  • 1040ஆம் குறள் தம்மிடம் ஒன்றுமில்லை எனத் தொழில் ஏதும் செய்யாமல் சோம்பியிருப்பாரைக் கண்டால் நிலம் என்னும் நல்லாள் சிரிக்கும் என்கிறது.

உழவு அதிகாரச் சிறப்பியல்புகள்

உழவுத் தொழில் பற்றிப் பேசும்பொழுது 'பிசியோகிரட்டர் (Physiorats)' பற்றியும் அறிந்து கொள்வது நலம் பயக்கும் - இவர்களது கோட்பாடுகள் வள்ளுவர் உழவு அதிகாரத்தில் உரைக்கும் குறட்கருத்துக்களுக்கு மிக அணுக்கமாக உள்ளன என்பதால்.
பிசியோகிரட்டர் எனப்படும் பொருளியலார் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் இருந்தனர். இவர்கள் 'உழவே யாவற்றுக்கும் அடிப்படையான பொருள்களைத் தருகின்றது; உழவர்களே பொருள் படைக்கும் மக்கள்; ஏனைய வணிகர்கள், கொல்லர்கள், தச்சர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பயனுடைய உற்பத்தி செய்யாதவர்களே' எனக் கூறிவந்தனர்.
உற்பத்தி செய்யாததால், பிற வகுப்பு மக்களாலேயே வேலைக்கு அமர்த்தப்பட்டு, பேணப்பட்டு வருகின்றனர். பிறவகுப்பினர் இரு வகைப்படுவர்- உழவர்கள், நில உடைமையாளர்கள். பிற மக்களுக்கு உழவர்கள் உணவு உற்பத்தி செய்து தருகின்றனர். அவற்றை அவர்கள் உண்டு, உழவருக்கு வேண்டும் பணி ஆற்றுகின்றனர். அவ்வாறே தச்சர், கொல்லர் முதலானோரும் உடைமையாளர்களிடமிருந்து மூலப் பொருள்களும் பணமும் பெற்றுப் பண்டங்களைச் செய்து உடைமையாளர்களிடமே தருகின்றனர். உடைமையாளர்களும் உழவர்களும் இறுதியில் அம்மக்களுக்கு ஊதியம் நல்குகின்றனர்.
பிசியோகிரட்டரின் மேற்கொண்ட கொள்கையை உறுதிப்படுத்துவதுபோல், வள்ளுவர் ஒன்றுக்கு மேற்பட்ட குறள்களை எடுத்தோதுகின்றார். சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழன்றும் உழவே தலை (1031), உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து (1032). உழவு தவிர்த்த பிற தொழில்கள் யாவும், உழவுக்குப் பிற்பட்டவை என்று கருதுமிடத்து பிசியோகிரட்டரின் கொள்கையை வள்ளுவர் முந்து கண்டவர் போலத் தோன்றுகிறார்.
அடுத்த குறள் வள்ளுவருக்குப் பதினெட்டு நூற்றாண்டுகளுக்குப் பின்வந்த பிசியோகிரேட்டரின் கொள்கைக்கு அடியெடுத்துக் கொடுத்தது போலவே உள்ளது. அக்குறள் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்று எல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். (1033) என்பது. உழவு நீங்கிய பிற தொழில்களில் ஈடுபட்டவர்களையெல்லாம் இருவரும் பணியாள்கள் என்றே வழங்குகின்றனர். ஆனால், ஆழ்ந்து நோக்குங்கால், இருவர் கருத்துகளும் வேறு வேறான அடிப்படை கொண்டன. பிசியோகிரட்டர், வேளாண்மை மட்டுமே படைப்புத்தொழில்; பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள கொல்லர், தச்சர், வணிகர் முதலானோர் எத்தகைய படைப்புப் பொருளையும் தராமையால் கூலி பெறும் பணியாள்களே என்றுரைத்தனர். ஆனால் வள்ளுவர், உழவர் நீங்கிய பிற தொழிலாளர்களைப் 'பின் செல்பவர்' என்றுரைத்து உழவர்க்கு அடுத்தபடியாக வைத்தபோதிலும், பிசியோகிரட்டர் கூறிய முறையில் பொருள் படைக்காதவர் என்று கொள்ளவில்லை. வள்ளுவர் கூறுவனவெல்லாம், உணவைத் தருதலால் உழவு தலைசிறந்தது; எனவே, அது பிற தொழில்களினின்றும் மேம்பட்டு விளங்குகின்றது என்பதே. பிற தொழில்களெல்லாம் கீழ்ப்பட்டவை என்றது, ஏனைய எல்லாத் தொழிலாளர்களும் உணவுக்கு உழவர்களையே நம்பி நிற்பதால்தான். எனவே, உழவர் தனியுரிமை பெற்றவர். பிற தொழிலாளர் அவரைச் சார்ந்தே நிற்பர் (பா நடராஜன்).




குறள் திறன்-1031 குறள் திறன்-1032 குறள் திறன்-1033 குறள் திறன்-1034 குறள் திறன்-1035
குறள் திறன்-1036 குறள் திறன்-1037 குறள் திறன்-1038 குறள் திறன்-1039 குறள் திறன்-1040