இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0681 குறள் திறன்-0682 குறள் திறன்-0683 குறள் திறன்-0684 குறள் திறன்-0685
குறள் திறன்-0686 குறள் திறன்-0687 குறள் திறன்-0688 குறள் திறன்-0689 குறள் திறன்-0690

இருவருக்கிடையே நட்பை ஏற்படுத்தி வளர்க்கும் பணியில் ஈடுபடுதல். பழகியவர்களிடையே பிணக்குகள் ஏற்பட்டால் இடையில் இருந்து பேசி இணக்கம் ஏற்படுத்துதல். பகைமை கொண்டவர்களுக்கிடையில் பேசிச் சமாதானம் செய்து வைத்தல், கூட்டின் காரணமாக வலிமை கூடிப் போர் விளைவிப்போரை ஒருவரிடமிருந்து பிரித்தல் முதலியன தூதுவரின் கடமைகள். இத்தகைய தூது பண்டு அரசர்களுக்கிடையில் மட்டுமே நிகழ்ந்ததால் அரசியல் சார்பான பணி, தூது என்று கருதப் பெற்றது. குடும்ப வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் கூடத் தூது தவிர்க்க இயலாதது.
- குன்றக்குடி அடிகளார்

தூது என்பது இரண்டு நாடுகளுக்குமுள்ள உறவுகள் தொடர்பாகச் செய்தியனுப்புதலைக் குறிப்பது. இது அரசாட்சியில் ஒரு இன்றியமையாத அங்கம். தூதுவர் அமைச்சர்க்கு இணையாக மதிக்கப்படுபவர். அவர்க்கு உண்டான பண்புகளும் தகுதிகளும் செயல்திறன்களும் இந்த அதிகாரத்தில் கூறப்படுகின்றன.
பிற நாட்டு அரசரிடம் வெளிப்படையாய்ச் சென்று தன் நாட்டு அரசரின் செய்தியைச் சொல்வதும், அந்த நாட்டில் உள்ள நிலையை அறிந்துவந்து தம் நாட்டவரிடம் உரைப்பதும் தூதுவனின் கடமையாகும். சில வேளைகளில் அரசுப் பணியில் இல்லாத முனிவர்களும் புலவர்களும் தூது சென்றிருக்கிறார்கள். ஓளவையார் அதியமான் பொருட்டுத் தொண்டைமானிடம் தூது சென்றது நாம் அறிந்த ஒன்று; அக்காலத்திலேயே ஒரு பெண்பாற் புலவர் வெற்றிகரமாகத் தூதுச் செயலாற்றினார் என்பது எண்ணி மகிழத்தக்கது.

தூது

அரசுகளுக்கிடையே கருத்து வேற்றுமை நேர்ந்தபோது ஒருவர் எண்ணத்தை மற்றொருவருக்கு தூதுவர் மூலம் வெளிப்படுத்துவர். தூது என்னும் சொல் தூதுச் செய்தியையும் அதனை உரைப்பாரையுங் குறிக்கும். வகுத்துரைப்பார், கூறியது கூறுவார் (வழியுரைப்பார்) எனத்தூதர் இருவகைப்படுவர். வேற்று நாட்டவர் கேள்விகளுக்கெல்லாம் விடையிறுக்கும் அறிவாற்றலும் உரிமையும் பெற்றவர் வகுத்துரைப்பார். அவ்வாறன்றி வறிதே சொல்லிவிடுத்த செய்தியை மட்டும் சொல்பவர் கூறியது கூறுவார்; தன் அரசு சொல்வதைக் கூட்டாமல் குறைக்காமல் மாற்றாமல் மறைக்காமல் கூறியது கூறியவாறே கூற வேண்டியவர் இவர்; தனது தனித்த எண்ணம் சொல் ஆகியன கொண்டு உரைக்க இயலாதவர். முதல் இரண்டு பாடல்களும் இருவகைத் தூதர்களுக்கும் பொதுவான இலக்கணம் கூறுகின்றன. மூன்று முதல் ஏழு பாடல்கள் வரை முதல்வகைத் துதுவனாகிய 'தான் வகுத்துக் கூறுவான்' என்பவன் இலக்கணத்தையும் கடைசி மூன்று பாடல்களும் 'கூறியது கூறுவான்' இலக்கணத்தையும் விளக்குகின்றன என்பர்.
உயிர்ப்பாதுகாப்பு அற்ற சூழலில் பணிசெய்பவர் தூதர். தூதுவர் தம் பணிக்காகவும் நாட்டுக்காகவும் உயிர் இழக்கவும் தயங்குதல் கூடாது என்று இவ்வதிகாரத்துக் குறள் ஒன்று கூறுகிறது.
வகுத்துக் கூறுவானுக்குச் சொல்வன்மையும் கூறியது கூறுவானுக்கு அச்சமின்மையும் தேவை எனச் சொல்கிறது அதிகாரப் பாடல்கள்.

ஒற்றாடல், படை போன்று ஒரு நாட்டின் ஆட்சிக்குத் தவிர்க்கமுடியாத உறுப்பாகும் தூது. ஒரு நாடு, மற்றொரு நாட்டில் மதிப்புமிக்கதாய்க் கருதப்படுவதற்கும் இரண்டு நாடுகளிடையே நட்புமனப்பான்மை வளர்வதற்கும் தூதர்களின் பங்கு முக்கியமானது.
வேற்று நாட்டவசரிடம் செல்பவன் ஆதலால் தூதனுக்குச் சிறந்த பல தன்மைகள் இருத்தல் வேண்டும் என்கிறார் வள்ளுவர். நாட்டுப்பற்று, நல்ல குடும்பப் பின்னணி, அரசுவிரும்பும் பண்புகள் உடையவனாயிருத்தல், தொழிலில் ஈடுபாடு, ஆராய்ந்த அறிவு, சொல்வன்மை, நூல்கள் கற்றார்முன் தான் அவர்களிலும் வல்லோனாய் இருத்தலாகுதல், இயற்கை அறிவு, தோற்றப் பொலிவு, ஆராய்ச்சியில் தேர்ந்த கல்வி இவை வகுத்துக் கூறுவானுக்கு இருக்கவேண்டிய பண்புகள்; மேலும் அவன் தொகுத்துச் சொல்லி, பயன்படாதவற்றை விலக்கி, சிரிக்கப்பேசி நன்மையை உண்டு பண்ணுபவனாக இருக்க வேண்டும்; செய்தியை நுணுகி ஆராய்ந்து, துணிவாண்மையுடன் அஞ்சாது, உளங்கொள்ளுமாறு சொல்லி, சமயத்துக்கு ஏற்றவாறு நடந்து கொள்வான் இவன்; சொல்லும் முறைமை தெரிந்து, காலம் பார்த்து, சொல்லுதற்குரிய இடம் அறிந்து, எண்ணிப் பார்த்துச் சொல்வான் இந்தத் தூதன்.
கூறியது கூறும் தூதனுக்குத் தூய்மை, தான் நாட்டுக்குத் துணையாந் தன்மை, துணிவுடைமை ஆகிய இம்மூன்றும் வாய்த்திருத்தல் வேண்டும்; இவன் சொல்லி விடுத்த செய்தியை தன் அரசுக்குக் குற்றம் உண்டாகும்படி வாய்தவறியும் மாற்றுரை சொல்லாத உறுதியை உடையவனாயிருப்பான்; தன் உயிர்க்கு இறுதி பயக்குமாயினும் சொல்லிவிட்டவைகளில் ஒன்றையும் விடாமல், தன் அரசுக்கு உறுதி தருவதாய் உரைப்பவன் இவன்.

தூது அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 681ஆம் குறள் நாட்டுப் பற்றுடைமை நல்ல குடும்பத்தில் பிறந்திருத்தல் ஆள்வோர் விரும்பும் மரபு உடையனுமாய் இருத்தல் தூதுவனுக்கு உரிய இயல்புகள் என்கிறது.
  • 682ஆம் குறள் தூது செயலில் காதலுடைமை, பேசப் போகிற பொருளில் அறிவுடைமை. ஆராய்ந்து சொல்லும் சொல்லாற்றல் மூன்றும் தூதுவர்க்கு இன்றியமையாதவை எனக் கூறுகிறது.
  • 683ஆம் குறள் பல நூல்களைக் கற்றார்முன் தான் மிக்க வல்லோனாய் இருத்தலாகுதல் பகைவர்முன் தம் நாட்டுக்கு வெற்றி தரும் செயலைச் சொல்வான் இயல்பு என்பதைச் சொல்கிறது.
  • 684ஆம் குறள் இயற்கை அறிவு, தோற்றப் பொலிவு, ஆராய்ச்சியில் தேர்ந்த கல்வி என்னும் இம்மூன்றினது அடக்கமுடையவன் தூது தொழிலுக்குச் செல்லட்டும் என்கிறது.
  • 685ஆம் குறள் தொகுத்துச் சொல்லி, பயன்படாதவற்றை விலக்கி, சிரிக்கப்பேசி நன்மையை உண்டு பண்ணுபவன் தூதனாவான் என்பதைத் தெரிவிக்கிறது.
  • 686ஆம் குறள் செய்தியை நுணுகி ஆராய்ந்து, துணிவாண்மையுடன் அஞ்சாது, உளங்கொள்ளுமாறு சொல்லி, சமயத்துக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளத் தெரிந்தவனே தூதன் என்கிறது.
  • 687ஆம் குறள் சொல்லும் முறைமை தெரிந்து, காலம் பார்த்து, சொல்லுதற்குரிய இடம் அறிந்து, எண்ணிப் பார்த்துச் சொல்பவனே சிறந்த தூதன் எனச் சொல்கிறது.
  • 688ஆம் குறள் தூய்மை, தான் நாட்டுக்குத் துணையாந் தன்மை, துணிவுடைமை ஆகிய இம்மூன்றும் வாய்த்திருத்தல், கூறியது கூறும் தூதனின் இயல்பாகும் என்கிறது.
  • 689ஆம் குறள் சொல்லி விடுத்த செய்தியை வேற்று அரசுக்குச் உரைப்பவன் தன் அரசுக்குக் குற்றம் உண்டாகும்படி வாய்தவறியும் மாற்றுரை சொல்லாத உறுதியை உடையவனாவான் எனக் கூறுகிறது.
  • 690ஆவது குறள் தன் உயிர்க்கு இறுதி பயக்குமாயினும் சொல்லிவிட்டவைகளில் ஒன்றையும் விடாமல், தன் அரசுக்கு உறுதி தருவதாய் உரைப்பவன் தூதனாவான் என்கிறது.

தூது அதிகாரச் சிறப்பியல்புகள்

பல தூதுச் செய்திகளை ஒவ்வொன்றாகச் சொல்வதால் கேட்பவர்க்கு விரைவில் அயர்வு உண்டாகும்; செய்திக்குண்டான பயன் கிடைக்காது. எனவே அவற்றைத் தொகுத்துக் கூறினால் செய்திக்குரியவர் இசைவர். மேலும் கேட்பவரது மனநிலை அறிந்து நகைச்சுவைபட உரையாடித் தெரிவித்தால் நன்மை உண்டாகும். இந்த உத்தியை தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது (685) என்ற பாடல் கூறுகிறது.

பிறநாட்டில் சென்று முறைதவறிப் பேசுதல் பிணக்கை இன்னும் மிகுவிக்கும். விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வன்க ணவன் (689) என்ற பாடல் அச்சத்தினாலோ பிற காரணங்களினாலோ வாய்தவறி குற்றமான சொற்களையோ தாழ்வான மொழிகளையோ உரைக்காத சொற்காப்பு தூதனிடத்தில் இருக்க வேண்டும் எனக் கூறுகிறது.

தூதனானவன் சொல்லிவிடப்பட்டதை முழுவதுமாக உரைத்துப் பதில் பெற்றுத் திரும்பவேண்டும்; தன் உயிர்க்கு முடிவு நேரிட்டாலும் தூதை முற்ற உரைத்துவிட்டு இறுதியை எய்த வேண்டும் என்பதை இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது. (690) என்ற குறள் தெரிவிக்கிறது.




குறள் திறன்-0681 குறள் திறன்-0682 குறள் திறன்-0683 குறள் திறன்-0684 குறள் திறன்-0685
குறள் திறன்-0686 குறள் திறன்-0687 குறள் திறன்-0688 குறள் திறன்-0689 குறள் திறன்-0690